வடக்கில் தமிழர் முதலமைச்சராக இருக்கும்போது, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சராக இருப்பதே நியாயம்

Share it:
ad
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

வடக்கு, கிழக்கைப் பொருத்த வரையில் வடக்கு மாகாணத்தில் ஒரு தமிழர் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்  ஒருவர் முதலமைச்சராக இருப்பதே நியாயமாகும். என்பதனை தமிழ்த் தேசியக்கூட்டப்பின் தலைமைகள் புரிந்து கொள்ளாது முதலமைச்சர் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டிலிருப்பது இரு சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் முயற்சியாகும். என சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. முஸ்தபா தெரிவித்தார்.

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (24) தனது ஆதரவாளர்கள் மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலேயே- 

கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர்தான் முதலமைச்சராக வருதல் வேண்டும். முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் முஸ்லிம் காங்கிரசுக்கு இல்லை.

முஸ்லிம் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரேயொரு சபையாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. இதில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். அதுவும் முஸ்லழம் காங்கிரஸின் ஒருவர்தான் முதலமைச்சராக வேண்டும். அதுதான் முஸ்லிம் காங்கிரஸின் நிலைமையாகும்.

தற்போது கிழக்கு மாகாண சபையிலுள்ள 37 உறுப்பினர்களில் 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 13 தமிழ் உறுப்பினர்களும், 09 சிங்கள உறுப்பினர்களும் உள்ளனர்கள். இதனால் முஸ்லிம் ஒருவர்தான் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். இதிலும் ஆகக்கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்குத் தான் வழங்கப்பட வேண்டுமென்பதே கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் விருப்பமாகவுள்ளது.

எமது நாட்டில் அமைந்துள்ள 09 மாகாண சபைகளில் ஒன்றான வடமாகாண சபையினை பெரும்பான்மை பலத்துடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றி தனது கட்சியினதும் தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேண ஒரு மாகாண சபையினை வைத்துள்ளது. ஆனால் முஸ்லிம்கள் ஆளச் சாத்தியமான ஒரேயொரு மாகாண சபையாக கிழக்கு மாகாண சபையாகும்.

2012ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில்  உடன்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவியை வகிப்பது என்றும், முஸ்லிம் காங்கிரஸ் எஞ்சிய இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவியை வகிப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது. இவ்வாறான நிலையில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவதுதான் நியாயமாகும்.

முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை பெற்றாக வேண்டும். இரண்டு வருடங்களின் பின்னர் முதலமைச்சர் பதவி தமக்கு கிடைக்குமென தமது மக்களுக்கு தெரிவித்துக் கொண்ட மு. காங்கிரஸ் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு இரு சமூகங்களுக்கிடையில் குரோதங்களை ஏற்படுத்தாமல் விட்டுக் கொடுப்புடன் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்  செயற்பட்டு ஆரோக்கியமான முடிவுகளை எடுத்தல் வேண்டும்.

எனவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து ஆட்சியினை கைப்பற்றும் தல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்த வேண்டும். இதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசியல் சுயநலன்களை  விடுத்து இரு சமூகங்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டும், இனங்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவும் விட்டுக் கொடப்புகளை மேற்கொண்டு முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முன்வரவேண்டும். என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.  
Share it:

அரசியல்

Post A Comment:

0 comments: