நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறேன் - றிஷாத் பதியுதீன்

Share it:
ad
ஹூனைஸ் எம்.பியை பாராளுமன்றம் அனுப்பி வைப்பதற்காக எனது சொல்லைக்கேட்டு வாக்களித்த வன்னி மாவட்ட மக்களிடம் நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத்  பதியுதீன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆதரவாளர்களிடம் கருத்துக்களை அறியும் விஷேட பொதுக்கூட்டமொன்று இன்று 2.12.2014 செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநரின் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய ஆணையாளர் கே. விஜிந்தனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்தும் பேசிய அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

தனிநபராக இருந்து கொண்டு இந்த மாவட்டத்திற்கு செய்த அபிவிருத்தியை விடவும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரை கூடவே அழைத்துச் சென்றால் செய்த அபிவிருத்தியை விடவும் மேலும் பல அபிவிருத்திகளைச் செய்த முடியும் என்ற நம்பிக்கையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் என்னுடன் சேர்ந்து ஹூனைஸ் பாருக்கையும் நானே வேட்பாளராக களமிறக்கி எனக்கு மாத்திரம் வாக்களிக்காமல் அவருக்கும், நான் உட்பட மற்றய வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டும் என நான் அன்று கேட்ட போது எதுவிதமான மறுப்புக்களையும் தெரிவிக்காமல் நீங்கள் எங்கள் மூவருக்கும்; வாக்களித்தீர்கள்.

அவ்வாறு நீங்கள் வாக்களித்து எனக்கு அடுத்து தெரிவான ஹீனைஸ் எம்.பி கட்சிக்கும், எனக்கும் சொல்லாமல் இரவோடு இரவாக எதிரணியோடு இணைந்து கொண்டுள்ளார்.

எனவே, நான் சொன்னதைக் கேட்டு வாக்களித்தவர்கள் என்னைக் கண்டு எமது மாவட்டத்திற்கு விமோசனத்தைப் பெற்றுத்தருவார் என்று நம்பி நீங்கள் சொன்னதற்கு இணங்க அந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு நாங்கள் வாக்களித்தோம். ஆனால் அவர் இப்படி பிழையான முடிவை எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று வன்னி மாவட்டத்திலுள்ள மக்கள் பலர் என்னிடம் வந்து ஆதங்கப்பட்டார்கள். எனவேதான் என்னுடைய வேண்டுகோளை ஏற்று அவருக்கு வாக்களித்த மக்களிடம் அவர் செய்த பிழையான முடிவுக்காக மன்னிப்புக் கோருகிறேன்.

இன்று நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் எமது கட்சியின் ஆதரவாளர்களிடையே ஆலோசனைகளைக் கேட்டு எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.

வவுனியா, மன்னார், உள்ளிட்ட இடங்களில் கட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்ட நாம் இன்று முல்லைத்தீவு மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக ஒன்று கூடியிருக்கிறோம்.

யுத்தத்தினால் முற்றாக அழிந்து போன எமது முல்லைத்தீவு மாவட்டத்தை ஏனை மாவட்டங்களைப் போல கல்வி, சுகாதாரம், வீதி, மின்சாரம், தொழில்வாய்;பு உள்ளிட்ட அபிவிருத்தியில் முன்னேற்றத்தை செய்ய வேண்டும் என்பதற்காக அன்று எதிர்க்கட்சிகளுடன் இருந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் என்னுடன் இணைந்து கொண்டார்கள். ஆவர்களின் இணைவானது எமது கட்சிக்கு மேலும் பலத்தை சேர்த்தது. இனவாதம், மதவாதம், பிரதேசவாதங்களுக்கு அப்பால் செயற்படும் எமது கட்சியானது ஒரு ஜனநாயகக் கட்சியாகும். கட்சியிலுள்ளவர்களினதும், கட்சியின் போராளிகளினதும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்று செய்ற்படும் கட்சியாகும்.

போரினால் முற்றாக அழிந்து போன இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்தது மட்டுமன்றி, படித்துவிட்டு தொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறோம். இந்த மாவட்டத்திற்கு என்ன தேவையாக இருந்தாலும் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டால் கொஞ்சம் கூட அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் உடனடியாக ஒதுக்கித் தருகின்றவராக இருக்கிறார். முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மீது அதிக பாசம் கொண்டுள்ள ஜனாதிபதி இந்த மாவட்டத்தை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என எமக்கு வாக்குறுயளித்திருக்கிறார்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதியை ஒதுக்கிய, எமது பிள்ளைகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கிய மஹிந்த ராஜபக்ஷவையா ஆதரிப்பது அல்லது அவருடன் சேர்ந்து கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து எமது கட்சி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

அதற்காகவே இன்று உங்களின் கருத்துக்களை கேட்டு நாம் இங்கு வந்திருக்கிறோம் என்றார். இதன்போது அங்கு வருகை தந்திருந்த தமிழ், முஸ்லிம், சிஙகள் ஆகிய மூவின மக்களும் ஒன்றாக எழுந்துநின்று கட்சியும், கட்சியின் தலைவமான நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்புக்களையும் தருவோம் எனத் தெரிவித்தனர்.
Share it:

Post A Comment:

0 comments: