''முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்கள்''

Share it:
ad
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

அமெரிக்காவினதும், பிரான்ஸினதும் அரசியலமைபில் இரண்டிலுமுள்ள சாதகமான நிறைவேற்று அதிகாரங்களை உள்ளடக்கி உலகில் எங்குமே இல்லாத சர்வாதிகார ஜனாதிபதியை தோற்றுவிக்கும் அரசியலமைப்பை 1978 இல ஜே ஆர் ஜெயவர்த்தனா அறிமுகம் செய்தார்.

ஆனால் அந்த நாடுகளில் உள்ள செனட், லெஜிஸ்லேசர் மற்றும் ஏனைய பொது சேவைகள், இராணுவ,காவல் துறை, தேர்தல், நீதித்துறை, ஊடகம் என்பவற்றின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துகின்ற உத்தரவாதங்கள் இலங்கை அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, யுத்தம் சமாதானம் என்ற விடயங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுத்துக் கொள்வதற்கான அவசரத் தேவைக்காகவே ஜே ஆர் தான் பதவிக்கு வருமுன்பே இவ்வாறான ஒரு அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தினார்.

யுத்தமாக இருப்பினும்,சமாதானமாக இருப்பினும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஜே ஆர் ஜெயவர்த்தானாவில் மிகவும் கவனமாகவே கையாளப்பட்டது, அன்று இந்திய இலங்கை உடன்படிக்கையை கைச்சாத்திட்டு அரசியலமிப்பின் மீது 13 ஆவது திருத்தத்தை மேற்கொண்டு மத்தியில் உள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்வதற்கு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிமுறை உதவியது, என்றாலும் அரசியல் ரீதியாக ஜே ஆர் நிறைவேற்று அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்த சந்தர்ப்பங்களும் இருந்தன.

பின்னர் ஜனாதிபதி பிரேமதாசா இந்தியப்படைகளை திருப்பி அனுப்பவும், தனி நாட்டு பிரகடனத்துடன்  வடகிழக்கு   மாகாண சபையினை கலைக்கவும், உள்நாட்டு கலவரங்களை அடக்கவும் அதனை பயன்படுத்தினார், தனியாளை மையப்படுத்திய சர்வாதிகார ஆட்சிமுறை ஒன்றை நோக்கி பயணிக்க முற்பட்ட பொழுதே காமினி,லலித் உற்பட பல சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.

சந்திரிக்கா அம்மையார் நோர்வே மேற்படி நிறைவேற்று அதிகாரங்கள் குவிந்த ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்வதாக பிரகடனம் செய்து பதவிக்கு வந்து புதிய அரசியலமைப்பிற்கான உத்தேச வரைவினை அமைச்சர் அஷ்ரஃப் ஊடாக பாராளுமன்றில் சமர்பித்து அது அன்றைய பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியால் கிழித்து வீசப்பட்டு நிராகரிக்கப்பட்டது முதல் அவர் பதவி விலகும் வரை அந்த முறையை மாற்றவில்லை.

என்றாலும் 2000 மற்றும் 2002 காலப்பிரிவில் அரசியல் ரீதியாக நிறைவேற்று அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்த அவர் ரணில் விக்கிரமசின்ஹா பிரதமாராக இருந்து நோர்வே ஊடாக மேற்கொண்ட சமாதான முயற்சிகளுக்கு ஆதரவை வழங்கி மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை விடுதலைப்புலிகளுடன் மேற்கொள்ள நிறைவேற்று அதிகாரத்தை உபயோகித்தார்.

இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றவுடன் சகல சமாதான் முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை ஒழிப்பதென முடிவொன்றை எடுக்கவும் நிறைவேற்று அதிகாரங்களை உச்ச அளவில் பயன் படுத்தினார்.

அவரது காலத்தில் நீதிமன்றத்தினூடாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை, மாறாக திவி நெகும போன்ற சட்ட மூலங்களை அறிமுகப்படுத்தி மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. வடகிழக்கில் இராணுவ மயமாக்கல்,பல்வேறு நோக்கங்களுக்காக காணி சுவீகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப் படுகிறது.

நிறைவேற்று அதிகாரங்களினை மட்டுப்படுத்தி பொதுசேவைகள், காவல்துறை, நீதித் துறை, தேர்தல் கமிஷன் என்பவற்றை சுயாதீனமாக செயற்பட கொண்டுவரப்பட்ட 17 ஆவது சட்டதிருத்தத்தை வலிதற்றதாக்கி 18 ஆவது திருத்தம் ஒன்றை கொண்டுவந்ததோடு தனது சர்வாதிகார பதவிக்காலத்தை நீடித்துக் கொள்ளும் நோக்கில் இரண்டுதடவைக்கு மேலும் ஜனாதிபதித் தேர்தலில் பதவியில் இருப்பவர் போட்டி இடுவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்து கொண்டார்.

இந்தக்க்கலப்பிரிவில் இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பதிவி இழந்துள்ளனர், பிரதான இராணுவத் தளபதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,  பல்வேறு கட்சிகள் சிதைக்கப்பட்டுள்ளன, தேவைக்கேற்ப தேர்தல்கள் காலத்துக்க்குக் காலம் அரச யந்திரம் பாவிக்கப்பட்டு நடாத்தப்பட்டன, பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டு நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது, அரசியலில் மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரத்தில் நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது.

துரதிஷ்ட வசமாக தேசத்திற்கு சசகல வகையிலும் சாபக்கேடாக இருக்கின்ற இறுதிக்கட்ட பாய்ச்சலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பங்களிப்பினைச் செய்து பலிக்கடாவாகியமை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் இடம் பெற்ற பாராதூரமான தவறாகும்.

பாராளுமன்றத்தின் அதிகாரங்கள், மாகாண சபைகளின் அதிகாரங்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மாத்திரமன்றி அமைச்சுக்களின் அதிகாரங்களும் பறிக்கப்பட்டு நாடு குடும்ப ஆட்சியை நோக்கி, பாரிய அளவிலான, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம், நிர்வாக சீர்கேடுகள், அதற்கேற்ப இனமத முரண்பாட்டு அரசியல் என இந்த நாடு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டின் சாபக்கேடாக மாறியுள்ள அரசியலமைப்பின் பலிக்கடாவாக மக்கள் அரசியல் கட்சிகள்,சிறுபான்மையினர் மாத்திரமன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசியல் வாரிசுகளும் கூட அகப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டிற்கு புதியதோர் அரசியலமைப்பு அவசியமாகிறது, தேசத்தின் தலைவராக மட்டுபடுத்தப் பட்ட அதிகாரங்களுடன் ஒரு ஜனாதிபதியும், பலமான பாராளுமன்றில் அரசின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் பிரதமரும் இருக்கின்ற ஒரு அரசியலமைப்பு தேவைப்படுகிறது, சிறுபான்மை சமூகங்களினதும் ,குழுக்களினதும் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்கின்ற மீள் எல்லைகளுடன் கூடிய தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறையொன்றும் , அதிகார பரவலாக்கலை உறுதிப்படுத்துகின்ற பொறிமுறை யொன்றும் , நீதி, பொதுசேவைகள்,தேர்தல்,போலிஸ், ஊடகம் போன்ற துறைகளின் சுயாதீனத்தை  உறுதிப் படுத்துகின்ற நல்லாட்சி விழுமியங்களை, சமய கலாசார தனித்துவங்களை  உத்தரவாதம் செய்கிற அரசியலமைப்பே இந்த நாட்டிற்கு அவசியமாகிறது. 

சிறுபான்மையினராகிய, தமிழர்,முஸ்லிம்கள், தோட்டத் தொழிலாளர்கள், சிறுபான்மை கட்சிகளான இடதுசாரி சக்திகள், என சகலரும் தேசிய அரசியல் பிரவாகத்தில் நல்லாட்சி விழுமியங்கள்,அடிப்படை மனித உரிமைகள், சமய கலாச்சார தனித்துவங்களை உறுதிப்படுத்துகின்ற வரலாற்றுப் பணியில் தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து செயற்படும் தருணம் வந்துள்ளது.

இவ்வாறான ஒரு நெருக்கடியான அரசியலமைப்பு மற்றும் வலுவேறாக்கல் சர்ச்சைகள் நாட்டில் இடம் பெறுகின்ற ஒரு கால கட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளது.

மாற்றங்களை அடுத்தவர்கள் ஏற்படுத்தும் வரை காத்திருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள், மாற்றத்தின் பங்காளர்களாய் இருப்பவர்கள் சாதனையாளர்கள். எந்தக் குதிரை வெல்கின்றது என்பதனைவிட எந்தக் கொள்கை வெல்கின்றது என்பதுவே முக்கியம்.

முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்கள் பாரிய அரசியல் இராஜ தந்திர பின்புலன்களை கொண்டுள்ள தேசிய பிரச்சினையாகும் அவை இந்த நாட்டின் அமைதி சமாதானம் ஒருமைப்பாடு பொருளாதார சுபீட்சம் என சகல அமச்ங்களுடனும் தொடர்புபட்டவை எனவே மிகவும் சாணக்கியமான சமயோசிதமான தேசிய அரசியல் நகர்வுகளை தேசத்தில் உள்ள ஏனைய முற்போக்கு மிதவாத சக்திகளுடன் இணைந்தே நாம் தென்னிலங்கையில் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த முஸ்லிம் சமூகம், இந்த நாட்டின் சுயாதிபத்தியத்தையும் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் காத்த முஸ்லிம் சமூகம் அன்று போல் இன்றும் என்றும் இந்த நாட்டின் மீது தமக்குள்ள உரிமையையும் பற்றையும் தொடர்ந்தும் பறை சாற்றுவார்கள்..!

முஸ்லிம்களையும் ஏனைய  சிறுபான்மை சமூகங்களையும் சரி சமமாக அரவணைத்துச் செல்ல விரும்புகின்ற சகல தேச  சக்திகளுடனும் நாம் கை கோர்ப்போம்,  சமாதான சக வாழ்விற்கு  சவால் விடுக்கும் தீய சக்திகளை உண்மையான  தேசப்பற்றுள்ள  சக்திகளுடன் இணைந்து முறியடிப்போம் ..!

இந்த நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் அபிவிருத்தியிற்கும் முஸ்லிம்கள் செய்த வரலாற்றுப் பங்களிப்புக்கள் மகத்தானவை, கொடுத்துள்ள விலையும் மதிக்க முடியாதவை, சர்வதேச பிராந்திய சக்திகளின் தேவைக்காக உழைக்கும் கூலிப்படைகளை, அரசியல் இராஜ தந்திர சதுரங்கத்தில் முஸ்லிம்களை பகடைக் காய்களாக பாவிக்க விரும்புகின்ற சக்திகளை முறியடிப்பதில் நாம் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.

இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கின்ற முஸ்லிம்கள் காட்டு தர்பார் நடத்த விரும்புகின்ற எந்த சக்தியிற்கும் அஞ்சி வாழப் போவதில்லை, ஜனநாயக மரபுகளை மதிக்கும் முஸ்லிம் சமூகம் எந்த வொரு நெருக்கடியான  கால கட்டத்திலும் வன்முறையை நாடியதுமில்லை, இனியும் அதற்கான தேவை  எமக்கு இல்லை, இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற சக்திகளுடனும்  கைகோர்த்து குறுக்கு வழியில் கோலோச்ச விரும்புகின்ற சக்திகளை தோற்கடிப்போம் இன்ஷா அல்லாஹ்.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.

தேசமும் சமூகமும் விரும்பும் புரட்சிகரமான மாற்றங்களின் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக நாமும் இருக்க வேண்டும்.
Share it:

Post A Comment:

0 comments: