(மூத்த ஊடகவியலாளர் Mohamed Naushad)
இன்று 10-1-2015 நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியை முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இன்னமும் முழுமையாகக் கைவிடவில்லையாம்.
நேற்று கடைசியாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, எஸ்.பி.திஸாநாயக்க ஆகிய இருவர் மட்டுமே இதற்கு ஆதரவாக இருந்துள்ளனர் மற்றவர்கள் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
ஆனால் புலி பதுங்கியது பயத்தில் அல்ல பாய்வதற்கான அடுத்த கட்ட அடியை திட்டமிடவே என்பது இப்போது தெரியவந்துள்ளது. பொது சன ஐக்கிய முன்னணி சார்பாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் இருவரை ராஜினாமா செய்யுமாறு தற்போது நெருக்குதல் வழங்கப்பட்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் ஒரேயடியாக பாராளுமன்றம் பிரவேசிக்க வசதியாகவே இந்த நெருக்குதல் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
பாராளுமன்றத்துக்கு வந்து புதிய ஆட்சிக்குள் குழப்பங்களை உண்டாக்கி அதன் மூலம் அரசை வலுவிழக்க வைப்பதே திட்டம். அது மட்டும் அல்ல அதை விட பயங்கரமானது நாட்டில் எங்காவது ஒரு இடத்தில் குறிப்பாக முஸ்லிம் அல்லது தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் காடையர்களை ஏவிவிட்டு இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்தி அதன் மூலம் இனக்கலவரம் ஒன்றை தூண்டிவிடவும் அதன் மூலம் புதிய அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்க வைப்பதும் தன்னால் மட்டுமே கலவரங்களை கட்டுப்படுத்த முடியும் என்ற மாயையை ஏற்படுத்துவதுமே மெதமுலனையில் ஓய்வாக இருந்து யோசிக்கப்பட்டுள்ள திட்டங்களாகும்.
ஆனால் பொலிஸ் புலனாய்வு பிரிவு இந்த விடயத்தில் விழிப்பாக உள்ளது. இந்த சதித்திட்டங்கள் பற்றி அவர்கள் புதிய ஆளும் தரப்பின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டுவந்துள்ளனர். புதிய ஆளும் தரப்பு உஷாரடைந்து உரிய மாற்று வழிகளில் உடனடியாக கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறேனும் தமிழ் முஸ்லிம் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.



Post A Comment:
0 comments: