''வெற்றி'' குறித்து மஹிந்தவும், மைத்திரியும் போட்டுள்ள கணக்கு...! (ஸ்பெஷல் றிப்போர்ட்)

Share it:
ad
-நஜீப் பின் கபூர்-

நமது தேர்தல் களத்தில் 19 வேட்பாளர்கள். இவர்களில் 17 பேரை எவரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. மக்கள் மஹிந்த-மைத்திரி என்றுதான் உச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள். வரலாற்றில் என்றுமில்லாதவாறு இந்த முறை பொது மக்கள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அடுத்த வாரம் நாம் எதாவது செய்திகளை எழுதுகின்ற போது 2015 ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடந்து புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிய வந்து, அது பற்றிய விமர்சனங்களை மக்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது தேர்தல் அசாதரணமாக நடந்து அது பற்றிய விடயங்களை நாடும் சர்வதேசமும் தனது கண்டனங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும். அல்லது தேர்தல் நேர்மையாகவோ அநீதியாகவோ நடந்து நட்டில் வன்முறைகள் கூட நடந்து கொண்டிருக்கலாம். 

நாட்டில் நீதியும் நேர்மையுமான தேர்தல் நடந்து நமது நாட்டில் அமைதியான முறையில் ஏழாவது ஜனாதிபதி தெரிவாக வேண்டும் என்று இறைவனிடத்தில் கேட்டு தலைப்புக்குள் வருவோம்.

நாம் எழுதுகின்ற கட்டுரைகளுக்கு நாமேதான் இது வரை தலைப்புக்களையும் கொடுத்து வந்திருக்கின்றோம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தேர்தலாக, 2015 ஜனாதிபதித் தேர்தல் பார்க்கப்படுவதால், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் தமது வெற்றி வாய்ப்புக்கள் தொடர்பாக எப்படிக் கற்பணை பண்ணுகின்றார்கள் -பார்க்கின்றார்கள் என்ற செய்தியையே இந்த வாரம் நமது கட்டுரைக்குத் தலைப்பாகக் கொடுத்து, அவர்கள் தலைப்புக்கு எமது கருத்தை  சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

முதலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிலைப்பாட்டை பார்ப்போம். தனக்கு 20 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வேண்டும். அந்த வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று மக்களைக் கேட்கின்றார் மஹிந்த ராஜபக்ஷ. பதிவு செய்யப்பட்ட ஒன்றரைக்கோடி  (15000000). வாக்காளர்களில்  75 சதவீதமானவர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றார்கள் என்று எடுத்துக் கொண்டால், ஒருகோடியே பதினைந்து இலட்சம் (11500000)  பேர் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள். 

அப்படி ஜனாதிபதி எதிபார்க்கின்ற - கேட்கின்ற வாக்கு அவருக்குக் கிடைத்தால் அந்தத் தொகை எழுபத்தி ஏழு இலட்சத்தி ஐம்பதாயிரம் (7750000) வாக்குகள் என்ற இலக்கை எட்ட வேண்டும். அப்படி மஹிந்த ராஜபக்ஷ அந்தத் தொகையைப் பெற்றால் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிக்கு முப்பத்தி ஏழு இலட்சத்தி ஐம்பதாயிரம் (3750000) வாக்குகள் மட்டுமே கிடைக்க முடியும். எனவே இந்தக் கணிப்பீட்டின் படி மஹிந்த ராஜபக்ஷ செல்லுபடியான வாக்கில் 67 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அவர் இந்தத் தேர்தலில் எதிர் பார்க்கின்றார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது வெற்றி வாய்ப்புத் தொடர்பாக அப்படிக் கணக்குப் பார்க்கின்ற போது மைத்திரி தனது வெற்றி வாய்ப்புப் பற்றி என்ன சொல்கின்றார் என்பதனை இப்போது சற்றப் பார்பப்போம். தனக்கு 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க இருக்கின்றார்கள் என்று மைத்திரி நம்பிக்கை இருக்கின்றது. எனவே மைத்திரி சொல்லும்படியான வாக்குக்    கிடைத்தால்  என்பத்தி ஆறு இலட்சத்தி இருபத்தி ஐயாயிரம் (8625000) வாக்குகளை அவர் எதிர்பார்க்கின்றார்.  

மைத்திரி கணக்குப்படி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இருபத்தி ஏழு இலட்சத்தி எழுபத்தி ஐயாயிரம் (2775000) வாக்குகள் மட்டுமே கிடைக்கும். அது மொத்த வாக்கில் 24 வீதம். ஏனைய அனைத்து 17 வேட்பாளர்களும் ஏறக்குறைய ஒரு இலட்சம் வாக்குகள் பெறுகின்றார்கள் என்று எடுத்துக் கொண்டு நாம் இந்தக் கணக்கைப் போட்டுப் பார்த்தால் இப்படி ஒரு கணக்கிற்குத்தான் நாம் வர முடியும்.

மஹிந்த ராஜபக்ஷ 67 சதவீத வாக்கையும் மைத்திரி 75 சதவீத வாக்கையும் எதிர்பார்த்தாலும், அவர்களுக்கு  விசுவாசமானவர்கள்  அந்தக் கணக்குகளைச் சொல்லி மேடைகளில் முழங்கி வாக்காளர்களை வேண்டுமானால் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால் அந்த இரு பிரதான வேட்பாளர்களும் எதிர்பார்க்கின்ற அளவில் அவர்களது வெற்றி வாய்ப்புக்கள் கிடையாது என்று நாம் உறுதியாக  அடித்துக் கூறுகின்றோம். நாம் கடந்த வாரம் குறிப்பிட்டது போன்று இந்த முறை பிரதான வேட்பாளர்களான மஹிந்தவுக்கும் மைத்திரிக்குமிடயே கடுமையான போட்டி நிலவுகின்றது. எவர் வெற்றி பெற்றாலும் அந்தத் தொகை ஐந்து இலட்சத்தைத் தாண்ட மாட்டாது என்பது எமது பிந்திய கணிப்பாக இருந்து வருகின்றது.

எனவே பொது மக்கள், வேட்பாளர்கள் அவர்களே தமது வெற்றி வாய்ப்புத் தொடர்பாக  கொடுக்கின்ற சான்றிதழ்களை- கணக்குகளை நம்ப வேண்டியதில்லை என்பது எமது ஆலோசனையாகும்.

எமது பிந்திய கணிப்புக்களின் படி  இரத்தினபுரி, குருனாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, மொனராகல, ஆகிய ஏழு மாவட்டங்களில் ஜனாதிபதி மஹிந்த  ராஜபஷவுக்கு அதிகளவு ஆதரவு இருப்பதாகத் தெரிகின்றது.

கொழும்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நுவரெலிய, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மடக்களப்பு, திகாமடுல்ல என்ற பதினொரு மாவட்டங்களில் மைத்திரி கையோங்கி இருப்பதைப் பார்க்க முடிகின்றது.

கம்பஹா, கேகாலை, களுத்துறை, புத்தளம், என்ற நான்கு மாவட்டங்கிளில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிரிசேனாவுக்குமிடையே  கடுமையான போட்டி நிழவுகின்றது.

இதற்கிடையில் கட்சி தாவல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. ஆளும் தரப்பிலிருந்து மைத்திரி அணிக்குத் தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 தாண்டி இருக்கின்றது. அதே வேளை 435 க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மைத்திரி தரப்புக்குத் தாவி இருக்கின்றார்கள். அதேபோன்று சில பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் ஆளும் தரப்புக்குத் தாவியும் இருக்கின்றானர். என்றாலும் ஒப்பீட்டளவில் மைத்திரி தரப்புக்குத் தாவியவர்களை விட இது எண்ணிக்கையில் மிகக் குறைந்த தொகையாக இருக்கின்றது.

இந்த கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கும் நேரம் வரை பெப்ரல் அமைப்பிற்கு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 621 முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது. இவை அனைத்தும்போல் பிரதான எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு எதிரான வன்முறைகள் என்று தெரிகின்றது. என்றாலும் இவற்றில் ஐம்பது முதல் அறுபது வரையிலான வன்முறைகள் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான வன்முறைகள் என்றும் பதிவாகி இருக்கின்றது. இதில் 180 வன்முறைகள் மற்றும் 60 சம்பவங்கள் வைத்தியசாலை வரை செல்ல வேண்டியவையாக இருந்திருக்கின்றன.

இதற்கிடையில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டிக்கு வந்த பலர் பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து நவ சிங்கள உறுமய வேட்பாளர் மனமேந்திர மற்றும் தொழிற் கட்சி வேட்பாளர் லியனகே போட்டியிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தமது ஆதரவை தெரிவித்திருக்கின்றார்கள். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய பொலிவூட் முன்னணி நட்சத்திரம் சல்மான் கான் இலங்கை வந்து சேர்ந்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்றார் என்று எதிரணியினர் தமது பிரச்சாரத்தை முடக்கி விட்டனர். அத்துடன் ராஜபஷவுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கின்ற ராவண பலகாய என்ற பௌத்த அமைப்புக் கூட சல்மான்கான் வருகைக்குத் தமது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

இங்கு வந்திருந்த நேரம் சல்மான் கான் பயணம் செய்த டிபண்டர் ரக வண்டி இரு இளம் பாதசாரிகளை மோதி காயப்படுத்தியதால் அவர்கள்  தற்போது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாhகள்;. மேலும் இந்தியாவில் ராஜபக்கஷவின் தேர்தல் பணிக்காக சல்மான்கான் சென்றமை குறித்து பலத்த கண்டனங்களும் எதிர்ப்பும் கிளம்பியதால் அந்த பொலிவூட் கோஷ்டிக்கு உடனடியாக நாட்டை விட்டு வந்ததும் வராததுமாக ஓடிப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. சல்மான் கானை இந்த நேரத்தில் இங்கு கொண்டு வந்த விடயத்தில் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களுக்கிடையேயும் கருத்து முறன்பாடுகளும் பகிரங்க விமர்சனங்களும் எழும்பி இருந்தது.

சல்மான் கான் இங்கு வந்திருந்த நேரத்தில் உள்ளுர் களைஞர்கள் நடாத்திய வீதி நாடகத்தின் மீது ஆளும்தரப்பு அரசியல்வாதி ஒருவர் தலைமையினா குழு நடாத்திய தாக்குதலில் அவர்கள் காயப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட விவகாரம் உள்நாட்டுக் களைஞர்களின் கண்டனங்களுக்கு இலக்கி அதுவும் ராஜபக்ஷவுக்கு நெருக்கடியாக அமைந்தது. ராஜபக்ஷவின் புதல்வர்களின் முதிர்ச்சியற்ற அரசியல் நடவடிக்கைகள் ராஜபக்ஷவுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கின்றது என்று ஆளும்தரப்பு மூத்த தலைவர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.

முன்ணிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குனரத்தினம் என்னும் குமார் மஹத்திய கடந்த வியாழக்கிழமை மீண்டும் இலங்கைக்கு அரசியல் நடவடிக்கைகளுக்காக வருகை தந்திருக்கின்றார். இவர் கடந்த முறை வந்த போது அவர் இங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். ஆனால் இந்த முறை இங்கு வந்திருக்கின்ற அவருக்கு சுதந்திரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொள்ள இடமளிக்கப்பட்டிருக்கின்றது. 

குமார் மஹத்தியாவின் வருகை ஆளும் தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அல்லது ஜேவிபிக்கு எதிரான பிரச்சாரத்திற்காக உபயோகப்படுத்துவதற்காக இங்கு அழைத்து வரப்பட்டிருக்கக்கூடும் என்று பரவலாக பேசப் படுகின்றது. எது எப்படி இருந்தாலும் இந்தத் தேர்தலில் சோசலிச முன்ணிலைக் கட்சி வேட்பாளர் நாகொட களத்தில் இருப்தனால் அவர்கள் இந்தத் தேர்தலில் எடுக்கின்ற வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களின் பலத்தை இந்த நாட்டு மக்களுக்கு கண்டு கொள்ள முடியுமாக இருக்கும். ஒரு முன்னணி சிங்களப் பத்திரிகை ஆளும்தரப்பின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே அவர் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றார் என்று கூறுகின்றது.

இந்தத் தேர்தலில் ஆளும் தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளராக களமிறங்கி இருக்கின்ற மைத்திரிபாலவுக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகப் பெரிய நெருக்கடியாக வந்திருப்பது ரவூப் ஹக்கீமின் கரையோர முஸ்லிம் மாவட்டக் கோரிக்கை தற்போது எழுந்திருக்கின்றது. உண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவை எந்த விதமான உடன்பாடோ கோரிக்கைகளோ இன்றி மைத்திரி அணியில் இணைந்து கொண்டது.

ஆளும் தரப்பினர் மைத்திரி தரப்பினர் பிரிவினைவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டைக் கூறு போட முனைகின்றார்கள் என்ற வாதத்தை தற்போது முன்னெடுத்த வருகின்றானர். இந்த பிரச்சாரங்கள் கிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரிபாலவின் செல்வாக்கில் தாக்கங்களைச் செலுத்தக்கூடும்.

கடைசி வரையும் மு.கா. - ரவூப் ஹக்கீம் கரையோர மாவட்டம் என்ற விடயம் தொடர்பாக ஆளும் தரப்புடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தியும் மோதல் போக்குடனும் செய்லாற்றி வந்தார். இந்த விவகாரத்தை அமைச்சரவைக்குக் கூட அவர்கள் எடுத்தச் சென்று அங்கு அது நிராகரிக்கப்பட்ட பின்னணியில்தான் தற்போது ஹக்கீம் தரப்பினர் மைத்திரி பக்கம் தாவி இருக்கின்றார்கள். எனவே மு.கா. ஹக்கீம் தரப்பினர் தனி மாவட்டம் கேட்டார்கள் நாங்கள் தரமுடியாது என்று கூறியதால் இப்போது அவர்கள் அதனை வழங்க சம்மதித்தவர்களின் பக்கம் செல்வதற்காக ஆளும் தரப்பிலிருந்து வெளியேறி இருக்கின்றார்கள். 

எனவே நாங்கள் தரமுடியாது என்ற  கரையோர மாவட்டத்தை மைத்திரி கொடுக்க இணங்கி இருப்பதால்தான் ஹக்கீம் மைத்திரியை ஆதரிக்கின்றார் என்று கதையை சிங்கள மக்கள் மத்தியில் சந்தைப்படுத்தி வருகின்றது ஆளும் தரப்பு. நிச்சயம் அது சிங்களப் பாமர மக்கள் மத்தியில் எடுபடும் - தாக்கத்தைச் செலுத்தும். 

எமது கணிப்பீட்டின் படி ரவூப் ஹக்கீம் பொறுத்தமில்லாத நேரத்தில் அளும் தரப்புக்கு விடுத்த கோரிக்கை மற்றும் அவர் கடைசி நேரம் போட்ட பல்டி மைத்திரிக்கு தேர்தலில் நன்மையை விட சேதத்தை உண்டுபண்ணும் என்றுதான் தெரிகின்றது. அந்த சேதம் எந்தளவுக்கு நடந்திருக்கின்றது என்பதனை 8ம் திகதிதான் பார்கக் வேண்டும். 

மு.கா. மைத்திரிக்கு வெளியிலிருந்து கொடுக்கின்ற ஆதரவை விட உள்ளே வந்து கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஆதரவு பொது வேட்பாளருக்கு அதிகளவு சேதத்தையே கொடுக்கும். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஒரு நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்திருந்த நிலையிலேயே சிவபூசையில் கரடி புகுந்தது போல் மைத்திரியின் தேர்தல் பணிகளில் தற்போது  மு.கா. காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆனால் கரையோர மாவட்டம் தொடர்பாக ஹக்கீம் தற்போது ஒரு புதுக் கதையைச் சொல்கின்றார். ஆளும் தரப்பிலுள்ள முக்கிய அமைச்சர்கள்தான் தமிழ் பேசும் மக்களின் நன்மைகருதி ஒரு மேலதிக தமிழ் அரச அதிபரை வழங்க முன்வந்தார்கள். ஆனால் இப்பபோது கதையை மாற்றிப் பேசுகின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். இவர்கள் என்ன சொன்னாலும் நடந்த கதையும் நடக்கின்ற கதைகளும் மக்களுக்கு நன்றாகப் புரிகின்றது.

மைத்திரி அணிக்கு ஆதரவு வழங்குவதாக உறுதிமொழி கொடுத்த மு.கா.உறுப்பினர்கள் பலர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தலைப் பட்டிருக்கின்றார்கள். பகிரங்கமாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் மேடைகளில் ஏறியும் அவர்கள் தற்போது பிரச்சாரங்களையும்   ஆரம்பித்திருக்கின்றார்கள். அதே போன்று சில தமிழ் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்தக் காரியத்தைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தமது இறுதிக் கட்டப் பரப்புரைப் போரை தற்போது அரச ஊடகங்களைப் பயன்படுத்தி உச்ச கட்டத்தில் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் ஆணையாளர் கட்டளைகளை அரச ஊடகங்கள் மதிக்காத  அளவு நிலமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது. எமது மதிப்பீட்டின் படி மைத்திரி மூன்று இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வருகின்றார். உள் நாட்டில் நெருக்கடி நிலைக்கு அதிக வாய்ப்புக்கள் - அரசியல் எரி மலை குமுறிக் கொண்டிருக்கின்றது.
Share it:

Post A Comment:

0 comments: