ஐரோப்பிய நாடுகளில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரை மனிதாபிமான முறையில் ஒருங்கிணைத்து செயல்பட நாம் முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வாஷிங்டனில் கூறினார்.
பிரான்ஸ் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் மீது இஸ்லாமிய வாதிகளின் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நேற்று வாஷிங்டனில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுடன் பேசினார்கள்.
அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது,
பிரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது இஸ்லாமிய வாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதேபோல், இங்கிலாந்து உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய இயக்கங்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றன. அவர்களின் தாக்குதல்களை முறியடிக்க, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இஸ்லாமிய சமூக மக்களிடம் மனிதாபிமானத்துடன் அணுகி, அவர்களின் விருப்பம் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதுடன், அந்நாட்டு அரசுகளுடன் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு நாம் உதவ வேண்டும்.
ஐரோப்பிய அரசுகளின் மீது வெறுப்பில் இருக்கும் இஸ்லாமிய மக்களை குறிவைத்துதான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். எனவே அவர்களை போலீஸ் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் ஒடுக்க முற்பட்டால், தீவிரவாத இயக்கத்திற்குதான் ஆதரவு பெருகும்.
இதனால் அந்தந்த நாட்டின் அரசமைப்பு மீது இஸ்லாமிய மக்களுக்கு வெறுப்பு அதிகரிக்கும். அதன்மூலம் வன்முறை தாக்குதல், போர் உள்ளிட்டவை நிகழ வாய்ப்பு ஏற்படும். இதைத் தடுக்க, நாம் அனைவரும் இஸ்லாமிய மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா
வலியுறுத்தி கூறினார்.



Post A Comment:
0 comments: