அவன் ஆர்வக்கோளாறில் இட்ட ஒரு கையொப்பம்
அவனுக்கு மரண சாசனமாகிப்போனது
வாழ்வதற்கான கால எல்லை இன்னும் இருக்க
வலுக்கட்டாயமாக அதை வரவழைத்தான்
அவன் விரும்பி அணியும் சிவப்பு சால்வை
இப்போது தூக்குக்கயிறாகவே அவனுக்குத்தெரிகிறது
நேற்றுவரை அவனுக்கு வீழ்ந்தது மாலைகள்
இன்று அந்த மாலையின் பூக்களாய் அவனே வீழ்ந்து கிடக்கிறான்
“எதிரியை நான் பார்த்துக்கொள்கிறேன்
கடவுளே ! நண்பனிடமிருந்து என்னைகாப்பாற்று” என்கிற பழமொழியை இப்போதெல்லாம் அவன் அடிக்கடி உச்சரிக்கிறான்..
அடக்குமுறை செல்லாது என்பதையும்
ஆணவம் வெல்லாது என்பதையும் இப்போதுதான் புரிந்துகொள்கிறான்
பத்தாண்டுகள் அவன் என்னவெல்லாம் செய்தான் என்று
புத்தாண்டு வாழ்த்துப்போல் எல்லோர்க்கும் சொல்லித்திரிகிறான்
பாவம் அவன்..
அவனது மாளிகையே ஈற்றில் சிறையாகிப்போனது
அவனது நந்தவனம் கொஞ்சநாளில் சருகாகிப்போனது
அவன் விளக்கேற்றி வைத்த “திரி” அவனையே எரிக்கப்புறப்பட்டதை
எங்கனம் அவன் ஜீரணிப்பான்?
இனங்களுக்கெதிராய் அவன் ஆடிய ருத்ர தாண்டவம்
ஒரு மலைப்பாம்பாகி அவனையே விழுங்கத்தொடங்கிற்று
இனி அவன் வென்றாலும்
மக்கள் மனங்களை வெல்லமுடியாத தலைவனாகவே
வரலாற்றில் இடம்பிடிப்பான்..
எல்லாம் கொஞ்ச காலம் என்பதையும்
இதுவும் கடந்து போகும் என்பதையும் இனி அவன் உணரக்கடவது..
அவனுக்கு மட்டுமல்ல
தெய்வம் நின்று கொல்லும் – கொன்றே தீரும்
எனும் பாடம்
நமக்கும் சேர்த்துத்தான் !
-நிந்தவூர் ஷிப்லி-



Post A Comment:
0 comments: