இந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த எமது கட்சியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன

Share it:
ad
ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கூட்டணியின் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கமாட்டோம். அத்துடன் அரசாங்கத்துடனான எமது பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டன என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

நாட்டின் நல்லாட்சிக்காக நாங்கள் முன்வைத்துள்ள கொள்கை தொடர்பில் நாங்கள் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தவுள்ளடன் அதில் அதனூடாக சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றோம் என்றும் ஹெல உறுமயஅறிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடனான உறவை முறித்துக்கொண்டு நேற்று வெளியேறிய ஜாதிக ஹெல உறுமய கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த தீர்மானத்தை அறிவித்தது.

நாட்டை நல்வழிப்படுத்துவதற்கான தமது யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிராகரித்துவிட்டதாகவும் எனவே அரசாங்கத்துடன் பேசுவதற்காக திறந்து வைக்கப்பட்டிருந்த கதவுகளை தற்போது மூடிவிட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமய அறிவித்தது.

எமது கொள்கைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமையின் காரணமாக அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரவு வழங்கமாட்டோம் என்றும் ஜாதிக ஹெல உறுமய நேற்று திட்டவட்டமாக அறிவித்தது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில மேல் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த சிறி வர்ணசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகையில்,

அரசுக்கு ஆதரவில்லை

நாட்டின் நல்லாட்சிக்கான எமது யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமையின் காரணமாக நாம் அரசாங்கத்திலிருந்து விலகுகின்றோம்.

கதவுகள் மூடப்பட்டன

இந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த எமது கட்சியின் கதவுகள் இன்றுடன் ( நேற்று) மூடப்படுகின்றன. எமது கொள்கைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமையின காரணமாக அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கமாட்டோம்.

நல்லாட்சிக்கு இணைவோம்

இன்று இந்த நாட்டுக்கு கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் அவசியமில்லை. மாறாக நல்லாட்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். எமது கொள்கைகளுடன் இணைந்து செல்கின்ற எவருடனும் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஊழல் தலைவிரித்தாடுகின்றது

இந்த அரசாங்கமானது மற்றுமொரு இரத்தக்கறைக்கான வழியை அமைத்துக்கொண்டு செல்கின்றது. ஊழல் தலைவிரித்தாடுகின்றது. சில மனிதர்கள் இந்த நாட்டை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இதற்கு அனுமதிக்க முடியாது. ஊழலை இல்லாதொழிப்பதற்கு இந்த நாட்டில் அரசியலமைப்புக்கு உட்படுத்தப்பட்ட பேரவை ஒன்று உருவாக்கப்படவேண்டும்.

புதிய வெளிநாட்டு கொள்கை தேவை

ஜாதிக ஹெல ஊறுமய இந்த நாட்டை நேசிக்கின்றது. எனவே தான் நாம் இந்த முடிவை எடுத்துள்ளோம். இன்று எம்மிடம் இருக்கின்ற வெ ளிநாட்டுக் கொள்கையை விட சிறந்ததொரு வெளிநாட்டு கொள்கை இந்த நாட்டுக்கு அவசியமாகும். இதற்கு பின்னரும் எம்மால் நிழல்களிலிருந்து பணியாற்ற முடியாது.

4 மனிதர்கள் நிர்வகிக்கும் நாடு

அமைச்சரவையின் பெரும்பாலான அமைச்சர்கள் ஆறு மாதங்கள் மட்டுமே வருடம் ஒன்றில் வேலை செய்கின்றனர். காரணம் போதுமான நிதி கிடைப்பதில்லை. ஆனால் 3 அல்லது 4 மனிதர்களே இந்த நாட்டை இன்று நிர்வகிக்கின்றனர். எமது நாட்டின் மூன்று அரச வங்கிகள் இன்று வங்குரோத்து நிலைக்கு சென்றுவிட்டன.

கசினோ உரிமையாளர்கள் பலமிக்கவர்களாக மாறிவிட்டனர்

நாட்டில் விற்கப்படுகின்ற ஒவ்வொரு லீற்றர் பெற்றோலில் இருந்தும் 48 ரூபா திருடப்படுகின்றது. கடன்களை பெற்றுக்கொண்டு நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அர்த்தம் இல்லை. நாடே இன்று வங்குராத்து நிலைக்கு சென்றுவி்ட்டது. முழு பாராளுமன்றத்தைவிடவும் கசினோ உரிமையாளர்கள் இன்று பாரிய பலமானவர்களாக உருவாகியுள்ளனர்.

எமது தேசிய முன்னணியை எந்தவொரு சக்தியினாலும் தடுத்துவிட முடியாது. இந்த அரசாங்கத்தை இன்று ஒருசிலர் பணய கைதியாக எடுத்துள்ளனர் என்றார்.

அத்துரலியே ரத்தன தேரர்

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிடுகையில்

மின்கம்பங்களில் மட்டுமே ஜனாதிபதி

ஜனாதிபதி இன்று மின்சாரக் கம்பங்களில் மட்டுமே இருக்கின்றார். மாறாக மக்களின் மனங்களில் இல்லை. மிகவும் நாகரிகமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்.

நீதிக்காக போராடுகின்றோம்

எனவே நாம் மாபெரும் சக்தியாக அடுத்தவாரம் வெளிவருவோம். எமது இந்த தீர்மானம் தீர்க்கமானது. ஆனால் அது கொள்கையை அடிப்படையாகக்கொண்டது. இந்த நாடு எதிர்கால சநததியினரின் நலனை நோக்ககாக்கொண்டு செயற்படவில்லை.

போதைப் பொருள் வியாபாரிகளே இந்த நாட்டை நிர்வகிக்கின்றனர். எமக்கு ஜனாதிபதியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள நீதிக்காக போராடுகின்றோம் என்றார்.

நிசாந்தசிறி வர்ணசிங்க

மேல் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த சிறி வர்ணசிங்க செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிடுகையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைறை ஊழலை போஷிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. நாட்டின் இராஜதந்திர சேவை செயற்திறனற்றுக் காணப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு எதிரான குற்ற அறிக்கை மிகவும் நீளமானது.

நாட்டுக்கு எத்தனோல் கொண்டுவருகின்றவர்களின் பைல்களே ஜனாதிபதியிடம் இருக்கவேண்டும். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீள்குடியேற்றுவதற்கு ஏன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பயன்படுத்தப்படவில்லை? அதிகாரத்தை ஒருவர் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை உறுதிபடுத்த முடியாது என்றார்.
Share it:

Post A Comment:

0 comments: