- SNM.Suhail-
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் யாருக்கு வாக்களிப்பது என முஸ்லிம்கள் சுயமாகவே தீர்மானமெடுக்கவில்லை. அரசின் இனவாத செயற்பாடுகள் காரணமாக மக்கள் அரச எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டனர் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார். அவர் விடிவெள்ளிக்கு வழங்கிய விசேட செவ்வி
அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நீங்கள் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் அரசியலில் மீள்பிரவேசித்துள்ளீர்கள் இதனை எவ்வாறு உணர்கிறீர்கள்?
நான் தேர்தலில் களமிறங்காவிட்டாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருந்தேன். தேசிய அமைச்சிலிருந்து திட்ட அமைச்சராக செல்லும்போது அமைச்சரவையில் சிலர் என்னிடம் 'நீங்களே தொடர்ந்தும் இருக்கின்றீர்கள். புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்' என கூறுவதுண்டு. எனது தந்தை 1947 ஆண்டு பேருவளை பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டார்.
அன்றிலிருந்து 2000 ஆண்டு வரை எனக்கும் எனது தந்தைக்குமே பேருவளை மக்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் நான் படித்த புதியதலைமுறையினருக்கு இடமளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டோன். தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் கட்சிக்குள்ளேயே இருந்தேன். கட்சியில் தந்தைக்கு பெரும் செல்வாக்கு இருந்தது.
எனக்கும் இளம் வயதில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்பதவியும் கிடைத்தது. இவற்றைவிட நாம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. நாம் சரியான அரசியல்வாதிகளாக இருப்பின் யார் இஸ்லாமியன் என்பதை பிறமதத்தவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.
எனது, ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் பதவியை பறித்தார்கள். எனினும் தற்போது செயற்குழுவிற்குள் உள்ளீர்த்துள்ளார்கள். இதனால் எனக்கு எந்த மனவருத்தமும் கிடையாது. எமது மார்க்கம் சொல்லித்தந்திருக்கும் அடிப்படையிலேயே எனது அரசியல் பயணத்தை தொடர்கிறேன். இது ஒரு மார்க்க ரீதியிலான புனிதப்போராட்டமேயாகும். ஒன்றை குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். களுத்துறையில் சிங்கள மக்கள்கூட எனக்கு தொடர்ச்சியாக வாக்களித்து வந்துள்ளனர். எமது கட்சி இன, மத வேறுபாடுகளின்றி அனைவருக்கும் இடமளிக்கிறது.
நீங்கள் அரசியலுக்கு கொண்டுவந்தவர்கள் பற்றி கூறுங்களேன்?
யூசுப் என்பவரை கொண்டுவந்தோம். அவர் மாகாண சபையில் தொடர்ந்து உறுப்பினராக இருந்ததோடு ஒரு காலத்தில் பதில் முதலமைச்சராகவும் செயற்பட்டார். இதனிடையே ஜயந்த அபே குணவர்தன மற்றும் மூன்று தடவைகள் பேருவளை பிரதேச சபை தலைவராக இருந்த பதுருதீன் உள்ளிட்ட பலரை கொண்டுவந்திருக்கிறோம். இவர்கள் பெரிய பட்டதாரிகள் இல்லாவிடினும் அரசியலில் தேர்ச்சிபெற்றவர்களே.
தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிந்து முஸ்லிம்கள் தனித்துவ கட்சிகள் மூலம் அரசியல் பயணத்தை மேற்கொள்வது குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?
முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் கட்சிகளை புறக்கணிக்க முடியாது. அதன் தேவை வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்றது. அதற்கான தேவை தெற்கில் கிடையாது. இங்கு தேசிய ரீதியிலான அரசியலோடு ஒன்றித்துபோவதே பொருத்தமானது. முஸ்லிம் கட்சிகளின் பிரவேசம். தனிபௌத்த கட்சிகளின் வருகைக்கு காரணமாகியது. இன ரீதியிலான கட்சிகளின் தோற்றத்திற்கு காரணம் தேசிய கட்சிகளே. சிறுபான்மையினர் தொடர்பில் கவனம் செலுத்தாமையினால் வடக்கு, கிழக்கு மக்களால் அவை சிங்கள கட்சிகளாகவே பார்க்கப்பட்டது.
எனவே இதற்கு தேசிய கட்சிகளின் தலைவர்கள் பதிலளிக்க வேண்டும். தேசிய கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் இதனை புரிந்துகொண்டு மக்களையும் கட்சியையும் இணைத்துக்கொண்டு செயற்படவேண்டும். இன ரீதியான கட்சிகள் காலாவதியாகும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நமது சமூகத்தில் சிந்தனை ரீதியிலான மாற்றமொன்று தேவைப்படுகின்றது. கோபம், வைராக்கியம் என்பவற்றை புறந்தள்ளிவிட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்ளவேண்டும். முப்பது வருட யுத்தத்தில் நாம் பல பாடங்களை கற்றுக்கொண்டோம். இந்த கசப்பான காலம் இனியும் வேண்டாம். தற்போது மீண்டும் பௌத்த கொடியை தூக்கிக்கொண்டு அரசியல் நடத்த சிலர் புறப்பட்டிருக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் நீங்களும் பிரசாரங்களில் களமிறங்கியிருக்கின்றீர்கள், இன்றைய கள நிலைமை எப்படியிருக்கிறது?
1977 ஆம் ஆண்டு மேலெழுந்த அலையை விட பெரிய அலையொன்று திரண்டிருக்கிறது. 77 ஆம் ஆண்டு அலை பூதாகரமாக கிளம்பியது. இன்று அலை பூதாகரமாகாவிட்டாலும் தாக்கம் பெரிதாகவே இருக்கும். இதற்கான காரணங்களாக ஊடக அடக்குமுறைகள் பற்றி பல புள்ளிவிபரங்களை சுட்டிக்காட்டலாம். அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் அதிகரித்துவிட்டன. அரசியல் தடம்புரண்டுள்ளது.
தாக்குதல்கள் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் அரசாங்கம் எமக்கு எச்சரிக்கைளை விடுத்துக்கொண்டிருக்கிறது. மக்கள் சரியான தீர்மானத்திற்கு வருவர். இதன் பிரதிபலனை 9 ஆம் திகதி தேர்தல் முடிவுகளில் மக்கள் அறிந்துகொள்வர்.
ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கலாமா?
ஆட்சி மாற்றம் ஏற்படுவதை அறிவுள்ள சமூகம் முதலில் புரிந்துகொள்ளும். 2010 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முதலில் களமிறங்கியவர்கள் பல்கலைக்கழக மாணவர்களே. பின்னர் சட்டத்தரணிகள் கிளம்பினர். மனித உரிமை ஆர்வலர்களும் வீதியில் இறங்கினர். இவர்கள்தான் மக்கள் அபிப்பிராயத்தை வெ ளிப்படுத்துபவர்கள். நகர் புறங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிராம மட்டங்களில் சமுர்த்தி போன்றவற்றை காட்டி வாக்குகளை பெறலாம் என நினைக்கின்றனர்.
கிராம மக்கள் புத்திசாலிகள். கடந்த மாகாண சபை தேர்தலின்போது அரசாங்கம் வாக்குகளுக்காக பல சலுகைகளையும் பரிசில்களையும் பணத்தையும் வழங்கியது. ஆனால் மக்கள் மாற்றத்திற்கான சமிக்ஞையை காட்டவில்லையா? உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தேர்தல் பிரசாரத்திற்காக அரசு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது. என்றாலும் மக்கள் தெ ளிவானவர்களே. இலங்கை மக்களின் அறிவை குறைத்து மதிப்பிட முடியாது.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சிறுபான்மை மக்கள் எவ்வாறு நம்புவது?
மைத்திரிபாலவை நம்பலாம் என என்னால் சான்றிதழ் வழங்க முடியும். மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவது ஐ.தே.க.வின் வெற்றியல்ல. கொள்கையின் வெற்றியாகும். மக்களுக்கு பதிலளிக்கும் அரசாங்கமே இப்போதைக்கு தேவை. நீதித்துறை சீர்குலைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மதிக்கப்படுவதில்லை. நிருவாக சேவையாளர்கள் தொடர்பில் அதிருப்தி காணப்படுகின்றது.
இவற்றுக்கான சிறந்த கொள்கைகள் தேவை. இராணுவம் தேர்தலுக்காக பயன்படுத்தப்படக் கூடாது. கல்விக்காக ஆறு வீதமான நிதியை ஒதுக்குவதாக மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். ஆசியாவில் 2.9 வீதமே கல்விக்காக நிதி ஒதுக்கப்படுகின்றது. கல்விக்கு அதிக நிதியொதுக்குவது நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும். அபிவிருத்தி தொடர்பில் அவர் சிறந்த கொள்கைகளைகொண்டிருக்கிறார்.
இலங்கையில் இலவசக் கல்வியை ஏற்படுத்தியவர்கள் ஐ.தே.க. தலைவர்கள். பின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இலவச புத்தகம், சீருடை, உணவும் வழங்கப்பட்டது. தற்போது உணவு நிறுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகமும் சீருடையும் உரிய நேரத்தில் கொடுக்கப்படுவதில்லை. ஒவ்வொன்றாக இழந்து வருகின்றோம். இலவச சுகாதாரம் இப்படியே. இவ்வாறு கூறிக்கொண்டே செல்லலாம்.
ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவற்றின் நிலைதொடர்பில் மக்கள் நன்கு அறிவார்கள். நான் மைத்திரிபால சிறிசேன என்ற தனி நபருக்காக அவரை ஆதரிக்கவில்லை. நாட்டிற்கு அவசியமான நம்பிக்கையின் அடிப்படையில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கே ஒன்றிணைந்துள்ளேன். இதற்காகவே எல்லோரும் ஒன்றிணைந்துள்ளனர். வரலாற்றில் முதன் முறையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு பெருந்தலைவர்கள் இணைந்து வைராக்கிய அரசியலை இல்லாமல் செய்வதற்கு முன்வந்துள்னர்.
பொது நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றவகையில் நாட்டை அபிவிருத்தியின் பாதையில் முன்னெடுத்துச்செல்வதற்கான முயற்சி இது. யுத்தத்திற்கு பின்னர் ஜனாதிபதியிடம் 'சந்திரிகாவும் ரணிலும் யுத்தத்தை முடிவுகட்ட தவறிவிட்டனர். ஆனால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஐ.தே.க.வை இல்லாது செய்யவேண்டாம். பொது நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் நாட்டை முன்னெடுத்துச் செல்லுங்கள்' என்றேன். 'உங்கள் ஆலோசனைக்கு நன்றி' என அவர் கூறினார். நாட்டின் தலைவர் சரியாக இருப்பின் ஏனைய எல்லாம் சரியாகிவிடும். நல்லாட்சிக்கான போராட்டத்தை அனைத்து மக்களும் நம்பலாம்.
மைத்திரி வெற்றிபெற்றால் தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக கூறிவருகின்றனர். இது சாத்தியமா?
அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கம் ஒன்று இயங்கும். சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, பரிபாலன ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் பிரிவு,சுயாதீன நீதிச்சேவை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படும். வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளோம். பின்னர் நடத்தப்படும் பொதுத் தேர்தலில் வேண்டிய கட்சி ஆட்சியமைக்க முடியும்.
இதனால் நிலை பேறான அரசியல் இல்லாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறதே?
இதன் மூலம் நிலையான அரசியல் ஒன்று உருவாக்கப்படும் என்றுதான் கூறவேண்டும். பழிவாங்கும் வைராக்கிய அரசியல் இல்லாமல்போகும். ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளரின் வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 40 வீதமான வாக்குகள் கிடைக்கப்போகின்றன. இதன் மூலம் தெளிவாக எமது அரசியல் நிலைப்பாடு புரிந்திருக்குமே.
முஸ்லிம் மக்கள் தேர்தல் அறிவிக்கும் முன்னரே மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
முஸ்லிம்கள் தானாக தீர்மானம் எடுக்கவில்லை. இந்த தீர்மானத்துக்கு தள்ளப்பட்டனர். தமிழ், கத்தோலிக்கர்களையும் இந்நிலைமைக்கு இந்த அரசாங்கமே தள்ளிவிட்டது. இல்லாவிடின் இவ்வாறானதொரு தீர்மானம் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்காது. யுத்தத்திற்கு பின்னர் மக்களுக்கு சந்தோசம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதிவேக பாதை, துறைமுகம் விமான நிலையம் போன்றவற்றையெல்லாம் அமைத்தனர். இவை நாட்டுமக்களுக்கு தற்போதைக்கு அவசியமில்லை. ஊழலை மையமாககொண்டே அபிவிருத்திகளை மேற்கொள்கின்றனர். இது மிகவும் அபாயமான கட்டமாகும்.
தற்போது நாட்டில் நிலவும் சர்வாதிகார ஆட்சியை இல்லாதுசெய்ய எவ்வாறான கசாயத்தையும் குடிப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம். ஐ.தே.க. இல்லாது இன்னொரு கட்சிக்காரரை முன்னிறுத்தி வெற்றிபெறச்செய்வது ஆசை இல்லாவிடினும், இப்போதைக்கு இது மிகவும் தேவையானதொன்றாக இருக்கின்றதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். நல்லாட்சியை ஏற்படுத்த விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள நாம் துணிந்துள்ளோம்.
முஸ்லிம் தலைவர்கள் எதிரணியுடன் தற்போது இணைந்துகொள்கின்றனரே?
இப்போது யாருக்கும் வேறு தெரிவு இல்லை. இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க, இராணுவ ஆட்சியொன்றை தடுக்க வேறு வழி இல்லை. மஹிந்த ராஜபக்ஷ அரசு இன்று இராணுவ ஆட்சி குறித்து அச்சுறுத்துகிறது. ஊடக அடக்குமுறையை பிரயோகிக்கிறது. நாட்டின் அனைத்து மக்களும் சிந்தித்து இந்த தெரிவை மேற்கொள்ளவில்லை இந்நிலைமைக்கு தள்ளப்பட்டுள்னர். யுத்தத்திற்குபின்னர் பிக்குமார்கள் தேசிய கொடியுடன் பன்சலைநோக்கி ஊர்வலம் செய்யும் நிலையை ஏற்படுத்தி வேறு மக்களின் வாக்குகள் தேவையில்லை என அரசு நினைக்கிறது. இந்த போக்கை மாற்றியமைக்க இஸ்லாம், கிறிஸ்தவ, இந்து மக்களுக்கும் ஏன் பௌத்தர்களுக்கும் கூட மைத்திரியை தவிர வேறு தெரிவில்லை.


.jpg)
Post A Comment:
0 comments: