பேராதெனிய பல்கலைக்கழக அரசியல் துரை முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளர் எம் .ஓ .ஏ. த ஸொய்ஸா
உரையாடல் :பாலித்த சேனா நாயக்க தமிழில் - மீயல்லை ஹரீஸ்
பயங்கர வாதத்தை தோல்வியடையச் செய்து நாட்டில் சமாதானத்தையும் மக்களுக்கு சுதந்திரத்தையும் அண்மித்துக் கொடுத்து அனைத்து மக்களினதும் அடி மனதில் பதிந்திருந்த பீதியை அகற்றியது மஹிந்த ராஜபக்ஷ அவர்களே . இதற்கு மக்கள் அவருக்கு செய்த நன்றி உபகாரமே இரண்டாம் முறையும் அவர் வெற்றியீட்டக் காரணமாகியது .
ஆனாலும் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தனது ஆட்சியை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணான முறையில் செயற் படுத்தியதே இம்முறை தோல்வி அடைந்த தற்கான காரணம் என்று கூறும் பேராதெனிய பல்கலைக்கழக அரசியல் துரை முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளர் எம் .ஓ .ஏ. த ஸொய்ஸா அவர்கள் புது ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன அவர்கள் எதிர் நோக்கும் சவால் களைப் பற்றியும் இந்த உரையாடலில் பகுப்பாய்வு செய்கிறார்கள்.
பயங்கர வாதத்தை அழித்து நாட்டில் சமாதானத்தையும் மக்களுக்கு சுதந்திரத்தையும் உருவாக்கிக் கொடுத்த முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்னவென்று நீங்கள் காண்கின்றீர் ?
2010 ஆம் ஆண்டு உதயமாகும் வரை எமது நாட்டின் பெரும்பாலானோர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டினதும் ,நாட்டு மக்களினதும் சுபீட்சத்துக்காக உழைக்கக் கூடிய ஒரு மக்கள் தலைவர் என்றே கருதி இருந்தனர் .அவரின் தலைமையில் எல் .டீ .டீ .ஈ பயங்கரவாதத்தை தோல்வி அடையச் செய்து பெற்ற யுத்த வெற்றியை நாட்டின் பெரும் பான்மை அங்கீகரிக்கிறது .ஆனாலும் யுத்தத்தை வெற்றி கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒரு மனிதராக மாறி விட்டார் .இதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷ அல்ல மாறாக அவரைச் சுற்றி இருந்த சிவில் சமூகம் ,முப்படைகளும் பொலீஸ் உளவுத்துறையும் ,ஊடகம் , பல்வேறான மார்க்க பிரிவுகளின் முக்கியஸ்தர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியை ஒரு 'அரசன்' ஆக மாற்றியதே .மகா ராஜாவே என்று பாட்டுப் பாடினர் .இந்த மகா ராஜா ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரான சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒருவர் என அந்த பாட்டை எழுதியவருக்கும் பாடியவருக்கும் தெரிந்திருக்காது .
எல் .டீ .டீ .ஈ யை முற்று முழுதாக அழித்து விட்டதால் மகிந்தவின் உயிருக்கு பேராபத்து இருப்பதாக கூறிக்கொண்டு ஒரு மகா ராஜா வைப்போல் அவரை முப்படைகளும் சுற்றிக் கொண்டது .இந்த மகா ராஜா கொள்கையை பிறக்கிக் கொண்ட கலைஞர்களும் இவரின் தோற்றத்தை பற்றி ஆராய்ந்து பௌத்தரின் உறவினராக இவரை மாற்றி அதுவரை மக்கள் முன் ஜனநாயக தலைவராக இருந்தவரின் தலையில் கிரீடம் அணிவித்து ஒரு அதிசய மனிதராக மாற்றுகிறார்கள் .
இந்த உரு மாற்றத்தை அவதானித்துக் கொண்டிருக்கும் ஜோதிடர்கள் , சில பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் சில பிக்குகள் இன்னும் 50 வருடங்களுக்கு நாட்டை ஆளப்போவது ராஜபக்ஷ குடும்பமே என்று ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர் . எல் .டீ .டீ .ஈ யை அழித்து நாட்டில் சமாதானத்தையும் மக்களுக்கு சுதந்திரத்தையும் ஏற்ற படுத்திக் கொடுத்த தலைவரின் தலைக்கு ராஜ பரம்பரை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற மமதையை உட்செலுத்தியவர்கள் இவர்கள் அனைவருமே .
அரசர்களுக்கு அரசாட்சிக்கான எல்லை ஒன்றில்லை .அப்படிப்பட்டவன் முற்றிலும் ஒரு சர்வாதிகாரி ஒரு கொடுங்கோலன் . அரசன் என்பவன் சட்டத்துக்கு அடி பணியக்கூடிய ஒருவன் அல்லன் . ஆனால் 1977 ஆம் சட்ட யாப்ப்புக்கினங்க நியமிக்கப்படும் ஒரு ஜனாதிபதி அரசன் ஆகுவதை தடுக்க போடப்பட்டிருந்த சட்டங்கள் போதுமாக இல்லை என்பதால் உருவாக்கப்பட்ட 17 ஆவது யாப்புத் திருத்தம் தனது அரசாளும் திட்டத்துக்கு பெரும் தடையாக இருக்கிறது எனத் தீர்மானித்த ஜனாதிபதி மஹிந்த 18ஆவது யாப்புத் திருத்தம் ஒன்றூடாக அந்தத் தடையை நீக்கிக் கொள்கிறார்.
இவர் 18ஆவது யாப்புத் திருத்தம் செய்வதற்கான காரணங்கள் இரண்டு . ஒன்று அரசாட்சியை தனக்கு தேவையான மாதிரி கொண்டு செல்லல் . இரண்டாவது அவரின் பின் இந்த நாட்டின் ஆட்சியை அவரின் பரம்பரைக்கு சாட்டுதல் .இதற்காக வேண்டி தனது சகோதரர்களுக்குள் ஒருவரைக் கூட தெரிவு செய்யாத அவர் அதற்கு தனது புத்திரரை தெரிவு செய்து கொள்கிறார் . ஆனாலும் நாட்டின் ஜனாதிபதி பதவி வகிப்பவரின் வயது 35 வருடங்களை தாண்டி இருக்க வேண்டும் என்பதால் அதை நிவர்த்தி செய்து கொள்ளும் வரை தான் இன்னும் ஆறு வருடங்கள் ஆட்சி செய்தாக வேண்டும் என்று தீர்மானிக்கும் ஜனாதிபதி தனது பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்கள் மீதி இருந்த நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலூடாக தாம் வென்று தனக்கு தேவையான காலம் வரை இருப்பதே நோக்கம் .
அவசர ஜனாதிபதி தேர்தல் நடாத்தும் இந்த உண்மையான காரணத்தை மக்களிடம் இருந்து மறைப்பதற்காக அவரை சுற்றி வழைத்துக்கொண்டிருக்கும் கூலிப் படையினரை உபயோகிக்கிறார் .அவர்கள் இந்த ஜனாதிபதி மூன்றாம் முறையும் வராவிட்டால் இந்த நாட்டில் இனி சூரியன் உதிக்காது , மலர் மலராது போன்ற கவிதைகளை எழுதி ,பாட்டுக்கள் பாடி ,திரைப்படங்கள் எடுத்து மக்களை ஏமாற்ற ஆரம்பிக்கின்றனர் .இந்த போலிக் கூத்துக்களால் ஆனந்தத்தின் உச்சத்துக்கே தள்ளப்பட்டிருந்த ஜனாதிபதியும் அவரைச் சுற்றி இருந்த சொந்தங்கள் ,பந்தங்கள் அனைவருமே அதி சொகுசு வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து கொண்டு என்றென்றும் இந்த நாடு நம்முடையது என்று கனவு கண்டு கொண்டிருந்தனர் .புராண அரசர்கள் போல் பல இடங்களிலும் மாளிகைகள் கட்டினர் .இலகுவாக அந்த மாளிகைகளுக்குச் செல்ல பெரும் சாலைகளை அமைத்தனர் .பிள்ளைகள் பல கோடி ரூபாய்க்கள் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்து ரேஸ் வைத்தனர் .இவற்றுக்கு தேவையான பணம் சேர்த்த பொது மக்களின் தலையில் வரி களை ஏற்றினர் .இந்த அநியாயங்களை தட்டிக் கேட்போரின் பின்னால் விரட்டும் வெள்ளை வான்களும் தலை மேல் இருக்கும் வரிச் சுமையும் பொது மக்களை இரு புறமிருந்து தாக்கின . எந்த வித சட்டத்துக்கோ நீதி நெறிமுறைகளுக்கோ தர்மங்களுக்கோ கட்டுப்படாத இந்தப் போக்கு பயங்கர வாதத்தை அழித்து நாட்டில் சமாதானத்தையும் மக்களுக்கு சுதந்திரத்தையும் உருவாக்கிக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேல் வைத்திருந்த அன்பை பற்றிய நல்லெண்ணத்தை அகற்றத் தொடங்கியது .
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அரச நீதிச் சேவைகள் அரசியலாக்கத்துக்கு உட்படுகிறது .தொழில் மற்றும் பதவி உயர்வுகளின் போது ராஜபக்ஷ குடும்பப் பெயர் உள்ள ஒருவரின் பின்னால் செல்ல வேண்டிய தேவை மக்களுக்கு .இந்த விடயத்தில் ஜனாதிபதியை விட நாமல் ராஜபக்ஷ வைச் சுற்றி மக்கள் கூடக் காரணம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி இவர் என்று கூலிப்படை உருவாக்கிய கருத்தே .எப்படியாயினும் வங்கி போன்ற துறைகளில் தொழில் கொடுக்கும் போது தகுதி இல்லாத அரசியல் அன்பர்கள் அமர்த்தப் படுகிறார்கள் என்ற எண்ணமும் மக்களிடையே மகிந்தவின் ஆட்சி பற்றிய வெறுப்பை கூட்டியது .
பொலிஸ் முற்று முழுதாக அரசியலாக்கம் அடைந்தது .தகுதி இல்லாத குடும்பத்தார்கள் வெளி நாட்டுச் சேவைகளில் அமர்த்தப்பட்டதனால் சர்வதேஷ ரீதியாக எமது நாடு அவமானத்துக்குள்ளானது . தூதுவரின் பொறுப்புக்கள் என்னவென்று தெரியாத தூதுவர்கள் அமர்த்தப்பட்டதனால் நாடு கேவலம் அடைந்தது .
பேயாட்டம் ஆடிய அமைச்சர்களாலும் அரசு மக்களின் அதிருப்தியை பெற்றது .உப வேந்தர்களாக அறிவற்றவர்களை நியமித்து பல்கலைக்கழக கல்வியை அழித்தது போன்றே விஷேடமாக அரசியல் பாடத்தை பல்கலைக்கழகத்தினுள் மரணிக்க விடப்போவதாக கூறிய முன்னால் கல்வி அமைச்சரின் அறிவிப்பு முழு நாட்டினதும் அரசியல் உணர்வு நிலை யை மொட்டையாக்க எடுத்த ஒரு படி இன்று எமது நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தூள் ,எதனோல் ,கசினோ போன்றவற்றை இல்லாமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப் படாமையும் முன்னால் ஜனாதிபதி தோற்கக் காரணமாகும் .தூள் ,எதனோல் கன்டேனர்களை வரவழைத்தவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து இனிமேலும் தான் மக்களின் ஆட்சியாளன் இல்லை என்பதை ஜனாதிபதி வெளிக்காட்டினார் .
நீதித்துறையை நாசப்படுத்தியது ,அரச சேவையை நாசப்படுத்தியது,வெளி நாட்டுச் சேவையை நாசப்படுத்தியது,குடும்ப ஆட்சியை நிலை நிறுத்த தனக்கு தேவையான மாதிரி அரசன் ஒன்று போல் செயற்பட்டமை போன்றன முன்னால் ஜனாதிபதியால் வேண்டுமென்றே செய்யப்பட்டவை .அமைச்சர்கள் ,சொந்தங்கள் ,நண்பர்கள் போன்றோர் நாட்டில் பேயாட்டம் ஆடி செய்த அழிவுகள் யாவும் இறுதியில் ஜனாதிபதியின் கணக்குக்கே சேர்க்கப்பட்டன .சில அமைச்சர்கள் வீதியில் செல்லும் போது மக்கள் காணுக்குள் இரங்க வேண்டும் .இவ்வாறான செயற்பாடுகளால் யுத்தத்தை வென்ற கீர்த்தியை ,மரியாதையை ,அன்பை ,மனிதர்களின் பொறுமையை முன்னால் ஜனாதிபதி இல்லாமல் ஆக்கிக் கொண்டார் .
மைத்ரீபால சிறிசேன அவர்கள் வெற்றியீட்டியது சிறு பான்மையினரின் வாக்குகளால் என்று முன்னால் ஜனாதிபதியின் பிரிவினர் கூறுகிறார்களே ?
அது பிழையான கருத்து . தேர்தலுக்கு பின்னான இந்த கால கட்டத்தில் சிங்களம் ,தமிழ், முஸ்லிம் என்று பிரிவினை வாதத்தை உருவாக்க செயற்படுகிறார்கள்.இந்த நாட்டில் இருப்பது இலங்கையர்கள் . மத அடிப்படையில் நாலைந்து பிரிவுகள் இருப்பது உண்மை .அவர்கள் அனைவரும் ஜாதியின் அடிப்படையில் இலங்கையர்கள் .அவர்கள் அனைவரும் இலங்கையில் வாழும் இலங்கையர்கள் அவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு .அவர்கள் தமக்குத் தேவையான வேட்பாளருக்கு வாக்களித்தனர் . அது அவர்களின் உரிமை . மைத்ரீபால சிறிசேன அவர்களுக்கு கிடைத்த 61 இலட்சம் வாக்குகளும் தமிழர் ,முஸ்லிம்களது மாத்திரமா ? ஏன் தமிழ் ,முஸ்லிம் ,கத்தோலிக்க மதத்தவர்கள் முன்னால் ஜனாதிபதியை விட்டு தூரமாகியது ? அதற்கான காரணத்தை தேடாமல் இன்னமும் கதைப்பது மதவாதம் ,இனவாதம் பற்றியே .
ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன அவர்களது புது அரசின் கீழ் இவ்வாறானவை நடை பெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் செயற்பாடுகள் என்ன ?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் ஆட்சிக்காலத்தில் நீதித்துறை ,அரச சேவை,வெளி நாட்டுச் சேவை உட்பட இன்னும் பல சேவைகள் நம்ப முடியாத அளவு சரிவுக்குள்ளானது . இந்த நிறுவனங்கள் மீதான மக்கள் நம்பிக்கை அற்றுப் போய் விட்டது .ஆதலால் தற்போதைய ஜனாதிபதியின் முதல் வேலையாக இருக்க வேண்டியது இந்த துர்நாற்றம் அடிக்கும் நிறுவனங்களை சுத்தம் செய்து மக்கள் நம்பிக்கை இவற்றின் மீது ஏற்படுமாறு அவற்றை மீளகட்டி எழுப்புதல் .
எமது நாட்டு மக்கள் இன்று பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவை பலராலும் தாங்க முடியாது உள்ளது .கொழும்பில் காட்டப்படும் எழில் ஊர்களில் இல்லை .பலராலும் அனுபவிக்கப்பட்ட கஷ்டங்கள் இன்னும் நீங்கியதாக இல்லை .முன்னைய அரசாங்கம் அபிவிருத்தி தொடர்பாக எவ்வளவு பேசிய போதிலும் உண்மையான அபிவிருத்தி என்னவென்றால் பௌதீக மற்றும் உள ரீதியாக நடைபெறும் இரட்டை அபிவிருத்தியே ஆகும் .எமது நாட்டில் இந்த உண்மையான அபிவிருத்தி இடம் பெற்றில்லை .இன்று நாட்டில் நடைபெறும் குழந்தை முறைகேடு, பாலியல் பலாத்காரம் ,கொலை மற்றும் கொள்ளைகள் போன்றவற்றால் நாடு எந்த அளவு தூரத்துக்கு விழுந்துள்ளது என்பது தெளிவு . எனவே புது அரசாங்கத்தின் இரண்டாவது வேலை இந்த இடிந்து விழுந்துள்ள சமூகத்தை கட்டி எழுப்புவது .
ஆனாலும் இந்த படு குழியில் விழுந்துள்ள நாட்டை கட்டி எழுப்புவது இலகுவான விடயம் ஒன்றல்ல .அரச கொள்கையை தொகுப்பது மிகவும் சரியான முறையில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் .அதற்கான அறிவு , புரிந்துணர்வு மற்றும் அனுபவம் அவசியம் . இவ்வாறான ஒரு கூட்டம் முன்னைய அரசாங்கத்தில் இல்லாமல் இருந்ததினாலேயே சமூகம் இவ்வாறு உடைந்து விழுந்தது .
புது ஜனாதிபதி இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமாயின் நாட்டினுள் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் . எமது நாட்டில் உள்ள பிரதான இனத்தவர்கள் மூன்றும் இன்னும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சந்தேகத்துடனும் கோபத்துடனும் .நாம் இலங்கையர்கள் என்ற எண்ணம் இந்த நாட்டு மக்கள் அனைவரிலும் ஏற்படாத வரை இந்த நாட்டை முன்னேற்ற முடியாது .அனைவரும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் வாழும் இடமாக இந்த நாட்டை உருவாக்காத வரை இந்த நாட்டை முன்னேற்ற முடியாது .ஆதலால் புது ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன அவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவது .இனம் என்ற சொல்லை இல்லாமலாக்கி இலங்கையர் என்ற சொல்லை அதற்கு பதிலாக பிரயோகிக்க வேண்டும் . யுத்தத்தை வென்ற மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி இந்த வேலையை செய்வார் என்ற எண்ணம் எல்லோர் இருந்தது .ஆனால் யுத்த வெற்றியின் பின் நடந்ததோ எதிர்பார்க்கப் படாதவைகள் .யுத்தத்தின் போது நாம் சண்டையிட்டது தமிழர்களுடன் மாத்திரம் .இப்போது நாம் முஸ்லிம்களுடனும் சண்டையிட்டுக் கொள்கிறோம் . எனவே இனவாதத்தைப போன்றே மத வாதத்தையும் இந்த நாட்டில் இருந்து அகற்றுவது ஜனாதிபதி அவர்களின் முக்கிய வேலை .
சட்ட யாப்பில் திருத்தங்களை ஏற்படுத்தி அதனூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவது மைத்ரீபால சிறிசேன அவர்களின் உறுதிமொழி?
இந்த நாட்டில் புது யாப்பொன்றை கட்டி எழுப்பும் போது சம குடிமகன் சம இட ஒதுக்கீடு போன்றன செயற்படுத்தப்பட வேண்டும் . அப்போதுதான் இனங்களுக்கிடையே ஐக்கியத்தை உருவாக்க முடியும் . மதம் ,மொழி ,பெரிய இனம் ,சிறிய இனம் போன்ற பிரிவுகள் உருவாக்கப்பட்டு விஷேடமாக கவனிக்கும் தற்போதைய தன்மையை இந்த அரசாங்கம் முற்று முழுதாக இல்லாமல் செய்ய வேண்டும் .30 வருடங்கள் யுத்தம் செய்த நாம் எமது அடுத்த பரம்பரைக்கும் இந்த கருமத்தை சொத்தாக கொடுப்பதாயின் நாம் அரசியலில் ,பொருளாதாரத்தில் ,சமூகவியலில் எதுவுமே தெரியாத ஒரு மக்குக் கூட்டம் என எதிர்கால சந்ததியினர் எம்மை தூற்றுவர் . எனவே பிரதானமாக இந்த முக்கிய விடயங்களை புது அரசாங்கம் செய்யுமாயின் இந்த ஆபத்திலிருந்து தப்ப வழியொன்றை ஏற்படுத்திக் கொள்ளலாம் .
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரப்பகிர்வு எவ்வாறு செய்யப்பட வேண்டும் ?
எமது யாப்பின் 13 பிரிவுகளை தவிர ஏனைய அனைத்து பிரிவுகளும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பலத்தால் திருத்தப்பட முடியும் .மூன்றில் இரண்டு பலத்துக்கு மேலதிகமாக மக்கள் விருப்பு வாக்கெடுப்பும் தேவைப்படுவது நாட்டின் ஐக்கியத்துக்காக ,மொழி மற்றும் மதத்துக்கான தாக்கங்களை ஏற்படுத்தும் காரணிகள் மேலும் ஜனாதிபதி அவர்களின் கால நீடிப்பு பற்றிய திருத்தங்களுக்கே .மிகவும் அவசரமாக செயக்கூடியதும் செய்ய வேண்டியதுமான விடயம் என்றால் இந்த 18 ஆம் சட்ட திருத்தத்தினூடாக உருவாக்கப்பட்ட சர்வாதிகார முறைமையை இல்லாமல் செய்வதற்காக 18 ஆம் சட்ட திருத்தத்தை இல்லாமல் செய்து 17 ஆம் சட்ட திருத்தத்தை மீள நிறுவுவதல்.ஜனாதிபதியின் அதிகாரப்பகிர்வுக்காக வேண்டி புது சட்ட யாப்பொன்றை செய்ய வேண்டும் .ஏன் என்றால் இப்போது இருக்கும் இந்த நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தையும் ,நீதியையும் கீழே தள்ளி உள்ளது .எனவே புது யாப்பினூடாக இந்த நிறைவேற்று அதிகாரத்தையும் சட்ட மன்றத்தையும் சமமாக பேணி நீதித் துறையை இதில் இருந்து அகற்ற வேண்டும் .இதனைச் செய்ய ஜனாதிபதியின் அதிகாரப்பகிர்வின் போது அதில் இப்போது இருக்கும் அதிகாரங்களின் ஒரு பகுதியை பாராளுமன்ற அனுமதியின் கீழும் அடுத்த பகுதியை நீதித்துறையின் கீழும் செயட்படக்கூடியவாறு திருத்தங்களை ஏற்படுத்த முடியுமாயின் இதுவே போதுமானது என்பது எனது தனிப்பட்ட கருத்து


.jpg)
Post A Comment:
0 comments: