எரிகிற வீட்டில் இலாபம் பிடுங்க, முஸ்லிம் கட்சிகள் காத்திருக்கின்றன - அப்துர் ரஹ்மான்

Share it:
ad
"நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்திற்கான தேசிய பங்களிப்பினை முஸ்லிம் சமூகமும் செய்ய வேண்டும்"- பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

(கொழும்பில் பொது வேட்பாளர் மைத்திரி அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் நடாத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தின்போது அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்)

இன்று இந்த நாட்டில் ஆட்சி முறை மாற்றம் ஒன்றை ஏற்படுத்து வதற்கான தேசிய வேலைத் திட்டத்தில் இன மதமொழி பேதமின்றி சகலரும் கைகோர்த்துள்ளனர். அந்த வகையிலேயே முஸ்லிம் சமூகம் சார்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொது எதிரணியுடன் உடன்படிக்கையின் அடிப்படையில் கைகோர்த்துள்ளது.

ஆனால் இந்தத் தருணத்தில் 
ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இந்த நாட்டில் நல்லாட்சி ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக தமது பதவிகளையும் துறந்து அரசாங்கத்தை விட்டும் வெளியேறியிருக்கின்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளோ பதவிகளைப் பெற்றுக் கொள்வது என்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம் கிழக்கு மாகாணசபையில் தாம் தனித்து இயங்கப் போவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் அறிவித்தார்கள். நாம் இந்த செய்தியைக் கேட்டு புல்லரித்துப்போனோம். திருந்திவிட்டார்களோ என்று சந்தோசப்பட்டோம். ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி மூன்று நாட்கள் கூட நீடிக்கவில்லை. அவர்களில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு பிரதியமைச்சர் பதவியும் கிடைக்கவுள்ளதாக அறிந்தோம். இதனை மக்களை வைத்தே சொல்ல வைக்கின்ற நாடகத்தையும் அவர்கள் அரங்கேற்றினார்கள்.

மூன்று அல்லது நான்கு மாதங்கள் நீடிக்கப் போகின்ற பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்கின்ற அற்பத்தனமான சிந்தனையிலேயே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமூக அரசியலில் தெளிவோ வெளிப்படைத் தன்மையா கிடையாது. முஸ்லிம் அரசியலில் என்ன நடக்கிறது என்று மக்களுக்கு எதுவும் தெரியாது. தலைவர் என்ன முடிவெடுப்பார் என்று கட்சியில் உள்ளவர்களுக்கே தெரியாது. முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் ஒப்பந்தங்கள் செய்ததாக சொல்லி வந்தது. ஆனால் எந்த ஒப்பந்தங்களையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியல் வேலைத்திட்டம் மிகவும் வெளிப்படையானது. அனைத்தும் எழுத்து மூலமான பகிரங்க உடன்படிக்கைகளை அடிப்படையாகக்கொண்டவை.

வட மாகாண சபைத் தேர்தலின் போது நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை செய்தோம். ஊவா தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்படிக்கை செய்தோம். தற்போது பொது எதிரணியுடனும் உடன்படிக்கை செய்துள்ளோம்.

முஸ்லிம் தனித்துவ அரசியல் இன்று முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துகின்ற அரசியலாகவே மாற்றம் கண்டிருக்கிறது. முஸ்லிம்கள் சந்தர்ப்பவாதிகள், காட்டிக் கொடுப்பவர்கள், காலை வாருகிறவர்கள் என்ற பெயரையே அதுசம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. எனவேதான் இந்த ஆட்சி முறை மாற்றத்திற்கான தேசிய வேலைத்திட்டத்தில் முஸ்லிம் சமூகம் தனது பங்களிப்பினை செய்ய வேண்டும். அந்தவகையில்தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொது எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இந்த அதி முக்கியமான அரசியல் வேலைத்திட்டத்தில் இணைந்திருக்கின்றது.

Share it:

Post A Comment:

0 comments: