முஸ்லிம் காங்கிரஸில் புதிதாக இணைந்தவர்கள் கட்சியை பிழையாக வழிநடத்த முயற்சி - ஹரீஸ்

Share it:
ad
-எம்.வை.அமீர்-

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் இந்த அரசின் மீது அதிர்ப்தியுடன் காணப்படுவதாகவும் இவ்வாறான அதிர்ப்திப்பாடானது மக்களை அரசின் மீது நம்பிக்கை இழக்க வைத்துள்ளதாக  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,  கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்முனைக்குடி சாஹிபு வீதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆயுள் வேத வைத்தியசாலை மற்றும் கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் என்பன திறந்து வைக்கும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் நேற்று இடம்பெற்றது.

கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவைகளை திறந்து வைத்தார்.

இதில் கல்முனை மாநரக சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், கல்முனை மாநரக சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், ஏ.எல்.எம்.முஸ்தபா எம்.எஸ்.,உமர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

சுதந்திரத்துக்குப் பின் இந்த நாட்டை எத்தனையோ ஆட்சியாளர்கள் ஆண்ட போதிலும் இங்கு வாழும் முஸ்லிம்கள் தற்போது இருக்கின்ற ஆட்சியில் கீழ் பல்வேறுபட்ட நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனா். இவ்வாறான துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இந்த அரசு பாராமுகமாக இருந்துள்ளது. அரசின் இவ்வாறான போக்கின் காரணமாக என்றுமில்லாதவாறு முஸ்லிம் மக்கள் இந்த அரசின் மீது அதிர்ப்தியுடன் காணப்படுவதாகவும் இவ்வாறான அதிர்ப்திப்பாடானது மக்களை அரசின் மீது நம்பிக்கை இழக்க வைத்துள்ளது.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என  முஸ்லிம் மக்கள் கட்சி முடிவெடுப்பதற்கு முன்பாக ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள். இன்று என்றுமில்லாத அளவு ஒற்றுமைப்பட்டுள்ள மக்களின் அபிலாசைகளுக்கு அந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் தலைசாய்த்தே ஆகவேண்டியுள்ளது.

எத்தனையோ கட்சிகள் மக்களை ஒன்று திரட்ட முற்பட்டபோது ஒன்றுபடாத முஸ்லிம்கள், அவர்களது மத ரீதியான உணர்வுகளோடு இந்த அரசு விளையாடியதால் மக்களின் போக்கில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் முழு முஸ்லிம் சமூகமும் ஒற்றுமைப்பட்டுள்ளது.

கட்சியின் உயர்மட்டக் கூட்டங்களில், மக்களின் உணா்வுகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராக சில முடிவுகளை எடுக்க முஸ்லிம் காங்கிரஸில் புதிதாக இணைந்து கொண்ட ஓரிருவர் கட்சியை பிழையாக வழி நடத்த முனைய முற்பட்டுள்ளனா். அவ்வாறானவர்களுக்கு நானும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தும் இணைந்து பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.




Share it:

Post A Comment:

0 comments: