'அதான் போட்டி' ​ முஸ்லிம் சேவை நடாத்திய ஓர் ஏமாற்று வித்தையா...?

Share it:
ad

-இப்னு ஹனீபா-

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை அகில இலங்கை ரீதியில் நடாத்திய மாபெரும் அதான் போட்டி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று அதன் இறுதிக்கட்ட நிகழ்வான பரிசளிப்பு விழா  கடந்த  30. 12. 2014 அன்று மாலை நெலும்பொகுனவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

இப்போட்டியில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து சுமார் 2000  பேரளவில் கலந்து கொண்டனர். இரண்டாம் சுற்றுக்கு 98 பேரும் இறுதிச் சுற்றுக்கு 13 பேரும் தெரிவாகியிருந்தனர். உண்மையில் அரசியலுக்கு அப்பால் சிந்திப்பவர்கள் இந்த யோசனையை முன் வைத்து செயற்படுத்திய  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. ஹட்சன் சமரசிங்க அவர்களை பாராட்டத்தான் செய்வார்கள்.

என்றாலும் இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக நடைபெற்ற இந்நிகழ்வின் பரிசளிப்பு விழா,  சுவாரஷ்யமான நிகழ்வாக இருக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் பிரசன்னமாயிருந்த  போட்டியாளர்கள், அவர்களின் உறவினர்கள் உட்பட அங்கு திரண்டிருந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும்  மற்றும் உலமாக்களையும் ஏமாற்றிய ஒரு விழாவாக அமைந்து விட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

நிகழ்வுகளை ஆரம்பிப்பதற்காக  அந்த பிரமாண்டமான திரைஅகன்ற போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு இசைக் கருவிகளுடன் கலைஞர்கள் தோன்றினர். இந்த பொருத்தமில்லாத மேடையமைப்பே உலமாக்களினதும் பார்வையாளர்களினதும்  முகங்களை சுளிக்க வைத்தது. ஏனெனில் அங்கு வந்திருந்த இசைக் கலைஞர்கள் கூட பாடல்களையும் இசையையும் கேட்கும் மனோ நிலையுடன்  அம்மண்டபத்திற்குள் நுழைந்திருக்கவில்லை. 

ஆனால் இந்த ஏற்பாட்டாளர்கள் செய்த மிகப் பெரிய அநியாயம் என்னவென்றால் மொத்தமாக மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆகக் குறைந்தது அந்த இரண்டாயிரம் போட்டியாளர்களிலிருந்து  இறுதிச் சுற்றுக்கு  தெரிவான 13 பேரிலிருந்து ஐந்து பேரையாவது  அந்த இடத்தில் பாங்கு சொல்ல வைக்காதது தான். இந்த விழாவின் கருவே அதானாக இருக்கையி்ல்  இவர்கள் எப்படி நேரத்தை வீணடித்தார்கள் என்றால், 99% முஸ்லிம்கள் மாத்திரமே திரண்டிருந்த விழாவில் சுமார் அரைமணித்தியாலங்களை முஸ்லிகளின் வரலாறு பற்றிய விவரணப் படமொன்றை காட்டுவதற்காக எடுத்துக் கொண்டார்கள். விவரணப் படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த இடத்தில் அது எதற்காக என்று  தெரியவில்லை. இடைக்கிடை இஸ்லாமிய கீதங்களையும் இசைக்கச் செய்தார்கள். அவற்றைத் தவிர்த்து இந்த நேரத்தில் அந்த 13 பேருக்குமே அதான் சொல்ல சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். இந்த ஏற்பாட்டாளர்கள் செய்த இப்படியான மடமைத்தனத்தின் மூலம் அந்த போட்டியாளர்களையும் அவர்களின் உறவினர்களையும் அவமானப்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமா...? இறுதிப் போட்டியாளர்களான 13 பேரையும்  ஒரே விதமாக உடையணிந்து வரச் சொல்லியிருந்தார்கள். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்திருந்த  இவர்கள் கடைசித் தருணத்தில் ஒரு சில ஐந்து நிமிடங்களில் நிறைவடைந்த பரிசளிப்பு நிகழ்வுக்காக மாத்திரம் தான் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களை கொஞ்சமாவது தனித்தனியாக அறிமுகப் படுத்தியிருக்கலாம். ஏனெனில் அவர்கள் தான் அந்த இடத்தின் ஹீரோக்கள். வயதில் மூத்த போட்டியாளர்களுடன்  கடுமையான போட்டிக்குப்பின் தெரிவு செய்யப்பட்டவர்கள். இறுதிப் போட்டியாளர்களுள் இவர்கள் ஒருவரையொருவர் சளைத்தவர்களல்ல. நம்நாட்டில் சிங்கள, தமிழ் ஊடகங்கள் சூப்பர் ஸ்டார் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை எப்படியெல்லாம் அழகாக இயக்குகிறார்கள். எம்மவர்கள் இவற்றைப் பார்த்தாவது படிப்பதில்லையா?  மீடியாக்காரர்கள் என்றால் அவர்களிடம் ஒரு படைப்புத் திறன் இருக்க வேண்டாமா ?

இந்தப்  போட்டியை கடந்த அரையாண்டுக்கு மேலாக எந்த வேதனமும் எதிர்பார்க்காமல் மத்தியஸ்தம் வகித்த நடுவர்கள் இறுதியில் நன்றியுரையில் மாத்திரமே நினைவு கூறப்பட்டார்கள். இந்த ஏற்பாட்டாளர்களால் ஜனாதிபதியின் கரங்களால் வெற்றிபெற்ற மூவரைத்தவிர இறுதிச் சுற்றின் இதர போட்டியாளர்களுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் பரிசுகளைப் பெரும் வாய்ப்பினைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாமற் போனது.

இந்த ஏற்பாட்டாளர்கள் செய்த ஏமாற்று வேலையின் உச்சக் கட்டம் எது தெரியுமா?இறுதிச் சுற்று நடைபெற்ற டிசம்பர் 11ந் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கலையகத்தில் வைத்து வெற்றிபெற்றால் வழங்கப்படவிருக்கின்ற பரிசுகள் சம்பந்தமாக 13 போட்டியாளர்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை விழா மண்டபத்தில் வைத்து மீறியது தான்.

அதாவது வெற்றிபெரும் முதல் மூன்று பேருக்கும் உம்ரா சென்று வருவதற்கான வாய்ப்பும் பணப் பரிசாக முறையே 100,000/=  50,000/=  மற்றும் 25,000/=  ரூபாவும் வழங்கப்படும் என்றே வாக்களித்தார்கள். ஆனால் கடைசிக் கட்டத்தில் முதலாமவருக்கு உம்ரா மாத்திரமும் இரண்டாம், மூனறாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு  உம்ரா இல்லாமல் வாக்களித்தபடி பணப்பரிசினை மாத்திரம் மேடையில் வைத்து வழங்கினார்கள். இடையில் பார்வையாளராக வந்த ஒருவர் இரண்டாம் மூன்றாம் இடத்தினைப் பெற்றவர்களுக்கும் உம்ரா சென்று வர அனுசரனை வழங்குவதாக அறிவித்தார்கள். ஆனால் இறுதியில் நடந்தது என்னவெனில், இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் உம்ராவுடன் 50,000/=, 25,000/=  எனப் பணப்பரிசுகளையும் பெற முதலாமவருக்கு பணப்பரிசாக ஒரு சதமேனும் கிடைக்கவில்லை.  இச்செயல் போட்டியாளர்களில் மிகவும் இளையவரான அந்த மாணவ வெற்றியாளரின் மனதை நிச்சயம் பாதித்திருக்கும். ஏனெனில் அவர் மூன்றாம் பரிசைப் பெற்றவரை விட குறைந்த நிலைக்கு தள்ளப்பட்டார். இது ஏற்பாட்டாளர்களின்  திட்டமிடலற்ற தடுமாற்ற நிலையையும் வாக்குறுதி மீறலையும்  படம் பிடித்துக் காட்டியது. 

இந்த விழாவிற்காக தாமரைத்தடாக மண்டபத்திற்கு லட்சக் கணக்கில் செலவழித்திருப்பார்கள். சவுதிய பல்கலைக் கழகங்களிலிருந்து உபவேந்தர்களை இந்த விழாவுக்கு அழைத்து வந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்க செலவு செய்திருப்பார்கள். இசை நிகழ்ச்சிக்காகவும் செலவு செய்திருப்பார்கள்.  பரவாயில்லை. ஆனால் கேவலம் வெற்றியாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் போனார்கள்.

இந்த வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் பிரசுரிக்கப்பட்டும் அவை ஏனோ அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவை முஸ்லிம் சேவையின் அலுவலக மேசைகளில்  கிடப்பில் இருக்கின்றன! இதற்கான காரணம் தான் என்ன? இதற்கெல்லாம் யார் பதில் சொல்லப் போகின்றார்கள்.

இந்தப்  பரிசளிப்பு என்கின்ற விடயம் நடைபெறும் வரையில் போட்டிச் சுற்றுக்களை மிக அழகாக திட்டமிட்டு நடாத்திய முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் சகோ. எஸ். எம். ஹனீபா அவர்கள் இவ்விழாவில் காணாமல் போயிருந்தார். கஷ்டப்பட்டு போட்டிகளை ஒழுங்கு செய்திருந்த இம்மனிதரை, யாரே ஒரு மூலையில் முடக்கி வைத்து விட்டு கடைசியாக நன்றியுரை சொல்வதற்காக மாத்திரம் ஒலிவாங்கியை கொடுத்திருந்தார்கள்.

ஜனாதிபதியவர்கள் இருபது நிமிடம் மாத்திரமே கலந்து கொண்ட இவ்விழாவிற்கு ஐந்து அறிவிப்பாளர்கள் தேவைதானா? ஆனால் அவர்கள் அனைவரும் மேடை அறிவிப்பிற்கும் வானொலி அறிவிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாகவே மேடையேற்றினர்.

இறுதியாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். விழா ஏற்பாடுகளை திசை திருப்பியது மாத்திரமல்லாமல், மேடையில் நடந்த அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் ஓய்வு பெற்றும் வீடுபோய்ச் சேராதவர்களும் முஸ்லிம் சேவையை வைத்து பிழைப்பு நடாத்துகின்றவர்களும் தான் என முஸ்லிம் சேவையின் மூத்த அறிவிப்பளர் ஒருவர் கவலையோடு தெரிவித்திருந்தார்.
Share it:

Post A Comment:

0 comments: