தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்குமாயின் எம்மோடு கலந்துரையாடி தீர்வுக்குவர முடியும். பேச்சுவார்த்தைக்கு வராமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது தென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் சில மாதங்களுக்கு முன்னர் யாழ்தேவியில் யாழ்ப்பாணத்துக்கு வந்தேன். இன்று யாழ்ப்பாணத்திலிருந்து யாழ்தேவியில் காங்கேசன்துறை வரை பயணம் மேற்கொள்ளலாம்.
எனது சொந்த ஊரான பெலியத்த பகுதிக்கு இன்னும் ரயில் சேவை ஆரம்பிக்க முடியாமல் உள்ளது. தெற்கில் ரயில் சேவையை முழுமைப்படுத்தாமல் வடக்கில் யாழ்தேவி சேவையை ஆரம்பித்ததை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
வடக்கில் கல்வித்துறையை நாம் மேம்படுத்தியிருக்கிறோம். தெற்கில் ஒரு ஒப்பந்தமும் வடக்கில் இன்னொரு ஒப்பந்தமும் எங்களிடம் கிடையாது. வடக்கிலும் தெற்கிலும் உள்ள பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய வழிவகைகள் பற்றி நாம் மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டிருக்கிறோம்.
உங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் என்னோடு கலந்துரையாடுவதுண்டு. புதிய அரசியல் தலைமுறைகள் உருவாக வேண்டும்.
அதேபோன்று மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் ராமநாதனும் உங்களுடைய பிரச்சினைகள் பற்றி என்னோடு பேசுவார். எனவே உங்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நல்லதொரு குழு இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்குமாயின் எம்மோடு கலந்துரையாடி தீர்வுக்குவர முடியும். பேச்சுவார்த்தைக்கு வராமல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.
நாம் வடமாகாண சபைக்கு பணம் ஒதுக்கியுள்ளோம். அவற்றில் 50 வீதத்தைக் கூட செலவு செய்யாமல் இந்தப் பகுதியை முன்னேற்றுவது எப்படி? இதைப்பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
சிறிசேனவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறாரோ எனக்குத்தெரியாது. இம்முறைதான் வந்திருக்கிறார் போல. பாடசாலை காலத்தில் நைனாதீவுக்காவது சென்றிருப்பாரா என்பது சந்தேகமே. நான் 11 ஆவது முறையாக வந்திருக்கிறேன்.
தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு நல்லதென்று சொல்வழக்கொன்று இருக்கிறது. எனவே தெரியாத தேவதையை விட நன்கறிந்த இந்த பிசாசு நல்லதென்று நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments: