(முகுசீன் றயீசுத்தீன்)
இவ்வருடத்துக்கான 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. சித்தியடைந்த மாணவர்கள் சந்தோசத்திலும் சித்தியடையாத மாணவர்கள் துன்பத்திலும் காட்சியளிக்கின்றனர். இப்போதே 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுப் பிள்ளைகள் அடுத்த ஆண்டு தோற்றவுள்ள 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்காக டியூசன் வகுப்புகளுக்குப் படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
இதற்காக 4 ஆம் தரப் பெற்றோர்களுக்கான கூட்டங்களும் கட்டண வசூலிப்புகளும் சிறு பரீட்சை நடத்தி உயர் புள்ளி பெறும் மாணவர்களை வேறாக்கி தனியான விசேட புலமைப்பரிசில் வகுப்புருவாக்கமும் பாடசாலைகளில் களைகட்டத் தொடங்கியுள்ளன.
இனி காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் இச்சிறு பிள்ளைகள் படிப்பார்கள். நாடு முழுவதிலுமிருந்து தொடராகப் பெறப்படும் மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களுக்கு விடை எழுதிக் கொண்டே இருப்பார்கள். பரீட்சை நெருங்கியதும் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட்ட பொது மண்டபங்களில் நடத்தப்படும் பல்லூடகப் பரீட்சைக் கருத்தரங்குகளுக்காக 10 வயதுப் பிள்ளைகள் பஸ் ஏறி இறங்க வேண்டும்.
பணத்துக்காக கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் இப்பிஞ்சு உள்ளங்களை ஈர்க்கும் வியாபாரிகளாகி விட்ட சில ஆசிரியர்கள், ஒரு நாளைக்காக பெருந்தொகைப் பணத்தை சுருட்டிக்கொள்ளும் இவர்கள், பெரிய மண்டபங்களில் குழந்தைகளை முழு நேரம் அடக்கி வைத்துக்கொண்டு விசேடமாக ஒரே நாளில் ஒட்டு மொத்த அறிவையும் திணித்து விடுபவர்கள் போலும்!
பிஞ்சு உள்ளங்களைக் கொண்ட இச்சிறுவர்களுக்கு நல்ல நித்திரை, ஓய்வு நேரம், பொழுது போக்கு, விளையாட்டு என்பன கணிசமான அளவில் தேவையுடைய இந்த வயதில் இப்பரீட்சை நாடு முழுவதிலுமுள்ள 9,10 வயதுப் பிள்ளைகளை இயந்திரங்கள் போல மாற்றியிருக்கிறது. பரீட்சைக்குத் தோற்றும் சுமார் 3 இலட்சம் (100%) பிள்ளைகளில் சுமார் 30 ஆயிரம் (10%) பிள்ளைகளை சித்தியடைந்தவர்களாக அறிவிப்பதன் மூலம், குறித்த ஆண்டில் நாட்டிலுள்ள சுமார் 2 இலட்சத்து எழுபதாயிரம் (90%) இளசுகளை வருடாந்தம் முட்டாள்கள் என இப்பரீட்சை பிரகடனப்படுத்துகிறதா?
புலமைப்பரிசில் பரீட்சை கல்வியின் இலக்கையே சிதைத்து வருகிறது. சிறந்த ஆளுமை விருத்தி கொண்ட மாணவர் பரம்பரையை உருவாக்குவதற்கு பதிலாக பரீட்சையொன்றில் பெறும் புள்ளிகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு சில பிள்ளைகளை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாகவும் ஏனைய பிள்ளைகளை தாழ்ந்தவர்களாகவும் காண்பிக்கின்றது.
இதன்மூலம் சின்னஞ்சிறு வயதிலேயே நாட்டிலுள்ள பெரும்பான்மையான பிள்ளைகள் தோல்வி மனப்பான்மையில் துவண்டு போகிறார்கள். தாழ்வு மனப்பான்மையில் தம்மை தரமற்றவர்களாக நினைக்கிறார்கள்.
தம்மைத் தகுதியற்றவர்களாக எண்ணிக் கொண்டே ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்வியில் அடியெடுத்து வைக்கிறார்கள். இந்நிலையானது பெரும்பான்மையான பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஒருவித கௌரவச் சிக்கலுக்குள் தள்ளிவிட்டு சமூகத்தில் அவர்களின் அறிவார்ந்த அந்தஸ்தை மதிப்பீடு செய்யும் ஒரு அளவுகோலாக மாற்றியிருக்கிறது.
இப்பரீட்சை மூலம் சின்னஞ்சிறுசுகள் தமது இயலுமைகளுக்கும் அப்பாலான சுமைகளைத் தாங்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பரீட்சை முடிவடைந்ததும் அப்பிள்ளைகள் காற்றுப் போன பலூன்களைப் போல் ஆகிவிடுகிறார்கள்.
கற்றல் கற்பித்தல் எனும் பயணம் முதலாம் தரத்திலிருந்து 13 ஆம் தரம் வரை சீரான அதிகரிப்பைக் கொண்டிருக்காமல் 13 ஆம் தரம் வரை சாதாரண பஸ்ஸிலும் 4,5 ஆம் தரங்களில் எக்ஸ்பிரஸ் பஸ்ஸிலும் 6 ஆம் தரத்திலிருந்து மீண்டும் சாதாரண பஸ்ஸிலும் பயணிப்பதாக உள்ளது.
ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகின்ற போது பல்வேறு கல்விக் கோட்பாடுகளையும் கல்வி உளவியலையும் சுட்டிக்காட்டி சிறு பிள்ளைகளுடைய உள்ளத்தின் இயல்பு, தனியாள் வேறுபாடு, அவர்களது உடல் உள நிலைமைகளுக்கும் வயது, வகுப்புக்கும் தேசியக் குறிக்கோள்களுக்கும் ஏற்ற கற்றல், கற்பித்தல் என்பன பற்றியெல்லாம் அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகிறது. ஆனால் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைத் திட்டம் இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி விடுகிறது.
நாட்டின் தற்போதைய கல்வி முறையின்படி நியமங்களை விட நியதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும் பரீட்சையை மலினப்படுத்தி சுய ஆக்கத்திறன் விருத்திக்கு வழி செய்யவும் வேண்டப்படுகிறது. ஆனால் புலமைப்பரிசில் பரீட்சை சிறு பிள்ளைகளை புத்தகப் பூச்சிகளாகவும் பரீட்சை எழுதும் இயந்திரங்களாகவும் மாற்றியிருக்கிறது.
பரீட்சையின் வெட்டுப்புள்ளி எவ்வளவாக இருந்த போதிலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் ஒரு வகையான சித்தியடைந்தவர்களாகக் கணிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என ஒரு திருப்திக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் வெட்டுப் புள்ளியே மாணவரின் சித்தியைத் தீர்மானிப்பதாக பிரபல்யப்படுத்தப்பட்டு மதிக்கப்படுகிறது. பரீட்சைத் திணைக்களம் வெளியிடும் பெறுபேற்றில் வெட்டுப்புள்ளியை அடைந்தவரை "தகைமையுடையவர்' என்றும் வெட்டுப்புள்ளிக்குக் கீழ் பெற்றவரை "தகைமையற்றவர்' என்றுமே குறிப்பிடுகின்றது.
குறித்த ஆண்டில் இப்பரீட்சையில் மாணவர்கள் உயர் சித்தி பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதற்காக மாவட்ட ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மாணவர் எண்ணிக்கையில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படப் போவதில்லை. இவ்வதிகரிப்பு அரசாங்கத்தின் கொள்கையைப் பொறுத்த தீர்மானமாகும்.
மேலும் புலமைப்பரிசில் பெறுபேறானது அடுத்தடுத்த வகுப்புகளின் தர நிலைகளையும் க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பெறுபேறுகளையும் தீர்மானிப்பதாக இல்லை. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவரை விட, சித்தியடையாதவர் 6ஆந் தரத்திலிருந்து வகுப்பில் முன்னிலை வகிப்பதும் க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பரீட்சைகளில் சகல பாடங்களிலும் "ஏ' தரச் சித்தி பெறுவதும் அதியுயர் இஸட் புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்வதும் சாதாரண விடயமாகியுள்ளது.
அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திடைந்தவர் க.பொ.த. (சா/த) பரீட்சையுடன் அல்லது க.பொ.த. (உ/த) பரீட்சையுடன் பின்தங்கிப் போவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் அரைவாசிப் பேர் கூட பல்கலைக்கழகம் நுழைவதில்லை.
இவ்விதம் இவர்கள் அடுத்தடுத்த உயர் அடைவு மட்டங்களைப் பெற்றுக் கொள்ளாமல் பின்தங்கிப் போகின்றமைக்கு வேறு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.
பாடசாலையொன்றில் குறித்த ஓர் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரேயொரு மாணவர் சித்தியடைந்திருந்தார். அதுவே அம்மாணவரின் பாடசாலை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாகிவிட்டது. சித்தியடைந்தது முதல் அம்மாணவர் பென்சில், பேனை, கொப்பி, புத்தகம், கதிரை, மேசை என்பவற்றை வெறுக்கத் தொடங்கினார்.
பாடசாலைக்கு சமுகமளிப்பதைக் குறைத்துக் கொண்டார். பின்னர் நோயாளியாகி 6 ஆம் வகுப்பிலேயே பாடசாலையைக் கைவிட்டார். வைத்தியம், மருந்து, மாத்திரை என்று திரிந்த அவர் கடைசியாக கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்ததன் மூலம் ஓரளவு ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தார்.
மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுக்கவும் மாதாந்த உதவிப் பணம் வழங்கவுமே இப்புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுகின்றது. ஆனால் எந்நோக்கங்களுக்காக இப்பரீட்சை நடத்தப்படுகின்றதோ அந்நோக்கங்கள் சிறந்த முறையில் நிறைவேறுவதாகவும் இல்லை. புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகள் சித்திபெற வேண்டுமெனக் கருதும் சில பெற்றோர்,
அதன் மூலம் மாதாந்தம் பணம் கிடைப்பதையோ பிரபல பாடசாலையில் பிள்ளையைச் சேர்ப்பதையோ பெரிதாகக் கருதுவதில்லை. ஏனென்றால் அவ்விரு நோக்கங்களிலும் திருப்திகரமான முன்னேற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்க வில்லை.
புலமைப்பரிசில் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் அனுமதி கிடைத்தது. அவரது தந்தை ஏனைய பிள்ளைகளை தாயின் பராமரிப்பில் விட்டு விட்டு கொழும்பில் வாடகை அறையொன்றிலிருந்து மகனை அப்பாடசாலைக்கு அனுப்பி வந்தார். அங்கு சிறு தொழில் செய்து மகனைக் கவனித்து வந்த அவரால் தொடர்ந்து வந்த செலவுகளை ஈடுசெய்ய முடியவில்லை.
வகுப்பில் மகன் கெட்டிக்காரனாக இருந்தாலும் பல்வேறு தேவைகளுக்காகவும் அடிக்கடி பாடசாலையினால் கேட்கப்படும் பணத்தை செலுத்த முடியாமையாலும் அங்கு கல்வி கற்கும் ஏனைய செல்வந்தப் பிள்ளைகளுடன் ஈடு கொடுக்க முடியாமையாலும் ஓரிரு ஆண்டுகளிலேயே அம்மாணவர் மீண்டும் தமது கிராமத்துப் பாடசாலைக்குத் திரும்பி விட்டார்.
மேலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களில் அரைவாசிப் பேர் மாத்திரமே மாதாந்த உதவிப்பணம் பெறத் தகுதி பெறுகின்றனர். இவ்விதம் மாதாந்தம் அரசாங்கம் வழங்கும் 500 ரூபா பணம் எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. உண்மையிலேயே இப்பணம் வருடத்தில் 10 மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன.
அதேவேளை அப்பணத்தை பெறுவதற்காக ஒவ்வொரு தடவையும் தமது வருமானத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கிராம உத்தியோகத்தரைத் தேடியலைந்து, அவருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, அதில் கையொப்பம் பெறுவதே ஒரு பெரும் கதையாக உள்ளது.
எனவே சிறுபிள்ளைகளை உடல் உள ரீதியாகப் பாதிப்படையச் செய்வதும் இலகுவாகவும் அதிகளவிலும் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்காததும் நகர்ப்புறத்திலுள்ள பிரபல பாடசாலைகளில் தங்கி நின்று படிக்க கிராமப்புற ஏழை மாணவருக்கு முடியாதிருப்பதும் ஒரு சீரான சமநிலைக் கல்வியை வழங்காததுமான இப்புலமைப்பரிசில் பரீட்சை 5 ஆம் தரத்தில் எந்த வகையிலும் பொருத்தமானதாக இல்லை.



Post A Comment:
0 comments: