எடுக்கும் முடிவு சரியா என்பது தெரியாவிட்டாலும், எடுத்த முடிவைச் சரியாக்கும் முஸ்லிம் காங்கிரஸ்

Share it:
ad
(மூத்த ஊடவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யூகங்கள் நிலவிய காலத்திலும் தேர்தல் நடைபெறுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இரு அழைப்புகள் வந்திருந்தன. இவை அரச தரப்பிலிருந்தே கிடைத்தன. முதலாவது அழைப்பை அந்தக் கட்சி நிராகரித்திருந்த நிலையில் இரண்டாவது வேண்டுகோளை அவர்களால் தட்டிக் கழிக்க முடியாது போய் விட்டது.

இரண்டாவது அழைப்பானது ஜனாதிபதியிடமிருந்து நேரடியாக வந்ததன் காரணமாகவே கட்சித் தலைமையினால் அதனை நிராகரிக்க முடியாத நிலைமை தோன்றியிருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் தங்கள், தங்கள் தொகுதிகளிலிருந்த போது கொழும்பில் எஞ்சியிருந்தோருடன் அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியுள்ளார்.

அமைச்சர் ஹக்கீமுடன் கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரீ. ஹஸன் அலியும் சென்றிருந்தார். ஆட்கள் போதாது என்பதற்காக கொழும்பில் தங்கியிருந்த கல்முனை மாநகர சபை மேயரான நிசாம் காரியப்பரையும் இந்தச் சந்திப்பில் இணைத்துக் கொண்டார்.

அதேவேளை, ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்ற தினத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கொழும்பில் தங்கியிருந்த போதும் இதில் அவர் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் மக்கள் கருத்தறியாது இவ்வாறானதொரு சந்திப்பில் கலந்து கொள்ள அவர் விரும்பாமையாக இருக்கலாமென்றும் அல்லது ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றவர்களில் ஒருவருடன் ஹாரீஸ் எம்பிக்கு காணப்படும் முரண்பாடுகளால் அவராக தவிர்ந்து அல்லது பிறரால் தவிர்க்கப்பட்டிருக்கலாமென்றும் கூறப்படுகிறது.

ஆனால், ஜனாபதி உங்களை இன்று சந்திக்க விரும்புகிறார் என்ற தகவல் அமைச்சர் ஹக்கீமுக்கு அறிவிக்கப்பட்ட போது ஹரீஸ் எம்.பி ஹக்கீமுடனேயே காணப்பட்டதாகவும் அதே தினம் அவர் கல்முனை திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பில் அரசாங்க தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, அநுர பிரியதர்ஷன யாப்பா, டலஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்து கொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் தாங்கள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தியே கலந்துரையாடியுள்ளனர். செய்ய வேண்டிய பல விடயங்கள், செய்வதாக அரசு வாக்குறுதியளித்தும் இதுவரை செய்யாத விடயங்கள் என்றெல்லாம் பேசப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, உங்களது பிரச்சினைகள் தொடர்பில் அந்தந்த அமைச்சர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். அதற்கான சந்தர்ப்பத்தை தான் ஏற்படுத்தி தருவேன் என்று கூறியதாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் அழைக்கப்பட்ட அவசரத்துக்கு அங்கு கிடைத்த பதில் தங்கள் தரப்பில் ஏமாற்றமளிப்பதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரான மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினை ஒன்று தொடர்பில் முன்வைத்த கோரிக்கையினை மறுநாள் விடிவதற்கு முன்னரே அன்றைய ஜனாதிபதி நிறைவேற்றிக் கொடுத்தனைக் கண்டு பிரமித்துப் போய் மகிழ்ந்த சமூகத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைமைக்கும் இன்றைய ஜனாதிபதியின் பதில் பாரிய ஏமாற்றமாகவே அமைந்திருக்கும்.

இதேவேளை, மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான அமைச்சர்களையும் முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தும் அது கடைசிக் கட்டத்தில் கைவிடப்பட்டது. கடந்த புதன்கிழமை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களில் அதிகமானோர் தங்களது எதிர்ப்பினை தலைமையிடம் வெளியிட்டதுடன் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் பிடிவாதமாக நின்றதால் ஒன்றும் செய்ய முடியாது சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது. இது அரசுக்கு பாரிய ஏற்றமாகவே அமைந்துள்ளது. ஜனாதிபதியை சந்திப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விருப்பம் கொண்டவராக காணப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸின் பலவீனங்களை தனது பலமாக பயன்படுத்தி வந்த அரசுக்கு மு.காவின் இந்த ஐக்கியப்பட்ட முடிவானது பேரதிர்ச்சியையே கொடுத்திருக்கும். அதேவேளை, எதிர்காலத்தில் தேர்தலுக்கு முன்னராக ஜனாதிபதியுடன் இன்னொரு சந்திப்பு இடம்பெறுமான என்பதில் கூட சந்தேகத்தை ஏற்படுத்தும வகையிலேயே முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் கள நிலைவரங்களில் திடீர் மாற்றங்கள் தோன்றியுள்ளன. சிலவேளைகளில் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் இறுதித் தீர்மானம் அரசுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையிலும் அமையலாமென்ற நிலைமையே இன்று காணப்படுகிறது.

இதற்கு மேலாக கிழக்கு மாகாண சபையில் கடந்த வாரம் முதலமைச்சரால் வரவு -செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் கூட முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள ஓர் எச்சரிக்கையாகவே கொள்ளப்படுகிறது. கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற சம்பவங்கள் முஸ்லிம் காங்கிரஸினால் திட்டமிட்ட ஒன்றாக இல்லாவிட்டாலும் அவ்வாறானதொரு சூழல் உருவானமை, சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாத நிலைமை காணப்பட்டமை போன்ற விடயங்கள் அரசாங்கத்துக்கு ஒரு நல்ல சகுனமாக தெரியவில்லை என்பதனையும் கூறியேயாக வேண்டும்.

இது இவ்வாறிருக்க, தங்களது கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை அரசு நிறைவேற்றாமல் அதற்குப் பதிலீடாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை நியமித்து தங்களை அரசாங்கம் ஏமாற்ற முயற்சிப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தாங்கள் கேட்காத ஒன்றைக் கொடுத்து கேட்டதனை சமப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனம் தொடர்பில் கட்சி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண அரைக்கால முதலமைச்சர் பதவி இப்போது தேவையென்றாலும் நாங்கள் தருகிறோம். நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நிலைமையில் அரசு இருந்தாலும் இதனை அரசாங்கத்தின் இறங்கி வரும் மனநிலை என்ற அர்த்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கருதவில்லை. மாறாக அரசின் நரித் தந்திரம் என வர்ணிக்கின்றனர். இந்தக் கட்சி அரைக்கால முதலமைச்சர் பதவி ஆசையை என்றோ துறந்து விட்டது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கடந்த வாரம் கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வெளிப்படையாக சில விடயங்களைத் தெரிவித்திருந்தார். அதாவது, இன்றைய அரசியல்வாதிகள் தங்களுடைய தகுதிகளை உயர்த்திக் கொள்வதில்தான் அக்கறை காட்டுகின்றார்கள். பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதில்லலை. அரசாங்கம் முஸ்லிம்களின் உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களை விட எங்களது தனிப்பட்ட விடயங்களைத் தீர்த்து வைப்பதற்கே ஆயத்தமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார். அவர் கூறுவதுதான் உண்மையும். கல்முனை கரையோர மாவட்டம் என்ற கோரிக்கைக்குப் பதிலாக இரண்டு பிரதியமைச்சர்கள் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கினால் எல்லாம் சரியாகி விடும் என்ற நிலையிலேயே கடந்த கால அனுபவங்களை அடியொற்றி அரசாங்கம் செயற்பட இன்னும் முயற்சிக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பி. திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோருக்கு பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டபோது முஸ்லிம் காங்கிரஸுக்கும் இரு பிரதியமைச்சு பதவிகளை வழங்கவும் அரசாங்கம் தயாராகவே இருந்தது. இதற்கான காரணம் வழக்கம் போல் முஸ்லிம் காங்கிரஸ் பதவிகளுக்கு ஆலாய் பறக்குமென்ற அரசின் நம்பிக்கையே. ஆனால், இந்த விடயத்தில் அரசாங்கம் ஏமாந்து போய்விட்டது.

எனவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து அரசியல் களநிலைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளளும் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அந்தக் கட்சியின் தீர்மானமானது அரசுக்கு மட்டுமல்ல தென்னிலங்கை அரசியலிலும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவிக்கலாம். அவ்வாறு ஒன்று ஏற்பட்டால் அது முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களதும் முஸ்லிம் மக்களதும் உணர்வுகளை புரிந்து அதற்கு மதிப்பளித்து எடுக்கப்பட்ட தீர்மானமாகவே அமையும்.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்காமல் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவையே ஆதரிப்பதாகவும் அறிவிப்புச் செய்யலாம். ஏனெனில் இந்தக் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் மக்களைக் கடைசி வரை நம்ப வைத்து கழுத்தறுத்த கதையை யாரும் மறந்தும் விடமுடியாது அல்லவா? அவ்வாறு ஒன்று நடந்தாலும் அதற்கான காரணங்களை மேடை போட்டு மக்களுக்கு விளக்கிக் கூற கூடிய நல்ல திறமையான பேச்சாளர்களும் அந்தக் கட்சியில் நிறையவே உள்ளனர். அவர்கள் கூறுவதற்கு கைகளை தட்டி விசிலடித்து ஆமாம் போடுவதற்கும் சமூகத்தில் ஆட்களும் உண்டு அல்லவா?

“ நான் எடுக்கும் முடிவு சரியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், எடுத்த முடிவைச் சரியாக்குவேன்“ என்ற மாவீர்ர் அலெக்ஸாண்டரின் கூற்றை சரியாக கடைப்பிடிக்கும் கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ்.
Share it:

Post A Comment:

0 comments: