மஹிந்த வெல்லுகின்றாரா, மைத்திரி வெல்லுகின்றாரா என்பதனை விட...?

Share it:
ad
-Masihudeen Inamullah-

நல்லவர்களை தீயவர்களிடமிருந்து, நயவஞ்சகர்களிடமிருந்து பிரித்தரிவதற்காக காலத்துக்குக் காலம் சமூகங்கள் சோதிக்கப்படுகின்றன. அது பிரபஞ்சத்திற்காக இறைவன் வகுத்த நியதி.

முஸ்லிம் சமூகம் கடந்த பல தசாபதங்களாக பலவேறு சோதனைகளை தாண்டி வந்துள்ளது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொள்கை வழி நின்றவர்கள் அனாதவராய் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டுள்ளார்கள்.

போருக்குப் பின்னரான இலங்கையில் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட பொழுது அல்லாஹ்வைத் தவிர சமூகத்திற்கு குரல் கொடுக்க எவரும் இருக்கவில்லை.

அன்று நம் தலைவர்கள் சமூகத்திற்காக பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் எழுந்து முழங்கி பதவி பட்டங்களை துச்சமாய் மதிப்பவர்கள் நாங்கள் என்ற ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தால் இன்று இந்த திரிசங்கு நிலை ஏற்பட்டிருக்காது.

மீண்டும் ஒருமுறை இனவாத பிசாசுகளை உசுப்பேற்றுகின்ற அரசியலை நாம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது, யாருக்கும் வேண்டாத விருந்தாளிகளாக நமது தலைமைகள் மாறியிருக்க மாட்டாது.

இன்று தலைவர்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை என சமூகம் துணிந்திருப்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றக் கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவே பொதுசன அபிப்பிராயத்திற்கு அவர்கள் வேறு வழியின்றி தலை சாய்க்கிறார்கள், ஒரு சிலரை தவிர.

முஸ்லிம் சமூகம் தனிமைப்பட்டு ஒடுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் பட்ட பொழுது, சமூகத்தின் பிரச்சினைகளை இன மத சாயங்களுக்கு அப்பால் தேசத்தின் பிரச்சினைகளாக அணுகும் படியும், தேசத்தின் முற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து செயற்படும்படியும் நாம் வலியுறுத்தினோம்.

அன்று நீங்கள் அரண்மனை சௌகரியங்களில் ஒட்டியிருந்து உங்கள் இல்லாமைகளுக்கும் இயலாமைகளுக்கும் நியாயங்கள் தேடிக் கொண்டிருந்தீர்கள், ஆத்திர அவசரம் வேண்டாம் என்றீர்கள் தருணம் வரும் என்றீர்கள்.

இன்று நல்லாட்சி விழுமியங்களை நேசிக்கின்ற தேசிய சக்திகள் சிறுபான்மை சமூகங்களையும் அரவணைத்துக் கொள்ள இரு கரம் நீட்டுகின்ற வேளையில், முஸ்லிம் சமூகத்தை தேசிய அரசியல் பிரவாகத்தில் இருந்து தனிமைபடுத்தாது, எமக்கெதிரான சவால்களை தேசிய நிகழ்ச்சி நிரல்களினூடாக எதிர் கொள்ள கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை புரிந்து கொள்ள முடியாத தலைமைகள் நிராகரிக்கப்படும் என்ற நிலைமை தோன்றியுள்ளது.

இன்று மஹிந்த வெல்லுகின்றாரா, மைத்திரி வெல்லுகின்றாரா என்பதனை விடவும் இந்த சமூகத்தில் உள்ள நல்லவர்கள் வெல்லுகின்றார்களா நயவஞ்சகர்கள் வெல்லுகின்றார்களா என்று சமூகம் பார்த்திருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் முடிவை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் முஸ்லிம் சமூகம் மிகத் தெளிவான முடிவுடனேயே இருக்கின்றார்கள்.

ஆனால்..

நீங்கள் ஒரு முடிவை எடுப்பதன் மூலம் கட்சிக் கட்டமைப்புக்களை கொள்கைகளை மக்கள் அபிலாஷைகளை மீறி வழமையாக காய்நகர்த்துகின்றவர்கள் யார் என்பதனை உலகு அறிந்து கொள்ளச் செய்யலாம்.

கடந்தகாலங்களில் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பெரும் சவாலாக இருந்தது, ஆனால் தற்பொழுது முஸ்லிம் அரசியலை குத்தகைக்கு எடுத்துள்ளோரை சரியான திசையில் நகர்த்துவதே பெரும் சவாலாக மாறியுள்ளது.

அரசியல் எதிரிகள் ஒழிந்துவிட வேண்டும் என்று எந்த ஒரு சமூகமும் எதிர்பார்க்க முடியாது, ஆனால் எல்லா கள நிலவரங்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளில் ஆரோக்கியமான அரசியல் நகர்வுகளில் அவதானமாக இருத்தல் வேண்டும்.

முஸ்லிம்களுக்கெதிரான சவால்களை தேசத்திற்கு எதிரான சவலகளாக அணுகி தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து தேசப்பற்றுடன் கூடிய அரசியல் நகர்வுகளில் நாம் பங்கு கொள்ளாவிடின் பெரும் வரலாற்றுத் தவறொன்றை இழைத்துக் கொண்டவர்கள் ஆவோம்.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.

தேசமும் சமூகமும் விரும்பும் புரட்சிகரமான மாற்றங்களின் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக நாமும் இருக்க வேண்டும்இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் சகல சமூகங்களும் சமமாக மதிக்கப் படுகின்ற ஒரு தேசத்தைக் கட்டி எழுப்புவதில் எமது வரலாற்றுப்பணி தொடர வேண்டும்..!,

மாற்றங்களை அடுத்தவர்கள் ஏற்படுத்தும் வரை காத்திருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள், மாற்றத்தின் பங்காளர்களாய் இருப்பவர்கள் சாதனையாளர்கள். எந்தக் குதிரை வெல்கின்றது என்பதனைவிட எந்தக் கொள்கை வெல்கின்றது என்பதுவே முக்கியம்.
Share it:

Post A Comment:

0 comments: