உங்களது பணம், விரயம் செய்யப்படும் முறை இப்படித்தான்..!

Share it:
ad

ஜனவரியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்  பல கோடி ரூபா பொது நிதியை ஏப்பமிடவுள்ளது. அத்துடன் திறைசேரியின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் அரசாங்கத்தின் செலவினத்தையும் அதிகரிக்க வைத்திருக்கிறது. 

தேர்தல் திணைக்களத்திற்கு தேர்தலை நடத்துவதற்கு  250 கோடி ரூபா (  2.5 பில் .) செலவாகுமென மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சுகள் மற்றும் அவற்றுடன் இணைந்த நிறுவனங்களின் மறைமுக செலவினம் உட்பட ஜனாதிபதி ராஜபக்ஷவின் செலவினம் என்பனவற்றுடன் சேர்த்து  2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செலவினம் சுமார்  1050 கோடி ரூபாவாக ( 10.5 பில்லியன் ரூபா )  அதிகரிக்குமென திறைசேரியின் பூர்வாங்க மதிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன. 

அலரிமாளிகையில்  15 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளினதும் ஏனைய சிவில் சமூகக் குழுக்களினதும்  சந்திப்புகளுக்கு சுமார்  7 1/2 கோடி ரூபா ( 750 மில். ரூபா ) செலவிடப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 தேர்தலுக்கான இந்தப் பாரிய செலவினமானது அடுத்தாண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியப்பாடுகளை மோசமாகப் பாதிக்குமென பொருளியல் ஆய்வாளர்  ஒருவர் தெரிவித்திருப்பதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை ஞாயிற்றுக்கிமை குறிப்பிட்டுள்ளது.  தேர்தல் பிரசாரத்திற்காக செலவிடப்படும் பணம் நாட்டிற்கு இழப்பேயென்றும் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தவொரு பொருளாதார ரீதியான  அனுகூலங்களையும் இது பெற்றுத் தரப் போவதில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  இதேவேளை 1 கோடியே 60 இலட்சம்  (  16 மில். ) வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய தேர்தல் தொடர்பான ஆவணங்களை அச்சிடுவதற்கு  25 கோடி ரூபாவை ( 250 மில். ரூபா )  வழங்குமாறு அரசாங்க அச்சகம் திறைசேரியை கோரியுள்ளது. 

 தேர்தலுக்கு குறைந்தது இரு வாரங்களுக்கு முன்பாக வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அவற்றை அச்சிடும் போது மின்சாரத் தடை ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக மின்பிறப்பாக்கியை கொள்வனவு செய்ய மேலதிகமாக  15 இலட்சம் ரூபா ( 1.5 மில். ) தேவைப்படுகிறது என்று அரசாங்க அச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

 வாக்கு மோசடி இடம்பெறாமலிருப்பதற்காக சகல வாக்குச் சீட்டும் விசேட பாதுகாப்புக் குறியீட்டை கொண்டிருக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர்  அழுத்தியுரைத்திருக்கிறார். பொலிஸ் பாதுகாப்புக்கு அப்பால் சி.சி.ரி.வி. கமரா கட்டமைப்புகளை   அச்சிடும் பணியின் போது கண்காணிப்பதற்கு பொருத்த வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Share it:

Post A Comment:

0 comments: