''தலை இருக்க, வால் ஆடுவதன் பின்னணி இதுதான்''

Share it:
ad
(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அன்று மஹிந்தவின் காலில் விழச் செய்த சிலர் இன்று முந்திக் கொண்டு அறிக்கை விட்டு தம்மை சமூகத்தில் நல்ல பிள்ளைகளாக காட்ட முற்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

தலை இருக்க வால் ஆடுவதன் பின்னணி இதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தனி நபர்களின் பித்தலாட்டங்களுக்கு இடமளிக்காமல் கட்சி உரிய தருணத்தில் தனது முடிவை அறிவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகா வித்தியாலய ஒ.எல்.தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஏ.எம்.ஜெமீல் இவ்வாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை அதிபர் எம்.எஸ்.எம்.மதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து வருகின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நெருக்கடிகளின் போது அக்கட்சியின் தலைமைத்துவமும் நாமும் மௌனித்து ஒளிந்து கொள்ளவில்லை. 

நாடாளுமன்றத்திலும் கிழக்கு மாகாண சபையிலும் பேரினவாத சக்திகளுக்கு எதிராக மிகவும் தைரியமாக குரல் எழுப்பி வந்தது மாத்திரமல்லாமல் பொதுபல சேனாவின் இன வெறியாட்டத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம்.

குறிப்பாக அரபு நாடுகளுக்கு நாம் நேரடியாக சென்று இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகள் பற்றி எடுத்துக் கூறி அரபு நாடுகளையும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பையும் இப்பிரச்சினையில் தலையிடச் செய்தோம். அதன் பின்னரே பொதுபல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இன்று எமது நாட்டின் அரசியல் தடம் புரண்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு என்ன என்று முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல முழு நாடும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனி நபர்களின் பதவிகளுக்காகவோ வேறு நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவோ அல்லாமல் சமூகத்தின் ஒட்டு மொத்த நலன்களைக் கருத்தில் கொண்டே கட்சி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சித் தலைமைத்துவம்  பரந்துபட்ட அடிப்படையில் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு வருகின்றது. யார் ஜனாதிபதியானாலும் அவர் முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவேற்றித் தர வேண்டும். முஸ்லிமகளின் இருப்பு, பாதகாப்பு என்பவற்றுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும். நாம் எவரிடமும் ஏமாந்து விட முடியாது. அதற்காக இரு தரப்பினருடனும் எமது கட்சி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.

இது விடயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் காட்டிச் சென்ற வழியில் எமது நகர்வுகள் அமைய வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரசை பலவீனமடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது. நாம் தொடர்ந்தும் எமது சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அன்று கட்சியை மகிந்தவின் காலில் விழச் செய்த சிலர் இன்று முந்திக் கொண்டு அறிக்கை விட்டு தம்மை சமூகத்திற்கு நல்ல பிள்ளைகளாக காட்ட முற்பட்டுள்ளனர். அதனால்தான் தலை இருக்க வால் ஆடுகின்றது. ஆனால் சிலரின் தனிப்பட்ட அரசியல் பித்தலாட்டங்களுக்கு கட்சியை பந்தாட இடமளிக்க முடியாது. உரிய  தருணத்தில் சமூகத்திற்கு நன்மையளிக்கக் கூடிய தீர்மானம் ஒன்றை தலைமைத்துவம் அறிவிக்கும். அதுவரை வால்கள் ஆட வேண்டிய அவசியமில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் நினைத்திருந்தால் கடந்த மாதம் கிழக்கின் முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும். இன்றும் கூட அதற்கான கதவை அரசாங்கம் திறந்தே வைத்துள்ளது. ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு பதவிகள் ஒரு பொருட்டல்ல. சமூகத்தின் உரிமைகளே முக்கியமானதாகும்.

கிழக்கின் ஆட்சி முஸ்லிம் காங்கிரசின் கையில் தான் தங்கியுள்ளது. எமது பகிஷ்கரிப்பினால் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சபை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யார் ஜனாதிபதியானாலும் கிழக்கின் ஆட்சியை எம்மிடமிருந்து பிடுங்கி விட முடியாது. 

முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியை எவராலும் அளித்து விட முடியாது. எம்மிடம் பேரம் பேசும் சக்தி இருப்பதனாலேயே கிழக்கு மாகாண சபையில் சில விடயங்களை சாதித்துக் கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகத்தின் எழுச்சி எமது கல்விப் புரட்சியிக்லேயே தங்கியுள்ளது. அதற்காக கிழக்கு மாகாண சபையை அதிக பட்சம் பயன்படுத்தி வருகின்றோம்.

எனது விடாப்பிடியான போராட்டத்தினால் மறைந்த தலைவர் எமது சமூகத்திற்கு தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தை உருவாக்கித் தந்தார். அங்கிருந்து இதுவரை பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறியுள்ளனர். இது பெரும் சாதனையாகும். எமது கட்சியிடம் இருந்த பேரம் பேசும் சக்தியினால் தான் எமது பெரும் தலைவரினால் அதனைச் சாதிக்க முடிந்தது." என்று ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.
Share it:

Post A Comment:

0 comments: