இந்த பிசாசை எல்லோருக்கும் தெரியும் - ஜனாதிபதி மஹிந்த

Share it:
ad
மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று இங்கும் நாட்டை நேசிக்கும் நாட்டுக்கு சேவையாற்றும் தலைவர்களை துரத்த மேலைத்தேய நாடுகள் முயற்சி செய்கின்றன. இவர்களுக்கும் இங்குள்ள குழுக்களுக்கிடையிலான தொடர்பு தெளிவாகிறது. இவர்கள்தான் மாற்றம் குறித்துப் பேசுகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துவின் கொலையுடன் தொடர்புள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே என்ற புலியுடன் தொடர்புள்ள நபரை போதிய புள்ளி இல்லாமல் பொலிஸில் சேர்க்க பொலன்னறுவை உறவினர் ஒருவர் கடிதம் கொடுத்ததாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி இவர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றார். எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது-

2005ஆம் ஆண்டு மக்கள் எனக்கு நாட்டை விடுவிக்க ஆணையைத் தந்தார்கள். 4 வருட காலத்தினுள் மக்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்கவும் பயத்தைப் போக்கவும் நடவடிக்கை எடுத்தேன்.

இன்று தெற்கில் குண்டு வெடிக்கவில்லை. முழு நாடும் பயப்பீதியுடன் இருந்த காலத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். மக்கள் எனக்கு 6 வருடங்கள் ஆணை தந்தாலும் 4 வருடங்களில் மீண்டும் (2010) தேர்தலை நடத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய ஆணையைப் பெற்றேன். மக்கள் எனக்கு ஆணை தந்தனர். நாடு அபிவிருத்தி செய்யப் பட்டுள்ளது.

நெடுஞ்சாலை காரணமாக பல மணி நேர பயணம் குறைவடைந்து ள்ளது. வியாபாரிகள், நோயாளிகள் போன்றோருக்கு அதிக பயன் கிடைத்துள்ளது. சுகவீனமுற்ற தனது தந்தையை நெடுஞ்சாலையினூடாக துரிதமாக அழைத்துச் சென்று காப்பாற்ற முடிந்ததாக சிலர் எனக்குக் கடிதம் எழுதியுள்ளனர். சிலருக்கு இதன் மதிப்பு விளங்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

பிள்ளைகளுக்கு பாதுகாப்பான நாட்டை உருவாக்க இன்று உங்களின் ஆணையைக் கோருகிறேன். பின்னோக்கிச் செல்ல முடியாது. நாம் முன்னெடுத்துவரும்

செயற்திட்டங்களை மாற்றினால் நாடு ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்படும். வறுமையை முற்றாக ஒழிக்கும் திட்டம் முன்னெடுக்கப் படுகிறது. சமுர்த்தி நிவாரணம் கோருவோர் தொகை குறைந்துள்ளது. யாருக்கும் அடிபணியாது வாழும் சூழலை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

உங்கள் குழந்தைக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு இருக்கிறது.இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக க. பொ. த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்ற மாணவர்கள் 1 1/2 இலட்சம் பேருக்கு அரசாங்க உத்தியோகம் வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தெரியாத நபரை விட தெரிந்த பிசாசு மேல் என பழமொழி இருக்கிறது. இந்த பிசாசை எல்லோருக்கும் தெரியும். தாம் ஆட்சிக்கு வந்ததும் 8ஆம் திகதி விமான நிலையத்தை மூடுவதாகக் கூறியிருக்கிறார். 9ஆம் திகதியும் நான் தான் ஜனாதிபதி. நான்தான் விமான நிலையத்தை மூட வேண்டும். மைத்திரி ஆட்சி குறித்துப் பேசினாலும் முழுக்க முழுக்க குரோதம், வெறுப்பு தரும் பேச்சுக்களே முன்வைக்கப்படுகிறது.

எனது மகனின் பிறந்த நாளுக்கு ஹெலிகொப்டர் வாங்கிக் கொடுத்ததாக ரத்ன தேரர் கூறியிருக்கிறார். பிக்குமாருக்கு உகந்ததல்ல இது. பிக்குமாருக்கு உரிய கெளரவத்தை அவர்கள் பாதுகாக்க வேண்டும். சிறுவயதில் பிள்ளைகளுக்கு விளையாட்டு ஹெலிகொப்டர் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

எமது தரப்பிலிருந்து செல்வது நின்றுள்ளது. இப்போது வருவது மட்டுமே நடக்கிறது. எமது தரப்பிலிருந்து வருவதாக பொய்ப்பிரசாரம் பரப்புகின்றனர். எமது தரப்பில் இருந்து செயலாளர் சென்றது போல் அவர்களது செயலாளர் வந்தார்.

எம்மைப் போன்ற தேசத் தலைவர்களை ஓரங்கட்டுவதே மேலைத்தேய நாடுகளின் நோக்கமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் அதனைத்தான் செய்தார்கள். நாட்டை நேசிக்கும் நாட்டுக்காக சேவையாற்றும் தலைவர்களைத் துரத்துகின்றனர். அல்லது கொலை செய்கின்றனர். இங்குள்ளவர் எம்மை ஆணைக்குழு முன் நிறுத்துவதாகக் கூறுகிறார். இந்த இரு குழுக்களுக்குமுள்ள தொடர்பு தெளிவாகிறது. இவர்கள் தான் மாற்றம் குறித்து பேசுகின்றார்கள்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளேயின் கொலை தொடர்பில் கைதான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான லக்ஷ்மன் கூரே இன்று சிறையில் இருக்கிறார். இவருக்குப் போதிய புள்ளி இல்லாவிட்டாலும் அவர் தமது உறவினர் என்று கூறி பொலிஸில் இணைக்கக் கடிதம் கொடுத்தவர் யார்? அவரின் பெயரைக் கூற மாட்டேன். பொலன்னறுவை உறவினர் அந்த புலிக்கு நியமனம் வழங்க உதவி வழங்கினார். இவர்தான் ஜெயராஜின் கொலைக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

மாத்தறைக்கும், பதுளைக்கும் குண்டு எடுத்துச் செல்ல உதவியவர் இவர். இது குறித்தும் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

இங்கு பிரதி அமைச்சர் நிசாந்த முதுஹெட்டிகம, ரமேஷ் பதிரண எம். பி. கீதா குமாரசிங்க ஆகியோரும் உரையாற்றினர்.
Share it:

Post A Comment:

0 comments: