செய்கூலியும், சேதாரமும்..!

Share it:
ad
பஸ்  புறப்படுகின்ற கடைசி நேரத்தில் ஓடிச் சென்று மிதிபதகையில் தொற்றிக் கொண்டு பயணிப்பதற்கு காத்திருக்கின்றனர் -  இன்னும் தமது முடிவை அறிவிக்காதிருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் !

ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டு பஸ்களுக்கும் ஆட்கள் தேவையாக இருப்பதால் நம்மை ஏற்றாமல் பஸ்கள் நம்மைக் கடந்து போகாது என்ற மிகையான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கலாம். அவ்வாறில்லாவிட்டால், ஏற்கனவே முன்பதிவு (புக்கிங்) செய்தவர்களாகவோ அல்லது  இந்த பயணம் போக வேண்டும் என்ற அக்கறை இல்லாதவர்களாகவோ அவர்கள் இருக்க வேண்டும். எந்த பஸ்ஸில் போனால் பயணம் சுகமாக அமையும்? எந்த பஸ்ஸின் சாரதி நம்மை கொண்டு சேர்ப்பார்? என்று ஆராய்ச்சிகளை நடாத்திக் கொண்டே.... ஒவ்வொரு பஸ்ஸையும் எட்டிப் பார்த்துவிட்டு, எதிலும் ஏறாமல் நிற்கின்றனர் அவர்கள்.  

சில முஸ்லிம் தலைமைகள் ஏற்கனவே இரு பஸ்களினதும் சாரதிகளுக்கு பக்கத்து ஆசனத்தை பிடித்துக் கொண்டு தமது வாடிக்கையையும் விசுவாசத்தையும் காட்டியிருக்கின்றனர்.  அவர்களில் சிலருக்கு கீழே நிற்பவர்களை ஏற்றுவதற்கு விருப்பமில்லை. சிலர் ஜன்னல் வழியாக தலையை நீட்டி 'வர விரும்புபவர்கள் சீக்கிரம் ஏறிக் கொள்ளுங்கள் பஸ் புறப்படப் போகின்றது' என்று சொல்கின்றனர். ஒரு சிலர் தமது சமூகம் பற்றி இடைக்கிடையே சிந்திக்கின்றனர். இன்னும் சிலர் 'அசைக்கக்கூடிய' ஆசனமும் ஏ.சி.யும் வேண்டுமென நினைக்கின்றனர். மக்களின் மன உணர்வு சிலருக்கும், பைல்கள் பற்றிய பயம் வேறு சிலருக்கும் முக்கியமானதாக இருக்கின்றது.  

ஆனால், இவர்கள் எல்லோரையும் தெரிவுசெய்து வழியனுப்பி வைப்பதற்காக பஸ் நிலையம் வரை வந்திருக்கும் வாக்காளப் பெருமக்களின் கவலை எல்லாம்... தலைவர்களின் 'பயணங்கள்' சிறப்பாக அமைந்து அதன்மூலம் தம்முடைய உரிமையும் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. பஸ் போன பிறகு கைகாட்டும் ஆட்களாக தமது தலைவர்கள் இருக்கக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டிருக்கின்றார்கள். 

மாறிய களநிலைமை
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டாயிற்று. குறைந்தபட்சம் 10 அரசியல்கட்சிகளும் 02 சுயேட்சை குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்வதுதான் மீதமுள்ளது. அதுவும் எதிர்வரும் திங்கட்கிழமை நடந்துவிடும். இருப்பினும் இன்னும் பிரதான முஸ்லிம் கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தம்முடைய ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் அடுத்த வாரத்திற்குள் எல்லோரும் ஏதாவது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தே ஆக வேண்டும். 

ஜனாதிபதித் தேர்தல் என்ற கதையின் கிளைமேக்ஸ் கட்டத்தில் மைத்திரிபால சிறிசேன என்ற சுதந்திரக் கட்சிக் காரர் ஒருவர் பொது வெட்பாளராக உள் நுழைந்தமையாலேயே சிறுபான்மை கட்சிகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் இந்தளவுக்கு குழம்பிப் போயிருக்கின்றன. இந்த நாட்டில் இனவாத சக்திகள் அடக்கி ஒடுக்கப்பட்டு, மைத்திரி மற்றும் சந்திரிகாவை தவிர வேறு யாரும் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பார்களானால் முஸ்லிம் கட்சிகள் எவ்வித ஆரவாரமும் இன்றி ஆளும் ஜனாதிபதியை ஆதரவளிப்பதற்கான முடிவை இந்நேரம் எடுத்திருப்பார்கள். ஆனால் மக்களின் மன உணர்வுகளும் மக்கள் பிரதிநிதிகளின் நலன்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இயல்பை கொண்டிருப்பதால் முடிவெடுப்பதில் முட்டுக்கட்டைகள் எழுந்துள்ளன. 

முஸ்லிம் அரசியலில் சிறிய பருமனான அரசியல் கட்சிகளுள் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்ற அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக முன்னமே அறிவித்து விட்டது. இந்நிலையில், எல்லோரையும் முந்திக்கொண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க அதாவுல்லா ரகசிய திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு கலப்படமற்ற வதந்தியை நம்பி சிலர் தொலைபேசியில் அழைத்து என்னிடம் கேட்டனர். 

இருப்பினும் தேசிய காங்கிரஸ் தகவல்களின் படி அக்கட்சி தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. ஒருவேளை மைத்திரி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, அடுத்துவரும் பொதுத் தேர்தலில் பொது எதிரணி (ஐக்கிய தேசிய கட்சி) வெற்றி பெறுமாயின் (?) அந்தப் பக்கம் சென்று சேர்ந்து கொள்ளும் வியூகத்தை தேசிய காங்கிரஸ் தலைமை வகுக்கலாம். ஏனென்றால் ஆளும்தரப்பில் இருந்து கொண்டு சேவையாற்றுவதே அமைச்சர் அதாவுல்லாவின் வழக்கமான அரசியலாக இருக்கின்றது. 

இதேவேளை அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கான அறிகுறிகள் அதிகம் தென்பட்டன. ஆனால் ஹூனைஸ் பாறுக் எம்.பி. எதிரணிப்பக்கம் போய் சேர்ந்ததன் பின்னர் நிலைமைகள் பற்றிய அவதானிப்பு மாறுபட்டிருக்கின்றது. தன்னால் நிறுத்தப்பட்ட ஒருவர் தனக்குச் சொல்லாமல் எதிரணிப் பக்கம் சென்றமை அமைச்சர் றிசாட்டுக்கு பெரும் சிக்கலாக போய்விட்டது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டதாக அவர் நினைத்தார். ஏற்கனவே மைத்திரிக்கு ஆதரவளிக்க மக்கள் காங்கிரஸ் அதிக விருப்பு கொண்டிருந்தாலும் ஹூனைஸ் பாறுக் சென்ற இடத்திற்கு பல நாள் கழித்து நாமும் சென்று சேர்வதா என்ற எண்ணம் தலைவருக்கு ஏற்பட்டிருக்கலாம். 

மக்கள் காங்கிரஸின் அதிரடி
மறுபுறத்தில் அக்கட்சி இன்னுமொரு நகர்வை கிழக்கு மாகாண சபையில் மேற்கொண்டது. இதுகால வரைக்கும் சத்தம்போடாமல் கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பிற்கு ஆதரளித்துக் கொண்டிருந்த மக்கள் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். அமீரலியின் தலைமையில் தமது ஆதரவை விலக்கிக் கொண்டு சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்தனர். மாகாண சபையில் ஆட்சிப் பலம் குறைவதையும் மக்கள் காங்கிரஸ் தம்மிடமிருந்து எதையோ எதிர்பார்ப்பதையும் புரிந்துகொண்ட அரசாங்கம் ஒரு பதில் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதாயிற்று.  

மாநிலத்தைப் போன்று மத்தியிலும் இவ்வாறான நகர்வொன்றை ம.கா. எடுத்துவிடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் விரைந்து செயற்பட்டது. ஆளும் தரப்பில் தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஆசனத்தை நிரப்பிக் கொண்டிருந்த ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்ய வைக்கப்பட்டார். அவரது இடத்தை அமீரலிக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்தது. திடீரென அக்கட்சியும் அரசாங்கமும் மேற்கொண்ட நடவடிக்கைகள் இலேசாக ஒரு சந்தேகத்தை கிளப்பிவிட்டன. இந்த சந்தேகத்தை நிவர்த்திக்கும் தகவல்கள் இரு தினங்களுக்குள் வெளியாகியது. 

அதாவது – கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக அமீரலியை நியமிக்குமாறு மக்கள் காங்கிரஸ் முன்னர் கோரியிருந்தது. ஆனால் அரசாங்கம் இதற்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆதரவு குறித்து அரசாங்கத்துடன் அக் கட்சி நடாத்திய இரகசிய சந்திப்புக்களில் தமது கட்சிக்கு இன்னுமொரு எம்.பி. ஆசனம் வழங்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைத்திருந்ததாக அரசல் புரசலாக தெரிய வருகின்றது. அது உண்மையென்றால், அந்த எம்.பி.பதவியை பெற்றுக் கொள்வதற்கான நோக்கத்திலும் கிழக்கு மாகாண சபையில் சுயாதீனமாக இயங்கும் உபாய நடவடிக்கையை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கலாம். 

தேசிய பட்டியல் எம்.பி. ஆசனத்தை மக்கள் காங்கிரஸின் அமீரலிக்கு வழங்குவதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்து விட்ட நிலையிலும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை அமைச்சர் றிசாட் இன்னும் எடுக்கவில்லை. எம்.பி. ஆசனம் கிடைத்தவுடன் அவர் அரசாங்கத்திற்கு பச்சைக் கொடி காட்டிவிடுவார் என்றே நம்பப்பட்டது. ஆயினும் இதுவரையும் நிலைமைகளை ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றார். 
இதற்கிடையில் தமக்கு பாராளுமன்ற உறுப்பினர் தேவையில்லை என்று மாகாண சபை உறுப்பினர் அமீரலி ஒரு 'பில்ட்அப்' கொடுத்தார்;. அதனால் அவருக்கு பிரதியமைச்சு பதவியும் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளிவந்தன. மத்தியிலும் மாநிலத்திலும் ஸ்திரத்தன்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக மீன்பிடி பிரதியமைச்சு அமீரலிக்கு வழங்கப்படலாம் என்ற ஊகமும் இருந்தது. இருந்தபோதிலும் தற்போது பிரதியமைச்சு கிடைப்பதற்கான நிகழ்தகவுகள் குறைவடைந்து செல்வதாக தெரிகின்றது. அமீரலிக்கு பிரதியமைச்சு கொடுத்தால் ஏனைய சிறு கட்சிகளும் இந்த உத்தியை கையாளலாம் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. 

எதுஎப்படியோ 12ஆம் திகதி அமீரலி எம்.பி.யாக சத்தியப்பிரமாணம் செய்வார் என்று ஆளும்கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திகதி அறிவிப்பிலும் ஒரு சூட்சுமம் இருக்கின்றது. அதாவது 8ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதற்கும் 12ஆம் திகதிக்கும் இடையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் முடிவை அக்கட்சி எடுக்காவிட்டால், அமீரலிக்கு அரசாங்கம் எம்.பி. பதவியை கொடுக்காது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அமீரலியையும் றிசாட்டையும் பிளவுபடுத்தி கட்சியை துண்டாடுவதற்கான கைங்கரியங்களும் மேற்கொள்ளப்படும் அபாயமிருக்கின்றது. 

மு.கா.வின் இக்கட்டான நிலை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுப்பதில் திரிசங்கு நிலையில் இருக்கின்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இது தொடர்பாக ஏகப்பட்ட சந்திப்புக்களை மு.கா. மேற்கொண்டு வருகின்றது. நேற்றும் ஒரு சந்திப்பு இடம்பெறவிருந்தது, இன்றும் ஒரு கூட்டம் ஏற்பாடாகியுள்ளது. இதன்பொருட்டு எல்லா உறுப்பினர்களும்  கொழும்புக்கு வந்து கூடாரமடித்து நிற்கின்றனர். இதற்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி எம்.பி.யும் சந்தித்துள்ளனர். 

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதற்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது. அதனை செய்து தருவதாக உத்தரவாதமளிக்கும் தரப்பையே ஆதரிப்பதாகவும் கூறி வருகின்றது. கடந்த பல தேர்தல்களில் மு.கா.வுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மு.கா. பெற்றுக் கொடுக்கவில்லை என்ற இமாலய குற்றச்சாட்டை பொது மக்கள் அக்கட்சி மீது வைத்திருக்கின்றனர். எனவே மு.கா. விரும்பியோ விரும்பாமலோ இவ் விடயங்களில் பெற்றுக் கொடுக்காமல் மக்கள் மன்றத்திற்கு போக முடியாத களநிலைவரமே இன்று காணப்படுகின்றது. 

இவ்வாறான ஒரு பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து தேர்தல் தொடர்பில் பேசியது. அம்பாறை கரையோர மாவட்ட உருவாக்கம், வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாணல், இந்நாட்டு முஸ்லிம்களின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்தல் போன்ற விடயங்களி;ல் இறுக்கமான கோரிக்கைகள் மு.கா. தரப்பு ஜனாதிபதி மஹிந்தவிடம் முன்வைத்தது. இது பற்றி செயலாளர் எம்.ரி. ஹசனலி எம்.பி.யிடம் வினவியபோது, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கலந்துரையாடிவிட்டு மீண்டும் மு.கா.வை சந்திப்பதாக ஜனாதிபதி கூறியதாக என்னிடம் குறிப்பிட்டார். 

அவருடனான உரையாடலில் சில விடயங்கள் தொனித்தன. அதாகப்பட்டது, முஸ்லிம் காங்கிரஸ் அழுத்தமாக இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதுமட்டுமன்றி இவற்றுள் முன்னைய தேர்தல் காலங்களில் அரசாங்கம் வாக்குறுதியளித்த கோரிக்கைகளை இந்த தேர்தலுக்கு முன்னமே நிறைவேற்ற வேண்டுமென்ற தொனியில் கேட்டிருப்பதாகவும் தெரிகின்றது. எனவே, பொது பலசேனாவை கூட்டுச் சேர்த்துள்ள ஆளும்கட்சி  சிங்கள மக்களின் வாக்குகளை பெற வேண்டியிருப்பதால் மு.கா.வின் எல்லாக் கோரிக்கைகளையும் அரசாங்கம் நிறைவேற்றாது என்றே எண்ணத் தோன்றுகின்றது. எவ்வாறிருப்பினும் மு.கா.வை எப்பாடுபட்டாவது தன்வழிக்கு கொண்டு வர அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. 

இதற்குப் பின்னர் கடந்த புதன்கிழமையளவில் ஆளும் தரப்பை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பல்வேறு காரணங்களால் மு.கா. அச்சந்திப்பிலிருந்து நழுவிக் கொண்டது. இந்நிலையில் நேற்று அல்லது இன்று அந்த சந்திப்பை மேற்கொள்ள ஏற்பாடாகியிருந்தது. 

அமைச்சர் றிசாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் அதிரடி நடவடிக்கையும் அதனையத்து ஒரு எம்.பி. பதவி உறுதிப்படுத்தப்பட்டதும் மு.கா.வுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. தம்மை விட குறைந்த உறுப்பினர்களை கொண்டுள்ள ஒரு கட்சிக்கு இவ்வளவு முடியுமென்றால் நாம் இதைவிட சாதிக்க வேண்டும் என மு.கா. சிந்தித்திருக்க வாய்ப்புள்ளது. ஆயினும் மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கே முன்னுரிமை அளிப்பது என்ற நிலைப்பாட்டில் வெளிப்படையாக அவ்வாறான திட்டங்களை கட்சி தீட்டவில்லை என்றே கூறப்படுகின்றது. 

அரசின் ராஜதந்திரம்

கிழக்கு மாகாண சபையில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாளில் பட்ஜெட் வெற்றி பெறுவதற்கான நிலைமைகள் இருக்கவில்லை. இதனால் சபை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்;டது. பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தில் சில மு.கா. உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. இது இயல்பாகவே நடந்ததாக விடயமறிந்த நண்பர் ஒருவர் கூறினார். எவ்வாறிருப்பினும் தமக்கும் கொஞ்சம் சுரணை இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதற்கான களநிலைமைகளை சாதகமாக்கிக் கொண்டு மறுநாள் அமர்வில் எந்த உறுப்பினரும் பங்கு கொள்ளவில்லை. இந்நிலையில் ஜனவரி 12ஆம் திகதிக்கு சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
முஸ்லிம் காங்கிரஸின் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றிருந்தால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி ஆட்;டம் கண்டிருக்கும். ஜனாதிபதியிடம் மு.கா. முன்வைத்திருக்கும் தேர்தலுக்கான கோரிக்கைகளை அரசாங்கம் தட்டிக் கழித்திருந்தால், றிசாட் அணியினரைப் போல மு.கா. அணியினரும் கிழக்கு மாகாண சபையில் தமது ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பார்கள். இதனால் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமாயின் அரசாங்கம் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும். 

எனவே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே மாநிலத்தில் ஆட்சியை தூக்கி நிமிர்த்துவற்காக முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகள் மீளப் பரிசீலிக்கப்பட்டிருக்கும். அவற்றுள் சிலவற்றுக்கு சாதகமான பதிலும் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இவ்வாறெல்லாம் நடந்தாலும் நடக்கலாம் என்ற அச்சத்திலோ என்னவோ அரசாங்கம் தேர்தலுக்கு பின்னரான ஒரு திகதிக்கு கிழக்கு மாகாண சபை அமர்வை ஒத்தி வைத்துள்ளது. இப்போது நிலைமை சரியில்லை எனவே தேர்தலுக்கு பின்னர் பட்ஜெட்டை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் புத்திசாதுர்யமாக சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

இது ஒருவிதத்தில் முஸ்லிம் காங்கிரஸின் 'பிடிமானத்தை' குறைவடையச் செய்துள்ளது என்றும் சொல்லலாம். கிழக்கு மாகாண சபையில் தேர்தல் முடியும் வரைக்கும் மு.கா.வினால் பெரிதாக எதனையும் செய்து, அரசாங்கத்தை பயமுறுத்த முடியாத நிலை ஏற்பட்டுப் போயுள்ளது.  எது எவ்வாறிருந்தாலும் மு.கா.வின் ஆதரவு அரசுக்கு தேவை என்பதில் இரு கருத்துக்கள் இல்லை. என்ன விலை கொடுத்தாவது அதனை பெற்றுக் கொள்ள ஆளும்தரப்பு பின்னிற்காது, ஆனால் ஒரேயொரு நிபந்தனை – அந்த விலை சிங்கள மக்களை பாதிக்காததாக இருக்க வேண்டும். 

பொதுவாக முஸ்லிம் கட்சிகளும் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தீர்மானம் எடுப்பதில் ஜாதிக ஹெல உறுமயவும் பொதுபலசேனாவும் எடுத்த முடிவுகள் தாக்கம் செலுத்துகின்றன. மக்களிடம் ஒருவிதமான எதிர்பார்ப்பு இருக்கின்றது, முஸ்லிம் தலைமைகளின் எண்ணம் வேறுபட்டதாக இருக்கின்றது. பைல்கள் பற்றியும் கொஞ்சம் அவர்கள் சிந்திக்கின்றனர். உறுப்பினர்களுக்கு கடுமையான 'டிமாண்ட்' நிலவுவதாலும் அவர்கள் இக்காலப்பகுதியில் தமது அரசியலை நல்ல விலைக்கு விற்க முடியும் என்பதாலும் அவர்களுடைய போக்குகள் புதிராக இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் திருப்திப்படுத்தும் புள்ளியில் யார் வேட்பாளராக இருக்கின்றாரோ அவருக்கே ஆதரவளிக்க வேண்டியுள்ளது. அதனாலேயே இத்தனை தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது நடைமுறை யதார்த்தம். 

சேதாரம் குறைந்த பக்கத்தில் சென்று சேர்வோம் என்று முஸ்லிம் தலைமை ஒருவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்கூலி, சேதாரம் பற்றிய கதைகள் எல்லாம் வெறும் சிலிர்ப்பூட்டல்களுக்காகவும் கைதட்டல்களுக்காகவும் சொல்லப்படுவதாக இருக்கக் கூடாது. உண்மையில் இருபக்கங்களிலும் சிங்கள ஆட்சிதான் இடம்போறப்போவதால், யார் ஜனாதிபதியானாலும் முஸ்லிம்களுக்கு நல்லதுகளும் கெட்டதுகளும் இடம்பெறப் போவதே நடைமுறை யதார்த்தமாக இருக்கும். 

அந்தவகையில் இந்த செய்கூலி, சேதார கதையாடல்கள் எல்லாம் ...... மக்களின் சேதாரங்களாகவும் மக்களின் செய்கூலிகளாகவும் இருக்க வேண்டும். மக்கள் உங்களிடம் தங்கத்தை விட பெறுமதியான ஆணையை அடகு வைத்திருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல் முடிவெடுத்தால் - இனிவரும் காலங்களில் தெருத்தெருவாய் விற்றாலும், பழைய தங்க விலைக்கு கூட உங்களது அரசியல் விலைபோகாது.
- ஏ.எல்.நிப்றாஸ்
Share it:

Post A Comment:

0 comments: