''மஹிந்த + மைத்திரி'' பலம், பலவீனங்கள்..!

Share it:
ad
(நஜீப் பின் கபூர்)

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முதுகெழும்பு முறிந்து அது தன்னைக் குனப்படுத்திக் கொள்ள கடந்த காலங்களில் முயன்று கொண்டிருந்தது. என்றாலும் முறிவு ரணில், சஜித், கரு, மங்கள என்று விலகியே போய்க் கொண்டிருந்தது. அதனால் இலங்கை அரசியலில் அந்தக் கட்சி மீது மக்களுக்கு நலலெண்ணம் கெட்டுப்போயிருந்தது. 

பிரதான எதிர்க் கட்சி இப்படிப் பட்டுப்போய் இருந்த நேரம். ஐ.தே.கவுடன் ஒப்பு நோக்குகின்ற போது சிறு குழுவாக இருந்தாலும் ஜேவிபி தனது சக்திக்கும் அப்பால் போராட்டங்களை பாராளுமன்றத்திலும் வெளியிலும் முன்னெடுத்து வந்தது. இந்த நிலையில் முன்பு அறிவித்தது போல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தரவைக் கொடுத்தார். 

எதிர்க் கட்சி சார்பில் ரணில் வேட்பாளர் என்றுதான் கடைசி வரை நிலiமை இருந்தது. ஜேவிபி இது சட்ட விரோதமான ராஜபக்ஷ நடவடிக்கை அவருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட உரிமை கிடையாது என்ற தர்க்த்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்து சென்றது. 

ஹெல உறுமய என்ற கடும் போக்கு இனவாத அமைப்பு ஆளும் தரப்புடன் முறுகிக் கொண்டு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் நாட்டின் இருந்து  வந்த அரசியலில் ஒரு போக்கில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான பின்புலத்தை அமைத்துக் கொடுத்தது. 

தரனம் பார்த்து சந்திரிகா களத்தில் புகுந்து நடத்திய அதிரடி ஆட்டம் இலங்கை அரசியலில் அணல் பறக்கும் நிலமையை இன்று உருவாக்கி விட்டிருக்கின்றது. இதனால் எதிர்க் கட்சிகள் இன்று நம்பிக்கையுடன் தமது செயல்பாடுகளைத் துவக்கி இருக்கின்றது.

எனவே இந்தத் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்கள் தொடர்பான பலம் பலவீனங்கள் தொடர்பாக இந்த வாரம் நமது வாசகர்களுக்குச் சில தகவல்களைச் சொல்லாம் என்று தோன்றுகின்றது. பலம் பலயீனங்கள் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் வேட்பாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் சிலவற்றைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

ராஜபக்ஷ

பெயர்: பேர்சி மஹேந்திர ராஜபக்ஷ அல்லது மஹிந்த ராஜபக்ஷ
பிறப்பு: 1945 நவம்பர் 18
வயது: 69
மனைவி: சிராந்தி
பிள்ளைகள்: மூன்று
இவர் ஒரு சட்டத்தரணி
1970ல் முதல் பாராளுமன்றப் பிரவேசம்
2004ல் பிரதமர் பதவி
2005ல் நவம்பர் 19 முதல் இன்று வரை ஜனாதிபதி 

மைத்திரி
பெயர்: பள்ளேவத்த கமராலலாகே மைத்திரிபால யாப்பா சிரிசேன 
பிறப்பு: 1954 செப்தெம்பர் 3
வயது: 60
மனைவி: ஜெயந்தி புஷ்பகுமாரி
பிள்ளைகள்: மூன்று
குண்டசாலை விவசாயக் கல்லூரியில் உயர் கல்வி 
ரஷ்யா மாக்சிம் கோர்க்கி உயர் கல்வி நிலையத்தில் அரசியல் அறிவியல் டிப்ளோமப் பட்டம். 
1971ல் ஜேவிபி கிளர்ச்சியில் சிறை
1979ல் அரசியல் பிரவேசம்
1989ல் முதல் பாராளுமன்றப் பிரவேசம்
2004ல் பிரதமர் பதவியை ராஜபக்ஷவுக்காக விட்டுக் கொடுத்தார்  என்று ஒரு செய்திக் குறிப்புக் கூறுகின்றது. 
2014.11.21 பொது வேட்பாளராகும் வரை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும். சுகாதார அமைச்சர் பதவியும் வகித்தார்.

எனவே பிரதான வேட்பாளர்கள் இருவரும் பின்தங்கிய பிரதேசங்களில் பிறந்து இன்று அரசியலின் உச்ச படிகளில் நின்று கொண்டிருக்கின்றார்கள். பொருளாதார ரீதியில் நோக்குகின்ற போது ராஜபக்ஷ மெதமூலன மைத்திரி குடும்பத்தை விட வளமாக இருந்து வந்திருக்கின்றது.

மைத்திரியின் பெற்றோர் நேரடியாக விவசாயிகளாகவே இருந்திருக்கின்றார்கள். இவர்கள் பரம்பறை விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ பற்றி சிங்கள மக்கள் மத்தியில்  நல்லபிப்பிராயம் அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. இதற்குப் பிரதான காரணம்   பிரபாகரன் வடக்குக் கிழக்கில் செழுத்திக் கொண்டிருந்த ஆதிக்கத்தை இராணுவ ரீதியில் தோற்கடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டு வந்தார் என்பதனால் இந்த நல்லலெண்ணம் ராஜபக்ஷ மீது. 

இப்படி இருந்தாலும் ஆளும் தரப்பில் இருக்கின்ற சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் குறிப்பாக அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுர் சுதந்திரக் கட்சி பிரதானிகள் மத்தியிலும் ஒருவகை மனக்குறை இருந்து வந்தது. 

இதற்குப் பிரதான காரணம் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிலிருந்து தாவியவர்களுக்கு ராஜபக்ஷ கொடுத்த  வரப்பிரசாதங்கள்-பதவிகள் மற்றும் ஆளும் தரப்பில் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஐந்து ஆறு பேரே தமக்கு விரும்பியவாறு தீர்மானங்களை மேற் கொள்கின்றனர். 

கனதியான அமைச்சுக்கள் அனைத்தும் ராஜபக்ஷக்களி பிடியில்தான் இருக்கின்றது. அமைச்சர்களைக் கண்டு கொள்ளாது செயலாளர்கள்  தீர்மானங்களை மேற் கொள்ளும் நிலை என்று அந்தக் குறைகள் நீண்டு கொண்டு சென்றது. 

இந்தக் குறைகள் எவ்வளவு தூரம் புரையோடிப்போய் இருந்தது என்பதற்கு தற்போது பொது வேட்பாளராகவுள்ள மைத்திரி கொடுத்த வாக்கு மூலம் நல்ல உதாரணம். இதனை நாம் கடந்தவாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

சர்வதேச பின்னணியை வைத்து மஹிந்த- மைத்திரி பற்றிய மதிப்பீட்டைச் செய்து பார்த்தால் மஹிந்த ராஜக்ஷவுக்கு உச்ச புள்ளிகளும் மைத்திரிக்கு சீரோப் புள்ளி என்ற நிலை அதில் இருக்கின்றது. இதற்குக் காரணம் மஹிந்த 10 வருடங்கள் அதிகாரத்தில் இருப்பதும் இலங்கையில் நடைபெற்ற பேரில் அவர் வெற்றி பெற்றதும் காரணங்களாகும். 

உள்ளுர் நிலவரத்தை பொறுத்த வரை ராஜபக்ஷவுக்கு ஆளும் தரப்பு குறிப்பாக சுதந்திரக் கட்சியே முற்றும் முழுதாகக் கை கொடுக்க வேண்டி இருக்கின்றது. தற்போது அந்தக் கூட்டில் இருக்கின்ற சம்பிரதாய இடதுசாரிகளின்  வாக்கு வங்கி என்பது வங்குரோத்து நிலை என்பது அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற விடயம். 
அதே போன்று விமல் வீரவன்ச தலைமையிலான அணிக்கும் மக்கள் செல்வாக்கு வாக்கு வங்கி என்பது வெறும் பூச்சாண்டி விவகாரம். ஆளும் தரப்பு சுதந்திரக் கட்சி வாக்குகளை நமம்பியே இவர்களுடைய பாராளுமன்றப் பிரவேசம் கூட அமைந்திருக்கின்றது.   

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பதவிகளுக்காக ஆளும் தரப்புக்கு தாவியவர்கள் எவ்வளவு வாக்குகளை இந்தத் தேர்தலில் ராஜபக்ஷவுக்குச் சேர்த்துக் கொடுக்க முடியும் என்று அவர்களிடத்தில் கேள்வி எழுப்பினால் அவர்களினால் ஆகாயத்தைதான் அண்ணார்ந்து பார்க்க முடியுமாக இருக்குமே தவிர ஒரு கணக்கை அவர்களால் சொல்ல முடியாது என்பதுதான் அவர்கள் விடயத்தில் எமது கணக்கு.

வடக்கில் டக்லஸ் அமைச்சாரக இருந்தாலும் வடக்கு மக்கள் மத்தியில் எந்தளவு வாக்குகளைச் அவரால் சேர்த்துக் கொடுக்க முடியும் என்ற கணக்கை அவரே செய்து பார்த்து சொல்ல வேண்டும்.

பாராளுமன்றத்திலுள்ள எல்லா முஸ்லிம்களும்  அமைச்சர்கள்தான் என்ற நிலை. இந்த நிலை இருந்தாலும் முஸ்லிம் அமைச்சர்களாக இருக்கின்றவர்களினால் அல்லது முஸ்லிம்களின் மிகப் பெரிய கட்சி வைத்திருப்பவர்கள் என்றுமார் தட்டுகின்ற மு.கா.வினர் கூட இந்தத் தேர்தலில் ராஜபக்ஷவுக்கு எந்தளவு வாக்குகளைச் சேர்த்துக் கொடுக்க முடியும் என்று எவராவது கணக்குக் கேட்டால் பக்கட்டில் கைகளை விட்டு ஐயோ ! பக்கட்டில் ஓட்டை விழுந்திருக்கின்றதே இப்போதுதான் நாமும் பார்க்கின்றோம் என்றுதான் அவர்களுக்குப் பதில் தர முடியும்.   

ஆளும் தரப்புக்கு மிகப் பெரிய செயலணிகளும் தேவையான ஆளணியும் இருக்கின்றது. மைத்திரியைப் பொறுத்தவரை அவருடன் நேரடியாக ஜேவிபி இணைந்து கொள்ளாத பின்னணியில், தற்போதய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார இயந்திரமானது சிறுபிள்ளை பண்ணி இருக்கின்ற வேளாண்மை போன்றது. 

எனவே தேர்தல் என்றால் பிரச்சாரம் முக்கியம் இந்த பிரச்சார நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தளவு முன் னெடுக்க முடியும் என்பது கேள்விக்குறி. எனவேதான் என்னவோ எதிரணி பொது வேட்பாளர் கட்அவுட், பொலித்தீன், போஸ்ட்ர்கள்  எமது பிரச்சாரத்தில் இல்லை என்று குறிப்பிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

பொது வேட்பாளரைப் பொறுத்தவரை அவருக்குள்ள பலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்ற பெரும் எண்ணிக்கையான வாக்கு வங்கி ஒன்றுதான் என்று குறிப்பிட வேண்டும். இது தவிர சிறுபான்மை சமூகங்களைச் சேந்த வாக்குகளே அவருக்குள்ள அடுத்த பலம் மலையகத்தைச் சேர்ந்த அனைத்துக் தமிழ் கட்சிகளும் இந்த நேரம் வரை ராஜபக்ஷவுக்கு விசுவாசமாக இருந்தாலும் மலையக மக்களின் கணிசமான வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சியூடாக பொது வேட்பாளர் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பது எமது கருத்து. இது ஊவாவில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஊடகங்களை ஆளும் தரப்பு தன்னால் முடிந்தளவு பயன்படுத்திக் கொள்ள இடமிருக்கின்றது. மேலும் படைத் தரப்பு அடியாட்கள் என்று ஆளும் தரப்பு களமிறக்கி இந்தத் தேர்தலில் ஏதாவது பண்ணிவிடுமே என்ற அச்சம் எதிரணி செயல்பாட்hளர்கள் மத்தியில் இருந்து வருகின்து.

மேலும் இந்தத் தேர்தலில் ஆளும்தரப்பு நவீன தொழிநுட்பங்களை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள இருக்கின்றது என்று எமக்குக் கிடைக்கின்ற தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது. 

மேலும் ஆளும் தரப்பு இந்தத் தேர்தலில் மிகச் சிறப்பான பிரச்சாரம் ஒன்றை முன்னெடுக்கும். பொருளாதார வளமும் அரச அதிகாரமும் தன்னிடம் இருந்தாலும். கட்சியில் இருக்கின்றவர்கள் எவரையும் நம்ப முடியாத நிலை ஆளும் தரப்பில் தோன்றி இருக்கின்றது. இது ஆளும் தரப்பின் மனவலிமையை பாதிக்கச் செய்து விடும்.
  

மைத்திரிக்கு ஐ.தே.க, என்னதான் ஆதரவு கொடுத்தாலும் சிறுபான்மை வாக்குகள் எவ்வளவுதான் விழுந்தாலும் சுதந்திரக் கட்சி வாக்குகளில் ஏழு  முதல் பத்து சதவீத வாக்குகளை  மைத்திரி பெற்றுக் கொண்டாலே  அவர் ராஜபக்ஷவுடன் ஒரு போட்டிக்கு வர முடியும். ராஜபக்ஷவைப் பொறுத்தவரை சுதந்திரக் கட்சி வாக்குகள் மைத்திரிக்கு பத்து சதவீதத்திற்கு மேல் பேய்ச் சேருமாக இருந்தால் அது ராஜபக்ஷவுக்கு ஆபத்தாக இருக்கும். 

நாட்டில் என்னதான் அபிவிருத்திகள் நடைபெற்றாலும் பொருளாதார அபிவிருத்தி விடயத்தில் ஆளும் தரப்பு சொல்லுகின்ற புள்ளி விபரங்கள் கணக்கு வழக்குகளில் நிறையவே முறன்பாடுகள் இருந்து வருகின்றது. எனவே இந்தத் தேர்தலில் ராஜபக்ஷ வெற்றி பெற்றாலும் அவக்கு அடுத்த தனது பதவிக் காலத்தை நகர்த்துவதில் நிறையவே நெருக்கடிகள்  எழ இடமிருக்கின்றது. 

சர்வதே மட்டத்தில் ராஜபக்ஷவுக்கு மேற்கு நாடுகளில் இருந்து தொடர்ச்சியாகத் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. பொது நலவாய அமைப்பின் தற்போதய தலைமைப் பதவியில் இருக்கின்ற ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் மிகவும் நேர்மையாக நடாத்தி முடிக்க வேண்டியும் இருக்கின்றது. 

மேலும் ஜெனீவா மனித உரிமைகள் விவகாரத்திலும் ராஜபக்ஷக்களுக்கு ஒரு வழக்கு நிலுவையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராஜபக்ஷக்கள் இந்தத் தேர்தலில் மிகவும் அவதானமான தமது அடிகளை  எடுத்து வைக்க வேண்டும்.

பொதுவாக ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் அனைவரும் போல் மைத்திரி ஒரு புனிதமான மனிதன் என்ற சான்றிதழைக் கொடுத்து வருகின்றார்கள். என்றாலும் அவர் சதிகாரர்களின் வலையில் தற்போது சிக்கி இருக்கின்றார் என்று குற்றம் சாட்டுகின்றார்கள் ஆளும் தரப்பிலுள்ள அவர்களது பழைய சகாக்கள். 

பொது வேட்பாளர் மைத்திரிக்கு புலித் தோலைப் போர்த்தி அவருக்கு சிங்கள மக்களின் வாக்குகள் செல்வதைத் தடுப்பதற்கு ஆளும் தரப்பிலுள்ளவர்கள் பலர் தற்போது பிரச்சாரங்களை முடக்கி விட்டிருக்கின்றார்கள் என்பதனை தற்போது அவதானிக்க முடிகின்றது. எனவே அவர்கள் பார்வையில் மைத்திரி இப்போது டயஸ்போராவின் கையாள்.

இலங்கையில் நடக்கின்ற அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக அவதானிக்கின்ற நாடுகளில் சீனாவும்  இந்தியாவும் முக்கியமானது. சீனா ராஜபக்ஷ விசுவாசத்துடனும் இந்திய பிரந்திய மற்றும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுடனும் இலங்கை விவகாரத்தைப் பார்க்கின்றது.

பகிரங்கமாகத் தெரிகின்ற விடயம் என்வென்றால் மேற்கு நாடுகள் ராஜபக்ஷ விடயத்தில் திருப்தி இல்லாத நிலை என்பது முற்றிலும் உண்மையான விடயம். 

அரபு மற்றும் முஸ்லிம் நாடுகபை; பொறுத்தவரை அண்மையில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தவிர்த்து ராஜபக்ஷ விடயத்தில் நல்லுறவு என்ற நிலை. பொது வேட்பாளர் மைத்திரியைப் பொறுத்தவரை அவர் உலகத்தாரால் கண்டு கொள்ளப்படாத ஒரு மனிதன். ஒரு ஜனாதிபதி பதவி வேட்பாளர் என்ற வகையல் அது ஒரு பலயீனமாக இருந்தாலும் ரணிலின் மேற்கத்திய நெருக்க உறவு மைதிரியின் மேற்கத்திய பலயீனத்தை சரி செய்து கொடுத்து விடும். 

இந்திய ,சீனா மற்றும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுடனான உறவு பண்டார நாயக்கக்கள் போட்ட அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்ட  உறவுகள். எனவே மைத்திரியின் அந்தப் பக்கப் பலயீனத்தை சந்திரிகாவால் சரி செய்து கொடுக்கவும் முடியும் என்றுதான் தெரிகின்றது.

தற்போது இருக்கின்ற சுதந்திரக் கட்சிக்காரர்களில் ஒரு பத்து சதவீதம்பேர் எடுக்கின்ற முடிவே நமது நாட்டில் அடுத்த ஜனாதிபதி மஹிந்தவா மைத்திரியா என்பதனைத் உறுதிப்படுத்தப் போகின்றது. 

என்னதான் ஐக்கிய தேசியக் கட்சியில் அனைவரும் போல் மைத்திரிக்கு ஒரு மனதுடன் தமது ஒருமைப் பாட்டடைத் தெரிவித்தாலும் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் உயர் பதவிகளில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். 

எனவேதான் ஆளும்தரப்பிலிருந்து மைத்திரி தரப்பிற்கு தாவ இருக்கின்ற பட்டியல் ஐ.தே.க.ஊடாக ராஜபக்ஷக்களுக்குக் கிடைக்க அவர்கள் உடனே சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து தாவலைத் தடுத்திருக்கின்றார்கள்.

ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ பொது வேட்பாளருக்கு பாதிப்புக்களை ஏற்படுகின்ற வகையில் காரியம் பார்த்தும் வார்த்தைகளை வெளியிட்டும் வருகின்றார். தயா கமகே மைத்திரியை எதிர்த்துதான் தேர்தலில் பேட்டியிடப் போவதாக பேசி இருந்தார். 

எனவே ராஜபக்ஷ தரப்பிலும் மைத்திரி தரப்பிலும் உளவு வேலை பார்க்கின்றவர்கள் இந்தத் தேர்தலில் தமது விளையாட்டைக் கடைசி வரையிலும் நடத்திக் கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. 
Share it:

Post A Comment:

0 comments: