மைத்திரியின் வெற்றி குறித்து, ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள செய்தி

Share it:
ad
விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நல்லாட்சிக்கான அம்சங்கள் அனைத்தும் உரிய முறையில் நிறைவேற்றப்படுமென தாம் நம்புவதாக புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவு செய்யப்பட்டிருப்பதையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது, நாட்டின் ஜனாதிபதியும், முப்படைகளின் தளபதியுமான தங்களின் வெற்றிக்கு இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் உரிய பங்களிப்பை நல்கியுள்ள அதே வேளையில், அந்த வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக  தமிழ், முஸ்லிம் சமூகத்தினரும் திகழ்ந்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. தாங்கள் வெற்றி பெறுவதற்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துவந்த இந்நாட்டு முஸ்லிம்கள் புதிய ஜனாதிபதியான தங்களது தலைமைத்துவத்தின் கீழ் பல்லின மக்கள் மத்தியில் உறுதியான ஒருமைப்பாட்டுடன் சமாதானமாக வாழ்வதற்கான சூழ்நிலை நிலவும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றனர். 

தங்களது வெற்றி சுதந்திர இலங்கையில் ஜனநாயகத்தை பேணி பாதுகாப்பதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் பதினேழாவது அரசியல் அமைப்பு திருத்தத்தை மீண்டும் செயல் படுத்துவதற்கு மக்கள் வழங்கிய ஆணையாகவும் மதிக்கப்படும். 

தங்களாலும் தங்கள் அரசாங்கத்தாலும் நாடு பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி பாதையில்; இட்டுச் செல்லப்படும் என்ற நம்பிக்கை நமக்குண்டு.  
இவ்வாறு அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Share it:

Post A Comment:

0 comments: