8 ஆம் திகதி வரை என்னை உயிரோடு வைக்க, பிரார்த்தனை செய்யுங்கள் - றிசாத் பதியுதீன்

Share it:
ad
தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறேன் என்பதை அரசாங்கத் தரப்பு அறிந்ததும், தமக்கு நேரடி அச்சுறுத்தல் விடுத்ததாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தனது கவலைகளை பகிர்ந்துகொண்ட றிசாத் பதியுதீன், தான் எதிர்வரும் 8  ஆம் திகதிவரை உயிரோடு இருக்க பிரார்த்திக்குமாறு தெரிவித்தார்.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்திலிருந்து, முஸ்லிம் சமூகத்திற்காக வெளியே வந்தேன். இதையிட்டு மகிழ்வடைகிறேன். இருந்தபோதும் இதற்காக நான் அதிக விலைகளை செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும்  உணர்கிறேன்.

எனக்கு எதிரான அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடிக்க அல்லாஹ் போதுமானவன். அன்றும் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டேன். இன்றும் அரசாங்கத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறேன். ஜனாதிபதி, என்மீது எத்தனை குரோதம் கொண்டுள்ளார்  என்பதை  அவரின் இன்றைய பகிரங்க உரையின் மூலம் உணரமுடிகிறது. 

எனினும் நான் முஸ்லிம் சமூகத்திற்காக மேற்கொண்ட இந்த தீர்மானம், முஸ்லிம்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறைவனின் துணையுடன், முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப:புடன் அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் ஆற்றலை தரவேண்டுமென அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்கான எனது செயற்பாடுகளும் தொடரும். நிச்சயம் இந்த அரசாங்கம் தோல்வியடையும். முஸ்லிம்களின் ஆதரவுடன் மைத்திரிபால ஜனாதிபதியாவார். அந்த 8 ஆம் திகதி வரும்வரை இந்த அரசாங்கம் என்னை உயிரோடு வைத்திருக்குமா என்பது எனக்குத் தெரியாது. அதுவரை நான் உயிரோடு இருக்க வேண்டுமென்பதற்காக பிரார்த்தனை செய்யுங்கள் எனவும் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் வேண்டிக்கொண்டார்.

Share it:

Post A Comment:

0 comments: