-தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் ஸாலி-
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தோதலில் இந்த நாட்டின் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபாண்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஒருவன் என்ற வகையில் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். அவர் இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில்:
இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாக தலைவிரித்தாடிய இனவாதம், மதவாதம், சமய மற்றும் கலாசார ரீதியாக சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், சிறுபான்மை மக்களின் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு விடுக்கப்பட்டு வந்த அச்சுறுத்தல் என்பனவற்றுக்கு முடிவு கிட்ட வேண்டும் என சிறுபான்மை மக்கள் அன்றாடம் அழுதும் தொழுதும்; இறைவனை வேண்டி வந்தனர். அந்த வேண்டுதல்களுக்கு இறைவன் தக்க பதிலை அளித்துள்ளான் என்பதையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தோல்வி உணர்த்துகின்றது.
அரச வளங்கள் அனைத்தையும் துஷ்பிரயோகித்து,காட்டுமிராண்டித் தனத்தை கட்டவிழ்த்துவிட்டு தன்னை வெல்ல யாரும் கிடையாது என்ற அதிகார வெறியோடும், மமதையோடும், ஆணவத்தோடும் மூன்றாவது தடவையாகவும் ஆட்சியை கைப்பற்றும் குறிக்கோளுடன் மகிந்த ராஜபக்ஷ களம் இறங்கினார். ஆனால் மகிந்த ராஜபக்ஷவினதும் அவரது சகோதரர்களினதும் கோரப் பிடியில் இருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தனது பட்டம் பதவிகளைத் துறந்து விட்டு அநியாயத்தை எதிர்த்துப் போராட களம் இறங்கினார் மைத்திரிபால சிரிசேன. இறைவன் ஒருபோதும் அநிhயயக்காரர்களுக்கும் அட்டூழியம் புரிகின்றவர்களுக்கும் துணைபோக மாட்டான் என்பதையும் மக்களும் அவ்வாறானவர்களை தொடர்ந்தும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் நன்கு உணர்த்தியுள்ளன. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முதுமொழிக்கு அமையவே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிரிசேன மீது மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் சிறுபான்மையினர் அமோக நம்பிக்கை வைத்துள்ளனர். தங்களுக்கு இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முடிவு கட்டப்பட்டு நிம்மதியாக சமய மற்றும் கலாசார சுதந்திரத்தோடு வாழும் சூழல் உருவாக்கப்படும் என்றும் தங்களது வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையோடும் அவர்கள் காத்திருக்கின்றனர். அரசியலில் இதுவரை எந்த அப்பழுக்கும் இல்லாத புதிய ஜனாதிபதி அந்த நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவராக இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தனது கடமைகளை சரிவர துணிச்சலோடு பாரபட்சமின்றி நிறைவேற்ற தேவையான மன உறுதி, உடல் ஆரோக்கியம் என்பனவற்றை சர்வ வல்லமை மிக்க இறைவன் அவருக்கு அளிக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.
மைத்திரிபால சிரிசேன நாட்டு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் குறிப்பாக இந்த நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அசிங்கமான நடைமுறைகள் மாற்றப்பட்டு நல்லாட்சியுடன் கூடிய புதிய யுகம் ஒன்றை மலரச் செய்வதில் புதிய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பக்க பலமாக இருப்பார் என்றும் நாம் உறுதியாக நம்புகின்றோம். இதுவரை எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டுக்களும் அற்ற ரணில் விக்கிரமசிங்க ஒரு பண்பட்ட அரசியல் சாணக்கியர். இன்று இந்த நாட்டு மக்கள் விடும் நிம்மதி பெருமூச்சுக்கு மூலகர்த்தாவாக அமைந்தவர். அவர் மீதும் இந்த நாட்டு சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அளப்பரிய நம்பிக்கை கொண்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் அவருக்கும் நான் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேநேரம் இந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஜனாதிபதி பிரதமர் ஆகிய இருவருமே நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வன்முறை கலாசாரத்துக்கு முடிவு கட்டுவது புதிய அரசின் பிரதான கொள்கைகளில் ஒன்று. தமது பகைவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பது மைத்திரி யுகத்தின் அல்லது கருணை யுகத்தின் முக்கிய கொள்கையாக உள்ளது. எனவே நடைபெற்று முடிந்த தேர்தலில் எமக்கு அதரவளிக்காத மக்கள் மீது நாம் வெறுப்புணர்வை காட்டாமல் அவர்கள் மீது கருணை காட்டி அவர்களின் ஆதரவையும் திரட்டிக் கொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் இந்த விடயத்தில் முக்கிய அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நான் மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முஸ்லிம் பிரதேசங்களில் புதிய ஜனாதிபதியை ஆதரித்தவர்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். தேர்தல் காலத்தில் எமக்கு எதிராகச் செயற்பட்டவர்களும் எமது சகொதரர்களே. இது ஜனநாயக நாடு யாருக்கும் யாரையும் எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ முடியும். வென்றவர்கள் தோற்றவர்களை ஆதரித்து அரவணைப்பதுதான் நாகரிகமே தவிர அவர்களை தாக்க நினைப்பது முற்றிலும் அநாகரிகமான செயலாகும். இதனைக் கருத்திற் கொண்டு எமது வெற்றியை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் நாம் கொண்டாட வேண்டும் என மிகவும் அன்போடும் வினயமாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
இதேநேரம் எமக்கு கிடைத்துள்ள சில இரகசிய தகவல்களின் படி முஸ்லிம் மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முறுகல் நிலையொன்றை தோற்றுவிப்பதற்காக சிலவிஷமிகள் திட்டமிட்டுள்ளனர். முஸ்லிம் பகுதிகளிலோ அல்லது வேறு பகுதிகளிலோ முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்யும் நடவடிக்கைகளில் மகிந்த ஆதரவு காடையர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் முஸ்லிம்களைப் போன்று தொப்பி அணிந்து நடமாடி இராணுவத்தின் மீது கற்களை வீசியோ அல்லது வேறு வகையிலோ தாக்குதலை நடத்தி அவர்களை ஆத்திரமடையச் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் சதி முயற்சிகளில் ஈடுபடவுள்ளனர். இது குறித்து சகல முஸ்லிம்களும் அவதானமாக இருக்குமாறும்,விழ்ப்பாகச் செயற்படுமாறும்,விவேகமாக நடந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



Post A Comment:
0 comments: