''தங்கத் தாட்டில், பிச்சை எடுத்த கதை''

Share it:
ad
அடுத்த பல வருடங்களுக்கு நம் நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கக்கூடியதாக அமையவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை நாம் எதிர்நோக்கியிருக்கின்றோம், இத்தருணத்தில் தேவைப்படுவது ஆட்சி மாற்றமா? அல்லது ஆட்சி முறையில் மாற்றமா? என நாம் சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நடைபெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் (PMGG) செயற்குழு மற்றும் சூறாசபை உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காத்தான்குடி கடற்கரை வீதியில் PMGGயின் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள அதன் மக்கள் அரங்கில் PMGGயின் 200 க்கும் அதிகமான செயற்குழு மற்றும் சூறாசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்த மேற்படி சந்திப்பில் இந்நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் இத்தருணத்தில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பொறுப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் உரையாற்றும்போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது,

"குறைந்தது அடுத்த 10 வருடங்களுக்காவது இந்நாட்டின் மக்களுடைய ஜனநாயக உரிமை, சமாதான சகவாழ்வு, மத கலாசார உரிமைகள் உள்ளடங்கலாக இந்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகின்ற ஒரு தேர்தலாகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அமையப்போகின்றது. யுத்த வெற்றியினை மீண்டும் ஒரு இனவாத மூலதனமாக்கி அதன்மூலம் சிறுபான்மை மக்களைப் புறந்தள்ளி, பெரும்பான்மை மக்களின் வாக்குகளைக் கொண்டே ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் வென்றுவிட வேண்டும் என்ற உபாயத்துடனையே அரசாங்கம் இயங்கி வந்தது.

அந்த உபாயம் வெற்றியளிக்கும் என்ற பாரிய நம்பிக்கை மிதப்புக் காரணமாகவே இந்நாட்டில் சிறுபான்மை மக்களின் மத கலாசார உரிமைகள் பகிரங்கமாகவே நசுக்கப்படுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்தது. ஆனாலும் கடந்த ஊவாத் தேர்தல் இந்த உபாயம் வெற்றியளிக்காது என்பதனை நிரூபித்திருக்கின்றது. சிங்கள பௌத்த வாக்காளர்களை அதிகூடிய பெரும்பான்மையாகக் கொண்ட மொனராகலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இதனை நிரூபிக்கின்றன. இதைத் தொடர்ந்தே மேலும் நிலைமைகள் மோசமடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி எப்படியாவது வென்று வேண்டுவிட வேண்டும் என்ற அவசரத்தில் அரசாங்கம் இருக்கின்றது.

சிறுபான்மை மக்களின் ஆதரவில்லாமல் இத்தேர்தலை முகம் கொடுப்பது மிகவும் ஆபத்தானது என்பதையும் அரசாங்கம் உணரத் தொடக்கி இருக்கின்றது. இதன் பின்னணியிலேயே சிறுபான்மை மக்களை நோக்கிய அரசாங்கத்தின் நேசக்கரம் இப்போது நீளத் தொடங்கியிருக்கின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வளவு தூரம் உறுதியானது என்பதனைத் தெரிந்து வைத்துள்ள அரசாங்கம் இப்போது முஸ்லிம்களின் ஆதரவையும் எப்படியாவது தன்பக்கம் இழுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.

எனவேதான் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் எவ்வாறான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கபோகிறார்கள் என்பதனை முழு நாடும் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் அவதானிக்கத் தொடங்கியிருக்கின்றது. பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே மகிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கக் கூடாது என முக்கியமான சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அண்மையில் எழுதியிருந்ததை நான் பார்த்தேன். இதுபோலவே பிரதேச, பிராந்திய மற்றும் மாவட்ட ரீதியான நமது சராசரி நலன்களை மையப்படுத்தியதாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பலரது நிலைப்பாடுகள் அமைவதனையும் காணமுடிகின்றது. “எனது பிரதேசத்தின் நிர்வாக எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.. எமது பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.. எம்மைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் அரசியல் அதிகாரமும், பதவியும் வழங்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளே இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாடுகளுக்கான அடிப்படைகளாக கொள்ளப்படுவது துரதிஷ்டமானது. 

ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவம்.. அதன் முடிவு இந்நாட்டின் குடிமக்கள் மீதும் இந்நாட்டின் ஆட்சிமுறை மீதும் இந்நாட்டினது ஒட்டுமொத்த எதிர்காலத்தின் மீதும் ஏற்படுத்தப் போகின்ற பாரதூரமான தாக்கம்.. என்பவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் முன்வைக்கும் இதுபோன்ற கோரிக்கைகள் எவ்வளவு தூரம் சராசரியானது என்பதை உணரமுடியும். ஜனாதிபதித் தேர்தல் என்கின்ற இந்தப் பொன்னான சந்தர்ப்பத்ததில் இதுபோன்ற சராசரியான கோரிக்கைகளின் அடிப்படையிலேயே நாம் முடிவுகளை மேற்கொள்வோமாக இருந்தால் தங்கத் தாட்டில் பிச்சை எடுத்த கதையாகவே இது அமையும்.

யுத்தம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னராவது இந்நாட்டின் சட்டமும் ஒழுங்கும், பொருளாதார நிலவரங்களும், இனங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் இன்னும் பல விடயங்களும் முன்னேற்றமடையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கின்றது. பயங்கரவாத காலத்தின்போதுகூட நடந்திராத அளவிற்கு இனவாதம் வளர்க்கப்பட்டு வருகின்றது. இது மோசமான வன்முறைகளாகவும் மாறத் தொடங்கியிருக்கின்றது. அளுத்கம வன்முறை இதற்கு நல்ல உதாரணமாகும். இனவாதத்தைப் பேசுகின்றவர்களுக்கு அரச பாதுகாப்பு வழங்கப்படும் அதேவேளை சமாதானம், சகவாழ்வு பற்றிப் பேசுகிறவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இனவாத வன்முறையாளர்களைப் பாதுகாப்பதற்கே இந்நாட்டில் ஊரடங்குச்சட்டம் உபயோகப்படுகின்றது என்பதனை அளுத்கமவில் நாம் கண்டோம். பொலிசாரும் பாதுகாப்புத் தரப்பினரும் பொதுமக்களுக்காக சட்டம் ஒழுங்கைப் பாதுக்காக்கின்றவர்கள் என்ற நிலை மாறி அரசாங்கத்துக்குச் சேவை செய்கின்றவர்களாகவே மாற்றப்பட்டிருக்கின்றார்கள். வெளிநாட்டுக்கான அரசாங்கத் தூதுவர் பலர் முன்னிலையில் வைத்து தாக்கப்பட்டாலும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்கின்ற அளவிற்கு சட்டமும் ஒழுங்கும் இந்த நாட்டில் சீர்குலைந்திருக்கின்றது. சட்டத்திற்குப் புறம்பான விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றைச் சட்டபூர்வமானதாக ஆக்குவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

ஊழலும் மோசடிகளும் உச்சத்தில் இருக்கின்றன. அவைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முயலும் ஒருசில அதிகாரிகளும்கூட நசுக்கப்படுகின்றார்கள்.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்படும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவன்றி முறைப்பாட்டாளர்களுக்கு எதிராகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடிமக்கள் மீதான கடன் சுமைகளையும் வரிச் சுமைகளையும் அரசாங்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதன்காரணமாக வறுமைக் கோட்டின்கீழ் தள்ளப்படும் நாட்டுமக்களின் தொகை அதிகரித்துச் செல்கின்றது. மனித உரிமைகளுக்காகவும் ஊடக சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுப்பவர்கள் நசுக்கப்படுகின்றார்கள்.  அதிகாரப்பரவலாக்கம் என்று வெறும் பெயரளவிலான ஒன்றாகவே மாற்றப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் இதற்கு நல்ல உதாரணமாகும். பாராளுமன்ற அதிகாரம் கூட இன்று செல்லுபடியற்றதாக மாற்றப்பட்டு வருகின்றது. ஜனநாயக விழுமியங்கள் புறந்தள்ளப்பட்டு எதேச்சதிகார சூழலே அதிகரித்துவருகின்றது. இந்த நிலைமைகள் இன்னும் தொடர்ந்தால் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சட்ட ஒழுங்கு சூழ்நிலைகள் இருண்டதாகவே அமையும்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகளைக் கட்டுப்படுத்தினால் மாத்திரம் போதும் என்றோ அல்லது எமது பகுதிகளுக்கான நிர்வாக, அபிவிருத்திப் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தால் மாத்திரம் போதும் என்றோ நாம் சிந்திக்கத் தலைப்படக் கூடாது. அவ்வாறு செய்வதானது இந்நாட்டின் ஏனைய மக்களின் நலன்கள்மீதும், இந்நாட்டின் எதிர்காலத்தின்மீதும் அக்கறை கொள்ளாத சுயநலவாத, சந்தர்ப்பவாத சமூகமாகவே எம்மை மீண்டும் ஒருமுறை அறிமுகம் செய்யும்.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தியதாக வெளியிடப்படும் கருத்துக்கள் ஏராளமானவை ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கியதாகவே இருக்கின்றன. ஆனால் இந்நாட்டிற்கு அவசியப்படுவது ஒரு வெறும் ஆட்சி மாற்றம்தானா? அல்லது ஆட்சி முறையிலான மாற்றமா? என்பதிலும் நாம் தெளிவாக இருக்கவேண்டும். ஏற்கனவே நான் விபரித்ததுபோல இந்நாட்டின் ஆட்சிமுறையானது எவ்வாறான பாதிப்புக்களை இந்நாட்டு மக்கள் மீதும் அவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் மற்றும் இந்நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீதும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பது எமக்குத் தெரியும். இந்நிலை தொடர்ந்தால் இந்நாட்டின் எதிர்காலம் எவ்வளவு தூரம் அபாயகரமானதாக அமையும் என்பதும் எமக்குத் தெரிகிறது. எனவே எமது சொந்த  நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு என்பதனை மையப்படுத்தியதாக மாத்திரம் எமது அரசியல் நிலைப்பாடுகள் அமைந்துவிடக்கூடாது. மாறாக எமது சமூகத்தின் நலன்களையும் அதேபோல் இந்நாட்டு ஏனைய மக்கள் நலன்களையும் உள்ளடக்கியதாகவும் அத்தோடு இந்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்கால நலன்களை அடிப்படையாக கொண்டதாகவும் எமது அரசியல் நிலைப்பாடுகள் அமைய வேண்டும். அதற்கேற்றவகையில் வெறும் ஆட்சி மாற்றத்தையன்றி ஒரு ஆட்சிமுறை மாற்றம் நோக்கியதாக எமது நிலைப்பாடுகள் அமைய வேண்டும்."
Share it:

Post A Comment:

0 comments: