கருணை இருந்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையேல் எல்லோரும் செத்துமடிவோம்

Share it:
ad
(Vira)

கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் கைவிடப்பட்ட நிலையில் கடவுளுக்கு கருணை இருந்தால் சேர்ந்து வாழ்வோம் இல்லையேல் எல்லோரும் செத்துமடிவோம் என்று கூறி மண்சரிவு அபாய எச்சரிக்கை பிரதேசமான தமது லயன் குடியிருப்புக்களுக்கு மீண்டும் சென்று விட்டனர்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாத மேற்படி மக்களில் நேற்று புதன்கிழமை சுமார் 200 பேர் வரையிலானோர் மண்சரிவு இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள 14, 15ஆம் இலக்கங்களைக் கொண்ட லயன் குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளனர்.

பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த மேற்படி மக்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அவர்கள் புதிய வீடுகளுக்கு செல்லும்வரையில் பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் கடந்த பல நாட்களாக மேற்சொல்லப்பட்ட தேவைகள் தட்டிக்கழிக்கப்பட்டு வந்துள்ளன.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் விரக்தியடைந்த நிலையிலேயே இம்மக்கள் மேற்கண்டவாறு முடிவெடுத்து தமது சொந்த லயன் குடியிருப்புகளுக்குத் திரும்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுக்குமாறு விடுத்த கோரிக்கைகள் அதிகாரிகளால் கவனத்திற்கொள்ளப்படவில்லை என்றும் மேற்படி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்படி பாடசாலையில் தங்கியிருந்தவர்களில் முன்னூறு பேரைக் கொண்ட 57 குடும்பங்கள் மாக்கந்தை பெருந்தோட்டத்தில் மூடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் உணவு வழங்கல் சீராக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவர்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படுமென்று சம்பந்தப்பட்டவர்களினால் கூறப்பட்டு  வருகின்றது. எனினும் அதுவும் இடம்பெறவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இம்மக்களுக்கு வழங்கப்படுவதற்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த உலர் உணவுப் பொருட்கள் இரவு வேளைகளில் இரகசியமாக வெளியேற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அடிப்படை வசதிகள் தமக்கு போதுமான வகையில் கிடைக்கவில்லையென்றும் மக்கள் தமது கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறத்திலும் மண்சரிவு அபாயம் ஏற்படுமென்ற அச்சத்தினால் வெளியேறி தஞ்சம் அடைந்திருப்பவர்கள் மஞ்சள் நிறத்திலும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வகையில் பச்சை நிறத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் மாக்கந்தை தேயிலைத் தொழிற்சாலையிலும் மஞ்சள் நிறத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூனாகலை தியகல தோட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்படுமென்ற அச்சத்தில் 200 பேர் தொடர்ந்தும் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலிருக்கின்றனர். இவர்கள் மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். வித்தியாலயத்தின் ஐந்து கட்டிடங்களில் இவர்கள் தங்கியுள்ளனர்.

இவ் வித்தியாலயக் கட்டிடத் தொகுதிகள் தஞ்சம் அடைந்திருப்பவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டி ருப்பதால் கட்டிடங்களுக்கும் தளபாடங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 
மக்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் மாணவர்களின் கற்கை நடவடிக்கைகளுக்காக கட்டிடங்கள் புனரமைக்கப்பட வேண்டிய அவசியமும் உருவாகியுள்ளது. அத்துடன் கடந்த மாதம் பாடசாலைக்கான மின்சார கட்டணமாக 18 ஆயிரம் ரூபாவுக்கான பட்டியல் மின்சார திணைக்களத்தினால் வித்தியாலய அதிபருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இப்பணத்தை செலுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு இல்லையென்றும் சம்பந்தப்பட்ட திணைக்களம் அதிபருக்கு அறிவித்துள்ளது. அதிபரும் செய்வதறியாத நிலையிலுள்ளார். 
Share it:

Post A Comment:

0 comments: