மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து, முஸ்லிம்கள் மேற்கொண்டுவரும் வெற்றிக்கொண்டாட்டங்களில் நிதானமிழந்த செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு பங்கத்தை விளைவித்துவிடலாமென முஸ்லிம் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்ததாவது,
மைத்தியின் வெற்றிக்கு முஸ்லிம்கள் மாத்திரம் காரணமல்ல. ஆனால் முஸ்லிம்களும் பங்களிப்புச் செய்துள்ளனர். முஸ்லிம்களை போன்றே பௌத்தசிங்களவர்களும் மைத்திரியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த யதார்த்தத்தை மறந்து முஸ்லிம் சமூகமானது செயற்படமுடியாது. பெரும்பான்மையான பௌத்தசிங்கள மக்கள் வாழும் இந்நாட்டில், முஸ்லிம்கள் எப்படி செயற்பட வேண்டுமென்பதற்கான அழகிய நடைமுறைகள் உண்டு.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவற்கு முஸ்லிம்கள் பங்களித்துள்ளனர். தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் இணைந்துள்ளனர். இதுவே இத்தேர்தலின் வெளிப்பாடு. தற்போதுள்ள நிலையில் சிங்கள - முஸ்லிம் உறவு மேலும் கட்டிவளர்க்கப்பட வேண்டும். இதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.
வெற்றிக்கொண்டாத்தில் ஈடுபடுவது குற்றமல்ல. மாறாக நமது வெற்றிக்கொண்டாட்டம் சிங்களபௌத்தர்களை சீண்டுவதாகவோ அல்லது இனமோதலுக்கு வழிவகுப்பதாக அமைந்துதுவிடக்கூடாது. இதுகுறித்து, நமது சமூக இளைஞர்களை நல்வழிநடாத்த வேண்டிய பாரிய பொறுப்பு பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு உண்டு என்பதை முஸ்லிம் கவுன்சில் அழுத்திக்கூற விரும்புகிறது எனவும் என்.எம்.அமீன் மேலும் தெரிவித்தார்.


.jpg)
Post A Comment:
0 comments: