(Vi)
புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் ஹிஸ்புல்லாஹ்வையோ அதவுல்லாஹ்வையோ எக்காரணம் கொண்டும் புதிய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளக் கூடாது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் வலியுறுத்தியுள்ளன.
புதிய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோரை தொடர்பு கொண்டு ஹிஸ்புல்லாஹ் தனது வேண்டுகோளை முன் வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவுடன் கடைசி நேரம் வரை நெருக்கமான உறவைக் கொண்டிருந்த ஹிஸ்புல்லாஹ்வையோ அதாவுல்லாஹ்வையோ புதிய அரசில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் கட்சித் தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று காலை மு.கா. தலைவர் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே தமது எதிர்ப்பை ஒரே குரலில் முன்வைத்துள்ளனர்.
அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் தமது கட்சியின் கட்டுக் கோப்பை மீறி மஹிந்த ராஜபக்சவுக்காக தீவிர பிரசாரம் செய்த ஹிஸ்புல்லாஹ்வை புதிய அரசாங்கத்தில் உள்வாங்கக் கூடாது என ரணில் விக்ரமசிங்க மற்றும் சந்திரிகா அம்மையாரிடம் வலியிறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
எனினும் பாராளுமன்றத்தில் தமக்கான பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு புதிய அரசாங்கத்திற்கு மேலும் 21 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.
இதன் பொருட்டு ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் மற்றும் தொண்டமான் உள்ளிட்டோரை உள்வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் புதிய அரசாங்கத்திற்கு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.


.jpg)
Post A Comment:
0 comments: