தேர்தல் முடிவுகளை தடுக்க சூழ்ச்சித்திட்டம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்

Share it:
ad
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற கடந்த 8ம் திகதி இரவு  தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதனை தடுப்பதற்கு சூழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. 

தேர்தல் நடைபெற்ற தினமன்று இரவு சட்டத்துறையைச் சேர்ந்த இரண்டு பிரதானிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தா்கள் ஒரு இடத்தில் கூடி ஆராய்ந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை ரத்து செய்து நாடு முழுவதிலும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி முன்னைய அரசாங்கத்தை, தேர்தல் தோல்வியிலிருந்து பாதுகாக்க வேண்டுமென சட்டத்துறைசார் பிரதானி ஒருவர் யோசனை முன்வைத்துள்ளார்.

இந்த யோசனையை சட்டத்துறைசார் மற்றைய பிரதானியும், பொலிஸ்மா அதிபரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். எதிர்ப்பு கிளம்பியமை காரணமாக இந்த சதித் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இராணுவ சூழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுக்க முயற்சித்தனர் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலனாய்வுப் பிரிவினரிடம் நேற்று முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவியை காப்பாற்ற பிரதம நிதியரசர் மொஹான் பிரிஸூம் சில பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சட்டமா அதிபரும் பொலிஸ்மா அதிபரும் இந்த திட்டத்திற்கு இணங்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சரின் முறைப்பாட்டுக்கு அமைய சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Share it:

Post A Comment:

0 comments: