முஸ்லிம் தலைமைகளிடத்தில் உள்ள தடுமாற்றம், வாக்காளரிடத்தில் இல்லை...!

Share it:
ad
(JM.Hafeez)

அரசுக்கு இதுகால வரை ஆதரவு தெரிவித்து வந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசை விட்டு வெளியேறக் கூடாது. தொடர்ந்தும் அவர்களது ஆதரவை அரசுக்கே தெரிவித்து வரவேண்டும். இதுவே அவர்களது அரசியல் சாணக்கியமாக இருக்கவேண்டும் என்பதை பொது மக்கள் பலர் பரவலாகத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதகாலமாக இலங்கை அரசியல் களத்தில் பல்வேறு மாறுதல்களும் விமரிசனங்களும் கட்சித் தாவல்களும் இடம் பெற்றுவருகின்றன. சூடு பறக்கும் செய்திகள் பல அடிபடும் வேளையில் அதுவும் அரசை விட்டு பிரபலங்கள் பல வெளியேறுவதாகவும் விரைவில் வெளியேறப் போவதாகவும் அனுமானிக்கும் இக்காலத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசையே ஆதரிக்கவேண்டும். அதாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களையே ஆதரிக்க வேண்டும் என்ற செய்தியை  வாசிப்பவர்களுக்கு ஏதோ வித்தியாசமாகத் தோன்றலாம். அப்படி வித்தியாசம் எதுவுமே இல்லை. அதுதான் உண்மை.

காரணம் என்ன தெரியுமா? முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்ன முடிவெடுத்தாலும் அவர்களது வாக்கு வங்கியில் எது வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஏற்கனவே வாக்காளர்கள் முடிவு எடுத்து விட்டார்கள். அதில் அவர்கள் உறுதியாய் உள்ளனர். தலைமைகளைப் போன்று தலம்பல் இடம் பெற வில்லை. இது தொடர்பாக ஒரு கல்விமான் பின்வருமாறு கூறினார்.

எமது தலைவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அது வாக்களர் மத்தியில் தாக்கத்தை செலுத்தாது. எனவே அவர்கள் தொடர்ந்தும் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு சுகபோகமாக வாழ்வதில் தவறில்லை என்பதாகும். இக்கதையைக் கேட்ட கட்சி சார்பு கொண்ட ஒருவர் தமது வாக்களர்கள் திண்டாடும் போது தலைமை எப்படி சுகபோகம் அனுபவிப்பது எனத் திருப்பிக் கேட்டார். உண்மைதான். அது உண்மையான தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றார் அவர்.

அப்படியாயின் இப்போது முஸ்லிம் அரசியல் தலைமைகள் உண்மையான தலைவர்கள் இல்லையா? என அவர் மீண்டும் கேட்டார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் இதுதான். 

இன்று நாடு போகும் நிலையில் கட்சி மாறி ஆரவாரம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. ஆரவாரத்தை விட பொது மக்களின் வாக்குப் பலம் மிக முக்கியம். சும்மா இருந்த சங்கை ஆண்டி ஊதிக் கெடுத்ததானாம் என்பது போல சும்மா இருக்கும் பேரின வாதிகளை வம்புக்கு தூண்டு வதை விட மௌனமாக இருந்து சந்தர்ப்பம் வரும் போது கட்சிதமாக கதையை முடிப்பதே புத்திசாதுர்யமானது என்றார். அதற்கு நண்பர் திருப்பிக் கேட்டார். ஏதோ ஒன்று பாம்புக்கு தலையையும் இன்னொன்றுக்கு வாலையும் காட்டுமாமே அதுபோலவா? எனக் கேட்டார். 

நாட்டில் நடப்பவற்றைப் பார்க்கும் போதும் கேள்விப் படும் விதத்திலும் இன்றைய நிலையில் எந்த ஒரு எதிரியையும் ஒரு வேட்பாளர் துறத்த மாட்டார். இன்னும் அனைத்துக் கொள்வார். இக்றையில் உள்ள பொதுச் செயலாளருக்கு அக்கறையும், அக்கறையில் உள்ள பொதுச் செயலாளருக்கு இக்கறையும் பச்சையாகத் தெரிந்த போதும் ஏனைய அங்கத்தவர்கள் பழைய பகைமைகளை மறந்து கட்டித் தழுவி அன்பு பாராட்டியது தெரியும் தானே. எனவே எவரையும் எந்த ஒரு அபேச்சகருக்கும் விரட்டும் சந்தர்ப்பம் இது வல்ல. மாறாக கோடி கோடி கொடுத்தாவது தொடாந்து வைத்துக் கொள்வர்.

அது மட்டுமல்ல நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மாறுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். வெற்றி அடைந்தவர்கூட நான் வெற்றி பெற்றேனா தோல்வி அடைந்தேனா என்ற நிலை தெரியாத வகையில் நிலைமைகள் மாறலாம். இதற்கு முன்பும் அப்படியான கதைகள் கூறக் கேட்டுள்ளோம். சிலர் தற்போது நாம் வெற்றி பெற்று விட்டோம். எம்மை அசைக்க முடியாது என்றெல்லாம் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து மனப்பால் குடித்துக் கொண்டே இருக்கட்டும். தட்டி எழுப்பவேண்டாம் என்றும் அவர் விளக்கம் அளித்தார். இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை.

இன்னொரு நண்பரும் இதே கருத்தை வேறு விதமாகக் கூறினார். 2000ம் ஆண்டு காலப் பகுதியிலும் அதனை அடுத்து வந்த தேர்தல் காலங்களிலும் கண்டி மாவட்ட முஸ்லீம்களுக்கு நல்ல அனுபவங்கள் உண்டு. அதற்காகப் பயந்தாங்கௌளியாக வாழ்வதல்ல. மமதையில் இருப்பவர்களை அப்படியே இருக்கச் சொல்லிவிட்டு வாக்களிப்பு தினத்தில் அமைதியாக எமது பொறுப்பை நிறைவேற்றினால் எது நடக்கும் என விரும்புகிறோமோ அது நடக்கும். அதற்கு முன் விடயத்தை குழப்பி அடிக்கத் தேவையில்லை என்றும் கூறினார். 

அதாவது வெற்றி தோல்வி என்பது 50 சதவீத நிகழ்தகவைக் கொண்டது. தலைமைகள் ஆடசியாளர்களுடன் இருப்பதால் தப்பித் தவறியாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அதேநேரம் தொடர்ந்தும் இதே ஆட்சி நிகழ்தாலும் அதுவம் பாதிப்பை ஏற்படுத்ததாது என்றும் அவர் கூறினார்.

அவசரப்பட்டு கட்சி மாறினால் நிச்சயம் வெற்றி என்ற 100 சதவீத நிகழ்தகவை நோக்கி நகர வேண்டி வரும். அது நடை முறைச் சாத்தியம் அற்றது என்றும் கூறினார்.

எனவே தொகுத்து நோக்கும் போது வாக்காளருக்கு மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத தலைமைகளால் ஓரு அணியில் இருந்து இன்னோர் அணிக்குப் பாய்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பேரின வாதிகளை விழிப்படையச் செய்து சமூகத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதை விட தலைமைகளை ஆங்காங்கே விட்டு விடுவோம். தேர்தல் முடிந்த பிறகு அவர்களை இணைத்துக் கொள்வோம் என்றார். 

எனவே மாற்றம் வேண்டும் என விரும்புவோருக்கும் இது பாதிக்காது. மாற்றம் தேவை இல்லை என்போருக்கும் இம் முறை பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே எமது தலைமைகளே நீங்கள் தொடர்ந்தும் ஒட்டிக் கொண்டிருப்பது வாக்களர்களாகிய எமக்கு நிம்மதி. அணி மாறினால் நிம்மதியாகத் தூங்க முடியாது போகும். ஏனெனில் பேரினவாதம் விழித்துக் கொள்ளும் என ஒருவர் இதனை இரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.

Share it:

Post A Comment:

0 comments: