2014.01.08 வியாழக்கிழமை நடைபெற்று முடிந்த 7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான முடிவுகள் தேசிய அரசியலுக்கும் சிறுபான்மை அரசியலுக்கும் பல செய்திகளை வெளிப்படுத்திய ஒரு தேர்தல் முடிவாக அமைந்திருக்கிறது.
மாற்றத்தை நோக்கி ஒன்றிணைவோம் மைத்திரியின் 100 நாள் ஆட்சியில் புதிய நாடு என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் வெற்றிக்காக இந்த நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்திருக்கிறார்கள். இதனால் இலங்கை அரசியலில் மைத்திரி யுகம் என்ற புதியதோர் அரசியல் யுகம் உதயாமாகிறது. மஹிந்த யுகம் அஸ்தமனமாகியது.
இந்த நாட்டில் உரித்துக்கொண்ட மூன்று இனங்களுக்குமான ஒரு நல்லாட்சி மலர வேண்டும் என்ற எதிர்பாhப்பினை இத் தேர்தல் முடிவு நிறைவு செய்திருக்கிறது. இதில் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் வாக்குகளை மாத்திரம் கொண்டு ஒரு ஆட்சியை அமைக்க முடியும் என நிரூபிக்கப்பட்ட வாக்குப் பலம் இத்தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பலப்படுத்தியுள்ளது.
இத்தேர்தலில் மஹிந்தராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் அது முழுமையாக சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் அடையப் பெற்ற வெற்றியாக அமைந்திருக்கும். இதில் மைத்திரபால சிறிசேனா அவர்கள் பெற்ற வெற்றியானது இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களான முஸ்லிம், தமிழ் சமூகங்களின் வாக்குகளால் பெற்ற வெற்றியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தேர்தல் முடிவுகளும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம் தமிழ் சமூகங்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களின் தேர்தல் முடிவுகளும் இதனை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றியினால் அமையும் ஆட்சியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எத்தகைய தீர்வுகள் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பினைவிடவும் மஹிந்தவின் ஆட்சி மாற வேண்டும் என்ற எதிர்ப்புணர்வு மேலோங்கி இருந்தமை இத்தேர்தலில் சிறுபான்மைச்; சமூகங்களால் காட்டப்பட்டிருக்கிறது.
இக்கருத்து வெளிப்படும் வகையாக அலரிமாளிகையிலிருந்து தனது மெதமுலன இருப்பிடத்திற்குத் திரும்பிய மஹிந்த அவர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேசுகின்றபோது : நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் தமக்கு வாக்களித்த போதும் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களே தமக்கு வாக்களிக்காமல் தோற்கடித்ததாக குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதன்படி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் வெற்றி சிறுபான்மைச் சமூகங்களின் வெற்றி என்றே பார்க்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் எதிர்கால அரசியல் விடிவுக்காக கிடைத்த வெ;றறியாகவே இது உணரப்படுகிறது. குறிப்பாக இத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா பெற்ற வெற்றியை தாங்கள் ஒவ்வொருவரும் பெற்ற வெற்றியாகக் கருதி முஸ்லிம் சமூகம் இதனைக் கொண்டாடி தங்களுக்கு கிடைத்த ஒரு சுதந்திரமாகவும் விடுதலையாகவும் உணர்ந்து மகிழ்கின்றார்கள்.
கடந்த 30 வருடகால யுத்தத்தில் முஸ்லிம் சமூகம் பல பேரிழப்புக்களை கண்டபோது அவற்றை அரசு பாராமுகமாக இருந்தும் இப்படியான ஒரு எதிர்ப்புணர்வை ஆட்சியிலிருந்த அரசுக்கு எதிராக வெளிப்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தங்கள் வாக்குகளை அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால் பொதுபல சேனா திட்டமிட்டு முஸ்லிம் மக்கள் மீது ஏவிய அழித்தொழிப்புகளுக்கு ஒரு பாடம் புகட்டவும் அதற்குப் பழிவாங்கவும் பொருத்தமான ஒரு சந்தர்ப்பமாக முஸ்லிம் மக்கள் இத்தேர்தலில் தங்கள் வாக்குகளை ஒரு ஆயுதமாகக் கருதி அளித்திருக்கிறார்கள். இதில் மஹிந்த தோற்கடிக்கப்பட்டார் என்பதைவிடவும் பொதுபலசேனா தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதே முஸ்லிம்கள் கூறும் செய்தியாகும்.
இதன்படி மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றியை சுயநலமாகக் கூறுவதாயின், முஸ்லிம்களின் வெற்றியாகவே கூறலாம். காரணம் மஹிந்தவின் இரண்டாவது ஆட்சிக்காலம் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் சமய வழிபாடுகள், பொருளாதாரம், கல்வி, வர்த்தக நடவடிக்கைகள், கலாசாரப் பண்பாடுகள் என்று ஒவ்வொரு விடயங்களையும் குறிவைத்து தகர்த்துக்கொண்டு வந்தது இதனை எதிர்த்து வன்முறைகளைக் கையாண்டு போராட முடியாமல் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மஹிந்தவின் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கும் போராட்டத்தைக் கையில் எடுத்தார்கள், இதில் 2010 இற்கு பிறகு நடைறெ;ற மாகாணசபைத் தேர்தல்களில் அரசுக்கு எதிராக தங்கள் வாக்குகளை அளித்து அதை நிரூபித்தார்கள்.
இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தங்களது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளின் முடிவுகளையும் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் கருத்தில் எடுக்காமல் மஹிந்தவுக்கு எதிராக தங்கள் வாக்குகளை அளிக்கும் முடிவினை சுயமாக எடுத்து ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை நன்கு கூராக்கியே வைத்திருந்தார்கள்.
இவ்வாறு இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமான ஒரு முடிவினை எடுத்ததுபோல் மஹிந்தவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள நிலையில் தேர்தல் முடிவும் மஹிந்த வெற்றி பெறுவதாக அமைந்தால் இலங்கை முஸ்லிம்களின் நிலை என்னவாகும்? அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு என்ன உத்தரவாதமிருக்கிறது? என்ற அச்சம் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்வரை இருந்துகொண்டே இருந்தது. அதாவது மஹிந்த தோற்றுப்போக வேண்டும் என்ற உள் எண்ணம் இருந்தது போலவே மஹிந்த தோற்றுப்போவாரா எனும் உள் அச்சமும் இருந்தது.
இதனால்தான் முஸ்லிம்களின் முடிவு சரியாக இருந்தாலும் முஸ்லிம் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் நடுநிலையாக அல்லது மஹிந்தவுடன் இருந்து எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு ஒரு உத்தரவாதத்தைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் பல கருத்துக்களை மஹிந்தவின் தோல்வியில் கொண்ட சந்தேகத்துடன் கூறிக்கொண்டிருந்தோம். மைத்திரியின் வெற்றி முஸ்லிம்களுக்கு ஆபத்தானதல்ல ஆனால் மஹிந்தவின் வெற்றி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலானது என்ற சமூக நோக்கமே அக்கருத்துக்களுக்கான காரணம்.
இப்படி ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகங்களுக்கும் கிடைத்த இந்த வெற்றியானது ஒரு தேர்தல் வெற்றியாக மாத்திரம் அமைந்துவிடக்கூடாது மாறாக அது ஆட்சியில் கிடைத்த வெற்றியாக நிலைத்து சிறுபான்மைச் சமூகங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அது பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இந்த வெற்றிக்கான முழுமாயான கௌரவம் கிடைத்தாக அமையும்.
தற்போதுள்ள மைத்திரிபால சிறிசேனாவின் 100 நாள் வேலைத்திட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எத்தகைய தீர்வுகளையும் குறிப்பிடாத நிலையிலும் இந்த ஆட்சி மாற்றத்தேயே முதல் கட்டத் தீர்வாகவும் ஒரு ஆறுதலான மாற்றமாகவும் முஸ்லிம் மக்கள் உணர்கின்றார்கள். சுதந்திரமான மதவழிபாடுகளையும் சமத்துவமான ஆட்சிப் பகிர்வுகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கேட்பதே இந்த மைத்திரி யுகத்தில் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் அவசரமான ஒரு தீர்வாகும். மாறாக முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கான அமைச்சுப்பதவிகளையோ தனிப்பட்ட அரசியல் இலாபங்களையோ மக்கள் எதிர்பார்க்கவில்லை ஏனெனில் இத்தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்கள் வாக்குகளை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்காக அளிக்கவில்லை.
எனவே இந்த ஆட்சியில் தலைமைத்துவப்போட்டிகளை இடுவதோ, அமைச்சுப்பதவிகளுக்காக முட்டிமோதுவதோ இல்லாமல் சமூக நலனையும் சமூக அரசியலையும் முன்வைத்து சமூகம் இந்த ஆட்சியில் எதிர்பார்த்து வாக்களித்திருக்கும் தீர்வுகளை எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் பக்கம் நின்று முதலில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லாது பதவிகளுக்காக முண்டியடித்துக்கொண்டும் பின்கதவு முன்கதவு என்று ஆட்சிக்குள் சுயஇலாபம் தேடுவதற்கும் முற்படுகின்றவர்கள் அடுத்த ஒரு தேர்தலில் மக்களால் நிச்சயம் தூக்கி எறியப்படுவார்கள் என்பதற்கும் இத்தேர்தல் பலபடிப்பினைகளை முஸ்லிம் சமூக அரசியலில் கொடுத்திருக்கிறது.
எனவே மஹிந்தவின் தேர்தல் தோல்வி இந்த நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு மிகப்பெரும் வழியைத் திறந்துவிட்டிருக்கிறது. வடக்கு கிழக்கு மக்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி மாற்றமானது குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் ஆட்சியாக அம்மக்களுக்கான பல அரசியல் தீர்வுகளையும் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்.
இதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆளுநர்களை முதலில் மாற்றிக்கொள்வதை இந்த மக்களுக்கு கிடைக்கும் மற்றுமொரு சுதந்திரமாகப் பார்க்கலாம். நாடு மஹிந்தவிடமிருந்து விடுபட்டதுபோல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இந்த ஆளுநர்களிடமிருந்து விடுபட வேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் மைத்திரிபால சிறிசேனா அவர்களின் வெற்றிக்காக அளித்த வாக்குகளுக்கு ஒரு மைமாறாக வடக்கிற்கு ஒரு தமிழ் ஆளுநரையும் கிழக்கிற்கு ஒரு முஸ்லிம் அளுநரையும் நியமித்து இந்த ஆட்சியின் மீதான சமத்துவப் பங்களிப்பை இவ்விரு மாகாணங்களுக்கும் அளிக்கும் ஒரு யுகமாக மைத்திரி யுகம் தோன்றுமா?


.jpg)
Post A Comment:
0 comments: