''இதுவே இறுதித் தருணமாகும்'' - குமார் சங்கக்கார உருக்கம்

Share it:
ad

நான் பிறந்த மண்ணில் விளையாடுவது இதுவே இறுதித் தருணமாகும். கண்டி எனது குடும்பத்தின் ஒரு அங்கம். இன்று 13-12-2014 கண்டியில் உள்ள அனைவரும் இங்கு வந்துள்ளனர். எனக்கு ஆதரவு வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் 6 ஆவது போட்டி இன்று கண்டி பல்லேகலயில் இடம்பெற்றது.  இந்த போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியதோடு 4-2 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் உலகின் சிறந்த விக்கெட் காப்பளருமான குமார் சங்கக்கார எதிர்வரும் உலகக் கிண்ணத்துடன் ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ளதால் இலங்கையில் விளையாடும் இறுதி ஒருநாள் போட்டித் தொடராக இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது.

இந்நிலையில் தனது பிறப்பிடமான கண்டியில் விளையாடும் இறுதிப் போட்டியாகவும் இன்றைய போட்டி காணப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்பாக அமைந்திருந்தது.

இதற்கமைய குமார் சங்கக்கார இன்றைய போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஒருநாள் அரங்கில் தனது 20 ஆவது சதத்தை கடந்தார்.

தாய் மண்ணில் இறுதியாக விளையாடிய அவர், 112 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 112 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் நிறைவில் சங்கக்கார கருத்துத் தெரிவிக்கையில்,

கண்டி எனது பிறப்பிடம். எனது குடும்பத்தின் ஒரு அங்கம். நான் பாடசாலைக் கல்வியை தொடர்ந்ததும் இங்குதான். உங்களுடைய ஆதரவுக்கும் அன்புக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேபோன்று எனது வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், மனைவி பிள்ளைகள், கொழும்பில் உள்ள சகோதரிகள் மற்றும் என்னுடைய இரசிகர்களாகிய உங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றை போட்டியை சிறப்பான ஒரு பெறுபேறுடன் முடிக்க முடிந்தது. என்னுடைய அணி வீரர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். 

இந்த கிரிக்கெட் வாழ்வில் அற்புதமான அனுபவம் கிடைத்துள்ளது. இன்று கண்டியில் உள்ள அனைவரும் இங்கு வந்துள்ளனர். உங்களுடைய அன்பிற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.

389 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சாதனை நாயகன் குமார் சங்கக்கார 20 சதங்கள், 91 அரைச் சதங்கள் அடங்கலாக  13,339 ஓட்டங்களை கடந்து பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share it:

Post A Comment:

0 comments: