‘மஹிந்தவின் வெற்றிக்கு சிங்கள மக்களின் வாக்குகளே போதுமாக இருந்த போதிலும், முஸ்லிம்களும் மஹிந்தவுக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளிகளாக வேண்டும்’ என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் கூறினார்.
அப்துல் றஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்களின் தலைமையில் காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சேகு இஸ்ஸதீன் மேலும் கூறியதாவது,மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் போன்றோரின் முன்யோசனையற்ற, நன்றி விசுவாசமற்ற கடைசி நேர கழுத்தறுப்புக் கட்சி மாற்றம் நடுநிலையாய் இருந்த சிங்களப் பொது மக்களை மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் முடிவுக்கே தள்ளியுள்ளது.
இதனால் அண்ணளவான வெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்த மஹிந்தவை அமோக வெற்றிக்கு வீறுநடை போடச் செய்துள்ளதற்காக றவூப் ஹக்கீமுக்கும், ரிஷாட் பதியுத்தீனுக்கும் இந்த நாட்டு மக்கள் தப்புத்தண்டாக்களை தத்தெடுத்துக் கொண்டுள்ள இந்த மு.கா. மாக்காத் தலைவர்களுக்கு மன்னிப்பளித்து நன்றியும் கூற வேண்டும்.
அது மட்டும் போதாது, மஹிந்தவின் அமோக வெற்றியில் தாமும் பங்காளர்கள் என்று உரிமை கொண்டாடும் அந்தஸ்தை அடைந்து கொள்ள முஸ்லிம் கனவான்கள், புத்திஜீவிகள், இலங்கை முற்றாக வியாபார ஸ்தலங்களை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் வியாபாரிகள் நடுநிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உலமாக்கள், புரிந்துணர்வுள்ள முஸ்லிம் பொதுமக்கள், வாக்குகளுள்ள முஸ்லிம் மாணவ, மாணவியர்கள் அனைவரும் மஹிந்தவின் வெற்றியில் பங்காளியாகி இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
எதிர்வரும் மஹிந்தவின் அரசாங்கத்தில் முழு அமைச்சர் பதவி பெறப்போகின்ற உங்கள் அரசியல் தலைவர், கிழக்கின் விடிவெள்ளி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை முழு மனதோடு பின்பற்றி அவர் கரங்களையும் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றேன் என்றும் கூறினார்.



Post A Comment:
0 comments: