'வெலே சுதா' குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

Share it:
ad
போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவுடன் தொடர்புவைத்திருந்த 6 பேரிடம் நடத்திய விசாரணைகளிலிருந்து, போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர்களுக்கும், முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்பு இருந்தமைக்கான தகவல்கள் கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்ட வெலே சுதா என அழைக்கப்படும் கம்பொல விதானலாகே டொன் வசந்த குமார என்பவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமான நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர்.

இவருடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆறு பேரில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொலிஸ் அதிகாரிகள் மூவர், அரசியல் வாதியொருவரின் பிரத்தியேக செயலாளர் உள்ளடங்குகின்றனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணைகளின் பேரில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் கொள்வனவு செய்த சொத்தொன்றுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட நிதிக்கும் இடையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் இது தொடர்பில் வெலே சுதா எதுவித தகவலும் இதுவரை வெளியிடவில்லை.

இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவும், மரணதண்டனை வரை அவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கவும் பொலிஸ் திணைக்களம் தயாராக இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

வெலே சுதா பாகிஸ்தானிலிருந்து 185 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களை உழவு இயந்திரங்களின் டயர்களில் மறைத்து அனுப்புவதற்கு முயற்சித்துள்ளார். இதுதொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு போலி கடவுச்சீட்டின் மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற வெலேசுதா, சிங்கப்பூர், பாகிஸ்தான், டுபாய் என பல்வேறு நாடுகளில் தங்கியிருந்துள்ளார்.

பாகிஸ்தான், டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் இவர் ஈடுபட்டிருந்ததுடன், ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்பவர்களுக்கு சட்டவிரோதமான விசாக்களை வழங்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து வெலே சுதா அனுப்பிய போதைப்பொருட்களுக்கு மருதானை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் முகவர்களாக செயற்பட்டுள்ளனர்.

இதனைவிட துணை முகவர்களாக நாடு முழுவதிலும் 40 பேர் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக வெலே சுதா விசாரணைகளில் கூறியுள்ளார். போதைப்பொருள் மூலம் கிடைக்கும் பணம் சட்டவிரோத பணபரிமாற்று முறையான உண்டியல் முறைமூலம் பாகிஸ்தானிலுள்ள வெலே சுதாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்தும் விசாரிக்கப்படவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இவருடன் தொடர்புபட்டிருந்த 6 பேரிடம் தற்பொழுது விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதுவரை பதியப்பட்ட சாட்சியங்களில் எவர்மீதும் இன்னமும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு 25 இலட்சம் ரூபா, 6 இலட்சம் ரூபா என பலதரப்பட்ட பெறுமதியிலான நிதி வழங்கப்பட்டுள்ளமை விசாரணைக ளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புபட்டிருந்தார்கள் என உறுதிப்படுத்தப்பட்டால் அவர் யாராக இருந்தாலும் உடனடியாகக் கைதுசெய் யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய சட்டரீதியான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: