இன, மத, குல பேதங்களை தகர்த்தெறியுங்கள், அது மிகவும் கொடூரமானது - மஹிந்த ராஜபக்ஷ

Share it:
ad
நீங்கள் ஒரு போராளியாக வேண்டும் ஆனால் அது நாட்டின் நலனை அடிப்டையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதே முன்னாள் வித்தியோதயவின் உபவேந்தர் சோரத தேரரின் எண்ணமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

மஹாபொல புலமைப் பரிசில் திட்டத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய மறைந்த லலித் அத்துலத் முதலியை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுக் கூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள சாய்க்கா மைதானத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,

 பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப் பெற்று மஹாபொல புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தவர் சட்ட கல்லூரியில்  நான் கற்கும் போது எனக்கு ஆசிரியராக கற்பித்த லலித் அத்துலத் முதலி ஆவார்.  அன்று அவர் இத்திட்டத்தை ஆரம்பித்திருக்காவிட்டால் இன்று இதைப் போன்று ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கபட மாட்டாது.  அவர் மஹாபொல புலமைப் பரிசில் திட்டத்தை ஆரம்பித்தார். நாம் இன்று அதன் தொகையை மட்டுமே அதிகரித்துக் கொடுக்கின்றோம்.

ஆனால் அதனை ஆரம்பித்த பெருமை லலித் அத்துலத் முதலியையே சாரும். எனவே அவரை இன்று நாம் நன்றியுணர்வோடு நினைவு கூருகின்றோம். உங்களது கல்வி நடவடிக்கைகளை நீங்கள் மிக விரைவாக முடிக்க வேண்டும். ஒரு காலத்தில் நீங்கள் பல வருடங்களாக பல்கலைக்கழகங்களுக்குள் முடங்கிக் கிடந்தீர்கள். இதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களது சேவை நாட்டுக்கு கிடைப்பது  தாமதமானது.

கல்வியை முதன்மைபடுத்தி உங்களது சுயாதீனத்தை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு போராளியாக வேண்டும் ஆனால் அது நாட்டின் நலனை அடிப்டையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதே முன்னாள் வித்தியோதயவின் உபவேந்தர் சோரத தேரரின் எண்ணமாகும்.

உங்களுக்கு சிந்திப்பதற்கு உரிமையுண்டு. அதற்கான பலம் உள்ளது. ஆனால் உங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டே இதனை பயன்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஒழித்து உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். நாட்டின் ஸ்திரத் தன்மை பாதுகாக்கப்படும் போது தான் பொருளாதாரம் முன்னேற்றமடையும்.  அது இன்று இடம்பெறுகிறது. அதனை பின்னடைவுக்காக இடமளிக்க முடியாது.

உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். மொழிகள் கற்பது தொடர்பில் பல்வேறு அமைப்புக்கள் இயங்கி வருகின்றது. நாமும் ஒரு காலத்தில் ஒரு மொழியை கற்றால் போதும் வேறு மொழிகள் கற்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தோம். எமது தாய் மொழியை மட்டும் தான் கற்க வேண்டுமென்பது கட்டாயமல்ல. நீங்கள் கட்டாயமாக சர்வதேச மொழியை கற்க வேண்டும்.

எதிர்காலத்தில் உங்களுக்கு போட்டியுள்ளது. அந்தப் போட்டிக்கு மாற்றமடைந்த சமூகத்திற்கு  முகம் கொடுக்க நீங்கள் தயாராக வேண்டும். அதற்கு கட்டாயம் சர்வதேச மொழியை கற்க வேண்டும். அத்தோடு சேர்த்து தகவல் தொழில்நுட்ப அறிவையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் போட்டித் தன்மை மிக்க உலகோடு எமக்கு போட்டியிட முடியாமல் போய்விடும்.

இதனை கைவிட்டு உலகை வெற்றி கொள்ள எம்மால் முடியாது. எந்த சக்திகள் சவால்கள் வந்தாலும் எதிர்காலத்திற்காக நீங்கள் இதனை செய்ய வேண்டும். உங்களிடம் கல்வியையே எதிர்பார்க்கின்றோம்.  உலகோடு, சமூகத்தோடு முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாட்டுக்கு உங்களது பங்களிப்பை வழங்குங்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் கீழ்கண்டவாறு தனது உரையை நிகழ்த்தினார்.

பிழையான பதையில் செல்ல வேண்டாம். இன, மத, குல பேதங்களை தகர்த்தெறியுங்கள். அது மிகவும் கொடூரமானது. நன்றாக கல்வி கற்க வேண்டும். முன்னேற வேண்டும். இதற்கு கல்வி மட்டும்  போதாது. நல்லொழுக்கம் மனித நேயம் இருக்க வேண்டும்.

நல்ல பெயர் எடுக்க வேண்டும். அப்போது தான் உங்கள் பெற்றோர் மகிழ்ச்சியடைவார்கள். நீங்களும் சந்தோசம் அடைவீர்கள். இந் நாட்டின் எதிர்கால ஜீவ நாடிகள் நீங்களே என்றார்.
Share it:

Post A Comment:

0 comments: