ரவூப் ஹக்கீமிடம் + உலமாக்கள் முன்னிலையில் பைஅத் (சத்தியப்பிரமாணம்)

Share it:
ad

தற்போதைய சூழந்லையில்; ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருமித்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உலமாக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் முன்னிலையில் வலியுறுத்திக் கூறினர். 

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உரிய முடிவை மேற்கொள்வதற்கு ஏதுவாக மசூரா எனப்படும் கலந்தாலோசனை நடாத்துவதற்காக வழமை போன்று கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த உலமாக்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கொழும்புக்கு அழைத்து, கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் தமது அலுவலகத்தில் வியாழக்கிழமை (11) முற்பகல் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

ஜனாதிபதி தேர்தல் பற்றி அறிவிக்கபட்டதிலிருந்து இதுவரையிலான காலத்தில் கட்சியின் வௌ;வேறு மட்டங்களில் கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய அம்சங்களையும், முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் நடந்த சந்திப்புகளையும், அவற்றிற்கான பின்னணியையும், அச்சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத் தருவதில் அரசாங்கத்தை பொறுத்தவரை சாதகமான நிலைமை காணப்படுகின்றதா அல்லது சமிக்ஞைகள் கிடைத்துள்ளனவா என்பன பற்றியும் அமைச்சர் ஹக்கீம் உலமாக்களிடம் விளக்கி கூறினார். 

அவற்றை மிகக் கவனமாக செவிமடுத்த கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகை தந்திருந்த உலமாக்கள் அமைச்சரிடம் பிரஸ்தாப ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் களநிலைமை, அந்த மாவட்டங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வசிக்கும் முஸ்லிம்களின் மனநிலைமை என்பவற்றை பற்றி அமைச்சரிடம் மிகவும் தெளிவாக எடுத்து கூறினர். 

பின்னர் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் கட்சி தலைவர் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில்  அவரது ஆரம்ப உரையைத் தொடர்ந்து, கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி உடன் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் உலமாக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். தலைமைத்துவத்திற்கு முற்றிலும் கட்டுப்பட்டு ஏகமனதான தீர்மானத்தையே மேற்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது அபிப்பிராயங்களைக் கூறினர். 

நான்கு மணிநேரமாக நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுவாக சமூகத்தின் எதிர்பார்ப்பு, கட்சி நலன், நாட்டு நலன் என்பவற்றை கருத்தில் கொண்டே எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது பற்றி முடிவு செய்யப்பட வேண்டும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 

தலைமைத்துவமும், கட்சியும் மேற்கொள்ளும் தீர்மானத்துக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும், தலைவர் ரவூப் ஹக்கீமிடம் உலமாக்கள் முன்னிலையில் பைஅத் (சத்தியப்பிரமாணம்) செய்தனர். 

தவிர்க்க முடியாத காரணங்களினால் தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், மாகாணசபை உறுப்பினர்களான சட்டத்தரணி லாஹிர், ஏ.எல். உவைஸ் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.  

Share it:

Post A Comment:

0 comments: