‘வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்குதான் ஒபாமா’ - வடகொரியா

Share it:
ad
வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பான கதையுடனான ‘தி இன்டர்வியூ’ என்ற படத்தினை வெளியிடுவதில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அமெரிக்கா வடகொரியா இடையில் கடுமையான சொற்போர் இடம்பெற்றுவந்த நிலையில் ஜனாதிபதி பராக் ஒபாமாவை அஜாக்கிரதாயான ஒரு குரங்கு என வடகொரிய விமர்சித்துள்ளது.

தமது நாட்டின் இணையத்தள சேவைகளை அமெரிக்கா முடக்கியதாக குற்றம்சாட்டி,‘வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்குதான் ஒபாமா’ என்று வட கொரியா பாதுகாப்பு ஆணையம் விமர்சித்துள்ளது.

வட கொரியாவின் இணைய சேவைகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது முடங்கியவண்ணம் இருந்தன. இந்த முடக்கத்துக்கு அமெரிக்காதான் காரணம் என்று வட கொரிய பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், இதற்குக் காரணம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்று குறிப்பிட்ட வட கொரிய பாதுகாப்பு ஆணையம், அவரை ‘வெப்பமண்டலக் காட்டில் உலவும் குரங்கு’ என்றும் விமர்சித்துள்ளது. இந்த விமர்சனத்துக்கு அமெரிக்க தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அத்துடன், ‘தி இன்டெர்வியூ’ திரைப்பட சர்ச்சைக்காக சோனி பிக்சர்ஸ் ஹேக் செய்யபட்டதற்கும் வட கொரியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹொலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தி இன்டெர்வியூ’. இந்தப் படம் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்கை மையப்படுத்தி  நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ளது. அவரைப் படுகொலை செய்ய அமெரிக்க புலனாய்வுத் துறை திட்டமிடுவதாக கதை அம்சம் உள்ளது.

இந்தப் படத்தை வெளியிட இருந்த சோனி பிக்சர்ஸின் பல நூறு ஊழியர்களின் அலுவலக கோப்புகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, படத்தை வெளியிட்டால் தியேட்டர்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று மர்ம நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சோனி பிக்சர்ஸ் ‘தி இன்டர்வியூ’ திரைப்படம் வெளியிடுவதை நிறுத்துவதாக அறிவித்து, பின்னர் அதனை திரும்பப் பெற்று முதலில் அறிவித்தபடியே கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட்டது.

சோனி பிக்சர்ஸை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விமர்சித்த பின்பு இந்தப் படத்தை வெளியிடும் முடிவை அந்த நிறுவனம் எடுத்தது. வட கொரியாவும் இந்தப் படம் வெளியானால், அமெரிக்காவுடன் போரில் இறங்கவும் தயார் என்று கூறியது.

கொரிய பிரிவுக்கு பின்னர் 1953 முதல் அமெரிக்கா  வட கொரியா இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தற்போது இந்தத் திரைப்பட சர்ச்சையை முன்வைத்து அமெரிக்காவும் வட கொரியாவும் சைபர் வழியிலான மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

Share it:

Post A Comment:

0 comments: