முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய பொறுப்பிருக்கிறது - அப்துர் ரஹ்மான்

Share it:
ad
"நல்லாட்சியை ஏற்படுத்துவதில் ஏனைய சமூகங்களை விடவும் அதிக பங்களிப்பினைச் செய்ய வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கே இருக்கிறது"- ஏறாவூரில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

"இந்நாட்டில் சகல மக்களும் சுபீட்சமாக வாழக்கூடிய நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் ஏனைய சமூகங்களை விடவும் முஸ்லிம் சமூகமே கூடுதல் பங்களிப்பை செய்ய வேண்டும்." என நல்லாட்கிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து ஏறாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அப்துர் ரஹ்மான்இவ்வாறு தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளர் அல்ஹாஜ் முஹம்மது கியாஸ் அவர்களின் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றும் போது அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது..

'இந்நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அத்தனை பேரும் உணரத் தொடங்கியுள்ளனர். யுத்தத்தின் பின்னர் இந்நாடு ஆட்சி செய்யப்படுகின்ற முறைமையும், அதிலிருக்கும் பாரதூரமான முறைகேடுகளுமே இவ்வாறு மக்களை சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.

பயங்கரவாத காலத்தில் இல்லாத அளவு சட்டமும் ஒழுங்கும் சீர் குலைந்திருக்கிறது. சிறுபாண்மை மக்களின் மத உரிமைகள் அப்பட்டமாக மீறப்ப்பட்டு வருகின்றது. நமது கலாசார தனித்துவங்கள் அச்சுறுத்தப்படுகிறன. ஊழல், மோசடி, வீண்விரயம் என்பன உச்சத்தில் இருக்கின்றன. இதன் காரணமாக இந்நாடும் நாட்டு மக்களும் அதிகரித்த பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர். பொதுச் சொத்துக்களைத் திருடுவதும் வீண் விரயம் செய்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டிருக்கிறது. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நெருக்கமானவர்கள் எதையும் செய்துவிட்டுத் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் குலைந்திருக்கின்றது. பொதுமக்களின் ஜனநாயக விருப்பு வெறுப்புகளுக்கு எந்த மரியாதையும் இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலை தொடருமாயின் இந்நாடு மீளமுடியாத அபாயத்தில் சிக்கிவிடும் என்பதனைஇன்று எல்லோரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த அடிப்படையிலேயே இந்த நாட்டில் ஆட்சிமுறை மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என சகலரும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த சிந்தனையில், இன மத மொழி வேறுபாடுகளையெல்லாம் கடந்து அத்தனை பேரும் எதிர்கால தேசிய நலன் என்ற ஒரே கருத்தில் உடன் பட்டிருக்கின்றார்கள். இந்த வேலைத்திட்டத்திற்கான பின்னணி முன்னெடுப்புக்களை கடந்த பல மாதங்களாக இந்நாட்டின் புத்தி ஜீவிகளும், சிவில் சமூக தலைவர்களும், பௌத்த மதகுரு மார்களும் முன்நின்று மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால், நமது முஸ்லிம் அரசியல் வாதிகள் மாத்திரம் இன்னும் திசை மாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள் அல்லது தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டினதும், நம் சமூகத்தினதும் நலன்கள் இவர்களின் எண்ணங்களில் முதன்மையானதாக இருந்திருக்குமானால் இவர்கள் இவ்வாறு தடுமாற வாய்ப்பில்லை.மக்களினதும் நாட்டினதும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வேண்டிய முக்கிய கால கட்டத்தில், சில முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது பதவிகளுக்காக பேரம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் துரதிஸ்டவசமானதாகும்.

நாட்டில் சகல மக்களுக்கும் ஏற்ற நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்தும் விடயத்தில் இந்நாட்டின் குடி மக்கள் என்ற வகையில் முஸ்லிம் சமூகத்திற்கும் பாரிய பொறுப்பிருக்கிறது. அத்தோடு, குடிமக்கள் என்ற நிலைக்கும் அப்பால் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் இந்தப்பங்களிப்பைச் செய்ய வேண்டிய கடமை இன்னுமொருபடி மேலாக இருக்கிறது.

ஏனெனில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் தலையாய கடமை நாம் வாழும் மண்ணில் நன்மையை ஏவி, தீமைகளை அகற்றி நீதியை நிலை நாட்டுவதாகும்.

அந்த வகையில் நாட்டின் நல்லாட்சியை நோக்கிய அரசியல் மாற்றத்திற்காக ஏனைய சமூகங்களை விடவும் அதிக பங்களிப்பை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் முஸ்லிம் சமூகத்திற்கே இருக்கிறது என்பதனை நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது'
Share it:

Post A Comment:

0 comments: