எகிப்தில் 188 முஸ்லிம் சகோதரத்துவ ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை

Share it:
ad
எகிப்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு கெய்ரோவுக்கு அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் 188 ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

நூற்றுக் கணக்கானோரை பலிகொண்ட சகோதரத்துவ அமைப்பின் ஆர்ப்பாட்ட முகாம்களை கலைக்க எகிப்து இராணுவ நடவடிக்கை எடுத்த தினத்திலேயே குறித்த பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட இஸ்லாமியவாதியான ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்ட முகாம் மீது இராணுவ நடவடிக்கை எடுத்ததற்கு கடும் கண்டனம் வெளியானது.

எகிப்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தபோதும் இதுவரை எந்த தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை. விதிக்கப்பட்டிருக்கும் புதிய தண்டனை எகிப்து தலைமை முப்தியின் ஆலோசனைக்கு விடப்பட்டுள்ளது. இது குறித்த இறுதித் தீர்ப்பு ஜனவரி 24 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டோரில் 140க்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே தடுப்புக்காவலில் இருப்பதோடு எஞ்சியவர்கள் ஆஜராகி இருக்கவில்லை. கடந்த 2013 ஓகஸ்ட் 4 ஆம் திகதி கெர்தசா கிராமத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதே தினத்தில் மின்யா பகுதியில் இருக்கும் மற்றுமொரு பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குற்றச்சாட்டில் ஏற்கனவே 500க்கும் அதிகமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரான முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் இராணுவ தளபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி, இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக கடுமையான ஒடுக்குமுறையை கையாண்டு வருகிறார். மறுமுனையில் 2011 அரபு வசந்த மக்கள் எழுச்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹ{ஸ்னி முபாரக் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை கைவிட்டது.
Share it:

Post A Comment:

0 comments: