கடந்த ஓரிரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் சேக் சபீக் என்பவரால் , முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு கௌரவ ஹலீம் அவர்கள் பொருத்தமற்றவர் என்றும், வேறு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் , மர்ஹூம் ACS.ஹமீட் அவர்களோடு இவரை ஒப்பிட்டும் எழுதப்பட்டு அதற்கு ஏனையவர்களின் விமர்சனங்களும், கருத்துகளும் பகிரங்கப்படுத்தப்படுவது ஹலீம் அவர்களை தெரியாதவர்களுக்கு தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விடும் என்பதற்காக , நான் ஒரு ஐ.தே.கட்சி ஆதரவாளன் இல்லை என்றாலும் இவ்விடயம் தொடர்பில் எழுத வேண்டியவனாகிறேன்.
சேக் சபீக் என்ற புனைப்பெயரில் முகநூலில் தொடர்பு விபரங்களை இடாமல் தனது பிறந்த தினத்தை மாத்திரம் சரியாகப் போட்டு தனதும், தனது குழுவினரதும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக, கருத்துகளை தைரியமாக வெளியில் தெரிவிக்க முடியாத பச்சோந்தியான புத்திஜீவி என தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவரே இவர் என்பதே உண்மை, கடந்த மத்திய மாகாண சபை தேர்தலிலும் அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எந்தக்கட்சியிலும் வெற்றி பெற்று விடக்கூடாதென்ற நிலைப்பாட்டில் இருந்த இக்கூட்டம் , அவ்வாறு ஒருவர் வென்று விட்டால் தங்களது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சூனியமாகி விடும் என்ற நிலைப்பாட்டில் தாங்களும் அரசியலில் ஈடுபடுகிறோம் என்பதை மக்களுக்கு காட்டிக்கொண்டு UNP , UPFA , SLMC ஆகிய மூன்று கட்சிகளிலும் போட்டியிட்ட அக்குறணையை சாராத வேட்பாளர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து தங்களது நோக்கத்தை சாதித்துக் கொண்டார்கள்.
ஆனால் தற்போதைய ஆட்சி மாற்றம் மூலம் அமையப்பெற்றுள்ள அமைச்சரவையில் அக்குறணையை சேர்ந்த ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது எந்த வகையிலும் தங்களது எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளுக்கு உதவப்போவதில்லை என்ற அங்கலாய்ப்பே சேக் சபீக் என்பவரின் எழுத்து என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்,
நான் கண்டி மாவட்டத்தை சேராதவனாக இருந்தாலும் கடந்த இருபது வருடங்களாக அக்குறணையிலும் கல்குடாவிலும் வசித்து அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவன் என்பதால் சில விடயங்களை எழுதலாம் என நம்புகிறேன்,
கௌரவ ஹலீம் அவர்களை முதன்முதல் மத்திய மாகாணத்திற்கு 1993ம் ஆண்டு இடமாற்றம் பெற்று வந்த போது ஒரு மாகாண அமைச்சராக சந்தித்தேன், அவரது ஆடம்பரமற்ற எளிமையான அணுகுமுறை அவரில் ஒரு மதிப்பை என்னிடத்தில் உருவாக்கியது , ஒரு சமூகத்தலைவனுக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய பண்பான மற்றவர்களின் கருத்துக்களை செவிமடுக்கும் தன்மை அவரிடம் மிக அதிகமாகவே இருந்தது இது ஒன்றே போதும் அவர் ஒரு அமைச்சராகுவதற்கு என்பதே என் அபிப்பிராயம்.
இன்னொரு தடவை நான் கற்பித்த தாருல் உலூம் வித்தியாலயத்தின் தேவை ஒன்றிற்காக அதிபருடன் அவரைக்காணச் சென்றேன், அந்த வேளையில் அவர் மாகாண பதில் முதலமைச்சராக இருந்தார், அந்த தினத்தில் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் நடந்த பெற்றோர் கூட்டத்தில் அவரும் கலந்து கொள்வதாக அறிந்து அங்கு சென்றபோது எந்த பந்தாவும் இல்லாமல் மாகாணப்பாடசாலையான அங்கு பெற்றோர்களுடன் ஒருவராக அவர் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ந்தேன், ஆனால் அதுதான் இஸ்லாமிய வழி என்பதே உண்மை, நானும் ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்தவன் , சாதாரண உறுப்பினர்களே காட்டும் பெருமைக்குள் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்களே, இப்படிப்பட்டவர்கள்தான் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்கள்.
நான் அக்குறணை சாஹிராவில் அதிபராக இருந்த போது ஆளுங்கட்சி அமைச்சர்களை அழைத்தபோது எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக அழைப்பை ஏற்று வந்து அமைதியாக அவர் கலந்து கொண்டதைப் போல ஏனைய அரசியல்வாதிகளைக் காணமுடியாது.
இப்படிப்பட்ட நல்ல பண்புகளுக்கும் , பொறுமையாக மக்களுடனும் , கட்சியுடனும் இருந்ததற்கும் , ஏனையவர்களைப் போல எனக்கு அமைச்சுப்பதவி தாருங்கள் என்று தூது அனுப்பாத பண்புக்காகவும் வல்ல அல்லாஹ் அவருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் வழங்கிய பரிசே இந்த அமைச்சுப்பதவி. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பதவிகளையும் , அதிகாரத்தையும் கொடுத்தே தீருவான்.
மாகாணத்திலும் , பாராளுமன்றத்தேர்தலிலும் இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் அது ஒன்றும் போலியான விடயமல்ல, அதுவும் உண்மையான புத்திஜீவிகள் அதிகம் உள்ள கண்டி மாவட்டத்தில் என்பது அதிஷ்டத்தாலோ , அனுதாபத்தாலோ, பரம்பரைக்காகவோ என்பதை விட அவரிடம் மக்கள் விரும்பும் பண்புகளாலேதான் என்பதுதான் உண்மை. ,
பொதுவாக அரசியலுக்கு வர ஆசைப்படுபவர்கள் அல்லது அரசியலுக்குள் நுழைந்து இடம்பிடிக்க தடுமாறுபவர்கள், சொந்த ஊர் அரசியல்வாதிகளுக்கு எதிரான பிழையான பிரச்சாரங்களை முன்னெடுப்பது வழமை. வெளியூரைச் சேர்ந்தவர்களை புகழ்வார்கள் , உள்ளூரைச்சேர்ந்தவர்களை இகழ்வார்கள், உதாரணமாக கல்குடாவில் அமீரலி , காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ், என அடுக்கிக் கொண்டே போகலாம், இந்த வகையிலேதான் அமைச்சர் ஹலீம் அவர்களுக்கு எதிராகவும் ஒரு கூட்டம் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது,
உண்மையிலேயே அவர்கள் சமூக நலனை விரும்புபவர்கள் என்றால் , நீண்ட காலத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமய விவகார அமைச்சு சிறப்பாக இயங்க அமைச்சருக்கு ஆலோசனை சொல்லும் ஒரு குழுவாக இயங்க முயற்சிக்க வேண்டுமே தவிர , முஸ்லிம் சமூகத்துக்குள் தொடர்ந்து இருந்துவரும் இவ்வாறான கீழ்த்தரமான பிரச்சாரங்களை கைவிட வேண்டும்,
அல்லாஹ் ஒருவரை ஒரு இடத்திற்கு நியமிக்கிறான் என்றால் அதற்குரிய தகுதி அவரிடம் இருப்பதால்தான் என்பதை உணர்ந்தவர்களாக வாழப்பழகுங்கள் , உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்.
அமைச்சர் ஹலீம் அவர்களை என்னைச்சேர்ந்தவர்கள் சார்பாக வாழ்த்துவதுடன், அவருக்காக எனது பிரார்த்தனைகளும் , அல்ஹம்துலில்லாஹ்.


.jpg)
Post A Comment:
0 comments: