வசிய மருந்து..!

Share it:
ad
(ஏ.எல். நிப்றாஸ்)

நமது அரசியலில் இது வசியம் செய்யும் காலம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வசிய மருந்து வேலை செய்யும். வசியம் செய்யப்படுபவர்களைப் போல வசியம் செய்பவர்களுக்கும் ஒரு மருந்து இருக்கவே செய்கின்றது. 

சிலருக்கு பட்டமும் பதவியும் வசிய மருந்தாக இருக்கின்றது. வேறு சிலருக்கு பணமும் இதர செல்வங்களும் வசிய மருந்தாக இருக்கின்றன. கொள்கையும் பற்றுதலும் சிலரை தம்பக்கம் வசியம் செய்து விடுகின்றது. உண்மையான சமூக அக்கறையிலும் மக்களின் எதிர்பார்ப்பின்பாலும் சிலர் வசியப்பட்டு கிடக்கின்றார்கள். இன்னும் ஒரு சிலருக்கு பைல்கள் பற்றிய அச்சம் வசிய மருந்தாக தொழிற்படுவது போல எதிர்காலம் பற்றிய பயமும் ஒரு சிலரை வசியம் செய்து விடுகின்றது. ஒரு சிலர் ஒரேயொரு கோப்பி கோப்பையில் வசியப்பட்டு விடுகின்றார்கள். தாம் புறக்கணிப்படுகின்றோம் என்ற உணர்வே பலரை எதிர்த்தரப்பினர் வசியம் செய்ய போதுமானதாக இருக்கின்றது. 

ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு வசிய மருந்துகள் எதுவும் தேவையில்லை. வாய்ச்சொல்லில் வந்து விழுவார்கள். பலருக்கு அதுகூட தேவையில்லை தாமாக வந்து வசியமாகி காலடியில் கிடப்பார்கள். வசியம் செய்ய முடியாதவர்கள் என்று யாருமில்லை. அப்படியானவர்கள் இருந்தால் அவர்களுக்கான வசிய மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை அல்லது அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்பதே நிஜம். அந்த வகையில் நிகழ்காலத்தில் கட்சி தாவுகின்ற மற்றும் அதற்காக காத்திருக்கின்ற ஒவ்வொரு அரசியல்வாதியும் இதில் எந்தெந்த வகுதிக்குள் வசியமாகின்றார்கள் என்பதை  கணித்துக் கொள்ளுங்கள். 

வளைத்துப் போடுதல்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரை ரணில் விக்கிரமசிங்க வளைத்துப் போட்டிருக்கி;ன்றார். பதிலுக்கு – ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரை மஹிந்த ராஜபக்ஷ தம்பக்க இழுத்தெடுத்திருக்கின்றார். இதற்கப்பால் ராஜித சேனாரட்ன, ஹிருணிக்கா பிரேமச்சந்திர, சம்பிக்க ரணவக்க. உதயகம்மன்பில, திகாம்பரம், ராதாகிருண்ணன்.... என கட்சி மாறுவோரின் பட்டியல் தேர்தல் வரை நீண்டு கொண்டே போகின்றது. 

ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்றைய கட்சியில் இணைந்து கொள்கின்ற அரசியல்வாதிகள் எப்போதென்றாலும் ஒருநாள் மீண்டும் பழைய கட்சிக்கே சென்று இணைந்து கொள்ளலாம். இடைப்பட்ட காலத்தில் ஆளுக்காள் எந்தளவுக்கு வசை பாடியிருந்தாலும் கூட, மீண்டும் அந்தக் கட்சியில் சேர்வதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ அல்லது அவரை சேர்க்கின்ற கட்சியோ வெட்கப்படுவது கிடையாது. இவ்வாறு – யார் எத்தனை முறையும் கட்சிகளுக்கிடையில் பல்டி அடிக்கலாம். இந்த கலாசாரம் இருக்கும் வரைக்கும் வசிய மருந்துகளுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். 
எது எவ்வாறிருப்பினும் பண்டமாற்று வியாபாரம் போல செயலாளர்கள் இருவரும் மாற்றிக் கொள்ளப்பட்டமை ஏனைய கட்சித் தாவல்களில் இருந்தும் வேறுபடுகின்றது. சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த தன்னை விட புதிதாக கட்சிக்;குள் நுழைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை தான் எதிரணிப்பக்கம் வந்து இணைந்து கொள்வதற்கான காரணங்களுள் ஒன்றாக இருந்ததாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார். மறுபுறத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தனக்குத் தெரியாமல், பொது எதிரணி என்ற அடிப்படையில் இணைந்து செயலாற்றுபவர்களின் கைகள் மேலோங்கி இருந்தமையே ஆளும் தரப்பில் தான் இணைந்து கொள்ள காரணமாகியது என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். 
அப்படியென்றால் என்ன காரணத்திற்காக மைத்திரிபால பொது எதிரணியின் பக்கம் வந்தாரோ கிட்டத்தட்ட அதே மனப்பதிவுடனேயே திஸ்ஸவும் ஆளும் தரப்பிற்கு சென்றிருக்கின்றார். மைத்திரி கட்சி தாவியது சரி என்று கூறுபவர்கள் திஸ்ஸ காட்டிக் கொடுத்துவிட்டதாக கூறவியலாது. அதேபோல் மைத்திரிபால சிறிசேன ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வருவதால் அங்கிருக்கும் பல உறுப்பினர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் அவருடனேயே எதிரணிக்கு வருவார்கள் என்று ஒரு நம்பிக்கை இருக்குமென்றால், திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வந்துள்ளதால் அங்கிருந்து ஒருசில உறுப்பினர்களையும் குறிப்பிட்டளவான வாக்காளர்களையும் ஆளும் கட்சிப் பக்கம் கொண்டு போவார் என்ற எடுகோளையும் நம்புவதற்கு அடம்பிடிக்கக் கூடாது. 

மைத்திரிபால சிறிசேன பொது எதிரணிப் பக்கம் தாவப் போகின்றார் என்ற ஊகங்கள் வெளியாகிய உடனேயே அவர் அதனை மறுத்துரைத்தார். அவ்வாறே திஸ்ஸ அத்தநாயக்கவும் பல்டி அடிக்கப் போகின்றார் என்றும் அவருக்கு பேரம் பேசப்படுகின்றது என்றும் தகவல்கள் வெளியாகியதை அடுத்து திஸ்ஸ அதனை கடுமையாக மறுத்தார். ஆனால் இரண்டு பேரும் இரண்டு நாட்களுக்குள் கட்சி தாவிவிட்டனர். இன்னும் சொல்லப் போனால்... சந்திரிகா, ரணில் போன்றோர் மைத்திரியை இழுத்தெடுத்து பொது வேட்பாளராக இருத்தி அழகு பாhக்கின்றனர். மறுபுறத்தில் அதே மைத்திரிபால வகித்த சுகாதார அமைச்சர் பதவியை திஸ்ஸவுக்கு சன்மானமாக வழங்கி பதிலடியை கொடுத்திருக்கின்றது அரசாங்கம்.
ஆனால் இதிலிருக்கின்ற ஒரு பிரச்சினை என்னவென்றால் இரண்டு செயலாளர்களும் சரிக்கு சமமானவர்களா? என்பதும் இவர்கள் இருவரதும் கட்சித்தாவல்கள் பரஸ்பரம் சமமான தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதுமேயாகும். கிராமப் புறங்களில் இதனை 'தண்டி' என்று சொல்வார்கள். சுதந்திரக் கட்சியில் நெடுங்காலமாக உறுப்பினராக இருந்து அதிக வாக்குகளுடன் பாரளுமன்றத்திற்கு தெரிவாகி பல அமைச்சுப் பதவிகளை வகித்து அதனூடாக சேவைகளையும் செய்தவரான மைத்திரிபால சிறிசேனவும், - கடந்த சில வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யாகவும் செயலாளராகவும் இருந்து ஊடக மாநாடுகளில் முதன்மை பேச்சாளராக தன்னை அடையாளப்படுத்திய திஸ்ஸ அத்தநாயக்கவும் சரிக்கு சமமான அரசியல் புள்ளிகள் என்று சொல்வதற்கில்லை. 

சிறுபான்மை கட்சிகள் 

இவ்வாறான ஒரு பின்னணியில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு ஆளும் தரப்பும் பொது எதிரணியும் வியூகங்களை வகித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு மறைமுகமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போகின்றது. ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதற்கான முகாந்திரங்கள் கணிசமான தமிழர்களுக்கும் த.தே.கூட்டமைப்பிற்கும் இல்லை என்பதால் பொது வேட்பாளரையே அக்கட்சி ஆதரிக்கும். ஆனால் த.தே.கூட்டமைப்புக்கும் பொது எதிரணிக்கும் இடையில் பகிரங்கமாக உடன்படிக்கை ஒன்று செய்து கொள்ளப்படுமாயின் நாட்டைப் பிரிப்பதற்கு மைத்திரி உடன்படிக்கை செய்திருப்பதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்யும் என்பதால், எழுதப்படாத ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த ஆதரவு மைத்திரிக்கு வழங்கப்படலாம். எவ்வாறிருப்பினும் தமிழர்களில் ஒருபிரிவினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பார்கள் என்பதையும் மறுக்க முடியாது. 

அடுத்த சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் பொதுவாக துண்டங்களாக பிளவுபட்டிருக்கின்ற போதிலும் இவ்வளவு காலமும் ஆளும் கட்சியின் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் கடந்த 3 வருடங்களில் இனவாதம் மற்றும் கடும்போக்கு சக்திகளின் கைகள் மேலோங்கி இருந்தமை முஸ்லிம்களின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்று சொல்ல வேண்டும். முஸ்லிம் காங்கிரஸூம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு இத்தனை காலம் எடுத்திருப்பதற்கும் - மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கின்ற இந்த அதிர்வுகளே காரணம் எனலாம். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்ப்பது போன்ற மாயையை தோற்றுவித்திருந்தது. பின்னர் கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பிற்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டு சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை அக்கட்சியின் உறுப்பினர்கள் மூவர் வெளியிட்டனர். இந்த நகர்வை பார்;த்த மகாஜனங்கள், முஸ்லிம் காங்கிரஸை விட மக்கள் காங்கிரஸிற்கு சுரணை அதிகமிருப்பதாக பேசிக் கொண்டனர். ஆனால் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் அதில் ஒரு சூட்சுமத்தை வைத்திருந்தார். 

அதன்படி முன்னாள் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.அமீரலிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை தருவதாக அரசாங்கம் அறிவித்தது. இதனால் மக்கள் காங்கிரஸ் தனது நிலைப்பாடுகளை மீள் பரிசீலனை செய்தது. இருப்பினும் அரசாங்கத்தை விட்டு வெளியேறி பொது வேட்பாளரை ஆதரிக்கும் எண்ணம் அக்கட்சிக்கு இருந்திருந்தால் எம்.பி. பற்றிய பேச்சுக்களில் ஈடுபாடு காட்டியிருக்கவே மாட்டாது. ஆனால், அப்பதவியை பெற்றுக் கொள்ள சம்மதித்தில் இருந்தே அக்கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது சொல்லாமல் சொல்லப்பட்டு விட்டது. 
இதற்கிடையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமக்கே ஆதரவளிக்க முன்வந்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உடனடியாக தன்னை சுதாகரித்துக் கொண்ட தலைவர் றிசாட், 'சீச்சி அப்படி ஒன்றும் இல்லை. ஆதரவு வழங்குவதாக அறிவிக்கவில்லை. எமது 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே ஆதரவு..' என்று பதில் அறிக்கை விட்டார்.

12ஆம் திகதிக்கு முன்னர் றிசாட் தரப்பு தமது ஆதரவு மகிந்தவுக்கு என்று அறிவித்தால் மட்டுமே அமீரலிக்கு எம்.பி. கிடைக்கும் என்று கடந்தவார கட்டுரையில்  எழுதியிருந்தேன். அதுதான் நடந்திருக்கின்றது. நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு அமீரலி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ய முன்னரே, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், 'மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதியையே ஆதரிக்கும்' என்று நேற்றைய பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். இவ்வாறு மக்கள் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வராதிருந்தால் அமீரலியின் எம்.பி.கனவு சிதைவடைந்திருக்கும். ஒருவேளை அதனால் கட்சிக்குள் உடைவும் ஏற்பட்டிருக்கும். 

முன்னர் பொது பலசேனாவுக்கு எதிராக கட்சித் தலைவர் றிசாட் பொங்கியெழுந்தார். அவரது அமைச்சுக்குள்ளும் இனவாதிகள் புகுந்து விளையாடினர். ஆனால் மைத்திரியை ஆதரித்தால் 1915 போன்ற இனக்கலவரம் ஒன்று வெடிக்கும் என்று சேனா மிரட்டியுள்ள இன்றைய காலப்பகுதியில் அந்த இயக்கம் குடிபுகுந்துள்ள இடத்திலேயே அமைச்சர் றிசாட் தனது கட்சியையும் தஞ்சமடையச் செய்திருப்பது ஆச்சரிமாகத்தான் இருக்கின்றது. 
அது ஒருபுறமிருக்க தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலேயே ஜனாதிபதிக்கு ஆதரவளிப்போம் என்று கூறிய தலைமை, என்னென்ன கோரிக்கைகள் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் தொளிவுபடுத்த வேண்டியுள்ளது. எப்படியோ ம.கா.வுக்காக எதிரணி தயாரித்த வசிய மருந்தை விட, ஆளும்தரப்பு வழங்கிய வசிய மருந்து வேலை செய்யத் தொடங்கிவிட்டது. 

மு.கா.வின் சந்திப்புக்கள்

மறுபுறத்தில் ஒப்பீட்டளவில் பெரிய முஸ்லிம் கட்சியாக திகழ்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று பிற்பகல் வரைக்கும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலுமாக ஆயரத்தெட்டு கூட்டங்களை அக்கட்சி நடாத்தி விட்டது. ஆனால் அறுதியும் உறுதியுமான ஒரு முடிவை அறிவிப்பதில் இழுபறி நிலை காணப்படுகின்றது. 
பொதுவாக மு.கா.வின் உயர்பீடக் கூட்டங்கள் நள்ளிரவு தாண்டி இடம்பெறுகின்றன. கிட்டதட்ட ஒவ்வொரு கூட்டமும் கடுமையான வாக்குவாதங்களுடனேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன. இக் கூட்டங்களில் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகி பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என அதிகமான உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர். மேலும் இரண்டு மூன்றுபேர் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று வாதிடுகின்றனர். 

அபிவிருத்தி என்ற பெயரிலும் வேறு வழிகளிலும் மில்லியன் கணக்கான நிதியை அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொண்டவர்களும் ஆட்பிடித்து கொடுத்தால் சன்மானம் கிடைக்கும் என்று மனக்கணக்கு போடுவோரும் இனி நாம் எம்.பி. ஆவதற்கான வாய்ப்பு இல்லை என்று அறிந்து கொண்டவர்களும் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவை பெற்றுக் கொடுக்க பாடுபடுகின்றனர். அதேவேளை மக்களின் எண்ணம்போல் முடிவெடுக்காவிட்டால் ஊர்ப்பக்கம் தலைகாட்ட முடியாது என்று கருதுகின்றவர்களும் மைத்திரிக்கு அடிக்கின்ற அலையில் அள்ளுண்டவர்களும் சமூக அக்கறையுள்ள ஓரிருவரும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். 

இந்நிலையிலேயே, தலைமைத்துவம் எடுக்கின்ற எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாக உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்திருக்கின்றனர். இது நல்ல முயற்சியே. ஆயினும் கட்சிக்குள் முரண்பாடுகளும் பிளவுபடுவதற்கான சாத்தியங்களும் இருந்தன என்பதையும் இது மறைமுகமாகச் சொல்கின்றது. உண்மையில் கட்சியின் கொள்கையையும் மர்ஹூம் அஷ்ரஃபின் வழிநடாத்தலையும் அச்சொட்டாக பின்பற்றுகின்ற உண்மையான மு.கா. உறுப்பினர்களாக இவர்கள் இருந்திருந்தால் இவ்வாறான வாக்குறுதி (பைஅத்) ஒன்றின் அவசியமே ஏற்பட்டிருக்காது என்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோபம் வரும். 

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றது. அம்பாறை கரையோர மாவட்டம், முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, முஸ்லிம்களின் தேசிய பாதுகாப்பு உள்ளடங்கலான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அதிகமான கோரிக்கைகள் இதற்கு முன்னமே மு.கா.வினால் முன்வைக்கப்பட்டு அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் இன்றுவரை நிறைவேற்றப்படாத அம்சங்களாகும். அவ்வாறான கோரிக்கைகளை தேர்தலுக்கு முன்னமே அரசாங்கம் நிறைவேற்றித்தர வேண்டும் என்பதில் மு.கா. உறுதியாக இருக்கின்றது. இந்நிலையில் இவற்றுள் கனதி குறைந்த சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அரச தரப்பு வாக்குறுதி அளித்திருக்கின்றது. 

இருப்பினும் சிங்கள மக்களுடன் தொடர்புபட்ட சிக்கலான விடயங்களுக்கு இப்போது தீர்வு வழங்க முடியாதென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சிங்கள வாக்குகளில் பாதிப்பு ஏற்படுத்துகின்ற அல்லது வேறு வகையில் குறிப்பிட்டால் கடும்போக்கு சக்திகளுக்கு விருப்பமில்லாத கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சில தினங்களுக்கு முன்னர் மு.கா. முக்கியஸ்தர் ஒருவர் என்னிடம் தெரிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே – தம்புள்ளை பள்ளிவாசல் பாதுகாப்பு, கரையோர மாவட்டம் உள்ளடங்கலாக பல கோரிக்கைகளை 'பிறகு பார்ப்போம், யோசிப்போம், கலந்து பேசி முடிவுக்கு வருவோம்' என்ற அடைமொழிகளுடன் அரசாங்கம் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்திருக்கின்றது. ஆனாலும் வேறு எதைக் கொடுத்தேனும் மு.கா.வை வழிக்கு கொண்டு வரும் பேரம் பேசல்கள் வெளிப்படையாகவும் திரை மறைவிலும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. 

இதே கோரிக்கைகளை பொது எதிரணியிடம் மு.கா. முன்வைக்க முடியாது என்பதே நிதர்சனமாகும். அப்படி முன்வைத்தால் கூட, முஸ்லிம்களின் பாதுகாப்பு உள்ளிட்ட ஒன்றிரண்டு கோரிக்கைகளை தவிர வேறு எதனையும் மைத்திரிபால அணியினர் ஏற்றுக் கொள்ளும் சாத்தியமும் இல்லை. இந்நிலையில் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிப்பது என்றால்.... கோரிக்கைகள், ஒப்பந்தங்களின் அடிப்படையில் அன்றி, தேர்தலுக்குப் பின்னர் சாத்தியமான நலன்களை முன்னிறுத்தியே மு.கா.தனது ஆதரவுக் கரத்தை நீட்ட வேண்டியிருக்கும். 

தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளைப் போலவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மைத்திரிபால சிறிசேனவை கைவிடுமாக இருந்தால் குறிப்பாக கிழக்கில் உள்ள முஸ்லிம்களை தம்பக்கம் கவர்ந்திழுக்க முன்னாள் அமைச்சரும் மு.கா. ஸ்தாபக தவிசாளருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் போன்றவர்களின் உதவியை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொள்ளும் சாத்தியமிருக்கின்றது. இப்படியான நிலை ஏற்பட்டால் மு.கா.வுக்கு அதுவும் ஒரு தலையிடியாக இருக்கும். மறுபுறத்தில் மு.கா. மைத்திரியை ஆதரித்தால் அரச சபையில் அமைச்சர்களான றிசாட், அதாவுல்லா போன்றோரின் ரேட்டிங் ஏறும். 

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டே மு.கா. ஒவ்வொரு கட்சிக் கூட்டத்தையும் நடாத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், கணிதப்பாடத்தில் பெரிய கணக்கு ஒன்றுக்கு தீர்வுகாணும் சமன்பாட்டை விடிய விடிய செய்தும் விடை கிடைக்காததால்... விடியற்காலையில் கணக்கு செய்த தாளை கிழித்துப் போட்டுவிட்டு எழுந்துபோகும் மாணவனைப் போல எந்த முடிவும் இன்றி மு.கா.வின் கூட்டங்கள் நிறைவுபெறுகின்றன. எது எவ்வாறிருப்பினும், ஏதேனும் ஒரு புள்ளியில் அக்கட்சி 'வசியப்பட்டே' ஆக வேண்டும். 

இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வசியப்பட்ட பின்னர்... வாக்காளப் பருமக்களை 'வசியப்படுத்துவதற்கான மருந்துகளோடு' வருவார்கள்.
Share it:

Post A Comment:

0 comments: