'பெரும்பான்மையின் பெரும்பான்மையும், சிறுபான்மையின் பெரும்பான்மையும் 2015 ஜனாதிபதியை தீர்மானிக்கும்'

Share it:
ad
(நஜீப் பின் கபூர்)

சிறு குழந்தைகள் 
நொடிகளைச் சொல்லி 
அதற்கு விடை கேட்பது போல் 
இருக்கின்றதா தலைப்பு. 
இது என்ன கதை என்று கேட்கின்றீர்களா? 
பெரிதாக மண்டையைப் போட்டு 
உடைத்துக் கொள்ள வேண்டாம். 
கதை இதுதான். 

இந்த நாட்டில் பெரும்பான்மையினர் சிங்கள சமூகத்தினர். தமிழர்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டில் சிறுபான்மையினர். தமிழர்களில் இந்திய வம்சவழி என்ற ஒரு பிரிவினர் இருப்பதும் அனைவரும் தெரிந்த விவகாரம்.

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையினரின் தரப்பிலிருந்து இருபெரும் வேட்பாளர்கள் களத்தில். அனைவரும் அறிந்த வைத்திருக்கின்ற படி மஹிந்த - மைத்திரி அந்த இருவரும். எனவே இருவரில் ஒருவர்தான் இதில் வெற்றிபெறுவார்கள் என்பது தெளிவான விடயம்.

ராஜபக்ஷவின் சிந்தனையைத் தொடர்வதா அல்லது சிரிசேனாவின் மைத்திரி தேசத்தை தேடுவதா என்பதுதான் இந்தத் தேர்தலில் வாக்காளருக்குள்ள ஒரே அலுவல்.  

திருப்பதி மீது நமது ஜனாதிபதிக்கு நிறையவே நம்பிக்கை. ஒரு மனிதனின் நம்பிக்கை, கடவுள் பக்தி போன்ற விடயங்களில் எவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை கிடையாது. எனவே நாமும் இந்த விடயத்தில் கேள்வி எழுப்ப விரும்ப வில்லை.

திருப்பதி போய் ஜனாதிபதி தமது கிரியைகளை முடித்துக் கொண்டிருந்த நேரம் பொது வேட்பாளர் மைத்திரி  தளதா மளிகை போய் தனது சமயக் கடமைகளை நடாத்திவிட்டு, கண்டி பொதுச் சந்தை முற்றலில் தனது உத்தியோக பூர்வமான தேர்தல் பரப்புறைகளை ஆரம்பித்தார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் எதிரயினர் ஒரு வெற்றிகரமான கூட்டத்தை கண்டியில் நடாத்தி முடித்திருக்கின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. 

எதிரணியினர் வெற்றிகரமாக தனது கூட்டத்தை நடத்திக் கொண்டு சென்றாலும் அவர்களின் தேர்தல் பரப்புரைகள் மற்றும் ஏற்பாடுகளில் நிறையவே பலயீனங்கள் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. பொது வேட்பாளர் என்று மைத்திரி அடையாளப் படுத்தப்பட்டாலும். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் மேடையாக மட்டுமே இதனை சிலர் மாற்ற முயற்சிக்கின்றார்கள். 

இந்தத் நேரத்தில் அது எவ்வளவு தூரம் புத்திகூர்மையானது என்று எமக்குப் புரியவில்லை. இதற்கிடையில் மாத்தறையில் நடந்த கூட்டத்தில் சஜித், மற்றும் புத்திக்க பத்திரனவுக்கு கதவடைப்பு. எனவே ஐக்கிய தேசிய கட்சியில் இன்னும் பணிப்போர் தொடர்கின்றது. எனவே எதிர் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டுக்கு எப்படித் தலைமைத்துவம் கொடுக்கப் போகின்றது என்ற விடயத்தில் நாம் தொடர்ந்து கூறுவது போல் நெருக்கடி நிலை இருந்து வருகின்றது.

திஸ்ஸ அத்தநாயக்க விடயத்தில் நாம் கடந்த காலங்களில் குறிப்பிட்ட கருத்துக்கள் அப்படியே நிறைவடைந்திருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் உள்ள பிரதமர் வேண்டும் என்ற பிரச்சனையை உண்டு பண்ண அவர் ஆளும்தரப்புக்காகப் போட்ட திட்டம் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

திஸ்ஸ வெளியேறி ஒரு சில மணிநேரத்துக்குள் கபீரை மின்னல் வேகத்தில் அந்த இடத்தில் ரணில் கொண்டு போய் நிறுத்திய விடயத்தில் நிறையவே குழப்பங்கள். இந்த நியமனம் கூட அந்தக் கட்சிக்குள் நடக்கின்ற பணிப்பேரின் ஒரு பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. நியமனம் பற்றி எவருக்கும் தெரியாது. கட்சியில் அந்தளவு ஜனாநாயகம்!

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி சந்திரிகா பிரிவு, பென்சேக்காவின் ஜனநாயக் கட்சி, அதுருலியவின் ஹெல உறுமய, மனோ கணசேன் தரப்பு போன்ற பலமான கூட்டுக்களுடன் திகாம்பரம், இராதாகிருஸ்னண் போன்றவர்கள் இணைந்து கொண்டிருப்பது பொது வேட்பாளருக்கு நம்பிக்கை தரும் செய்திகளாக இருந்தாலும். வலுவான ராஜபக்ஷாவின் தேர்தல் வியூகங்களைத் தடுப்பதற்கு இந்த அணியின் தேர்தல் பரப்புரைத் திட்டங்கள் எந்தவகையிலும் திருப்திகரமானதாக இன்னும் சக்திபெற வில்லை என்றுதான் கூற வேண்டும். 

என்னதான் மக்கள் மைத்திரி உள்ளத்தில் குடியிருக்கின்றார் போஸ்டர்கள் பெனர்கள் தேவையில்லை  என்று சொன்னாலும் மைத்திரியும் மக்கள் விளிகளுக்குத் தெரியும்படி வீதிகளில் ஓரளவுக்கேனும் இருக்க வேண்டும். எனவே பார்க்கின்ற இடமெல்லாம் மஹிந்தாவும் உள்ளத்தில் மைத்திரியும் என்று போனால் ஜனவரி 8ம் திகதி மக்கள் போடுகின்ற புள்ளடியில் உள்ளத்திற்கு முதல் இடமா? கண்ணில் பட்டதற்கு முதலிடமா என்ற விடயத்தில் சம நிலை எப்படி அமையப் போகின்றது என்பதனைப் பொறுத்துத்தான் புள்ளடிகளும் விழ இடமிருக்கின்றது. 

எனவே எமது பார்வையின்படி மைத்திரி தேர்தல் பரப்புரைகள் இன்னும் ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வரப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். மேலும் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிறையவே கோட்டை விட்டிருந்தது. அந்த பலயீனங்கள் இந்தத் தேர்தலிலும் நடக்க இடமிருக்கின்றது. கட்சித் தலைவர்கள் ஒரு மேடையில் நின்றிருந்தாலும் அடி மட்டத்தில் அந்தக் கட்சித் தொண்டர்கள் மந்தியில் இன்னும் பிணைப்போ புரிந்துணர்வோ ஏற்பட வில்லை.  

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகப் பிரமாண்டமான தேர்தல் கூட்டமொன்றை அனுராதபுரத்தில் நடாத்தி இருக்கின்றார் இது அனுராதபுர வரலாற்றில் நடந்த மிகப் பெரிய அரசியல் கூட்டமாகப் பேசப்படுகின்றது. என்றாலும் அதற்கு ஆட்களைச் சேர்த்த ஒழுங்கில் எதிர்க் கட்சிகள் தனது கடுமையான விமர்சனங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றது. 

பெரும் எண்ணிக்கையான பஸ் வண்டிகளில் ஆட்கள் கொண்டு போய்ச் சேர்த்த விடயம் தொடர்பாக போக்கு வரத்த அமைச்சர் வெல்கம எவர் வேண்டுமானாலும் பஸ் வண்டிகளை வாடைகைக்கு அமர்த்த முடியும். அதன்படிதான் இந்த வாகனங்கள் பணம் கொடுத்துப் பெறப்பட்டது என்று பதில் கொடுத்திருக்கின்றார்.

எது எப்படிப் போனாலும் நாம் துவக்கத்தில் சொல்லி இருப்பது போல் இந்த முறை ஜனாதிபதித் தீர்மானிப்பது பெரும்பான்மையின் பெரும்பான்மை வாக்குகளும் சிறுபான்மையின் பொரும்பான்மை வாக்குகளுமாகவே இருக்க முடியும் இந்த நாட்டில் 74 சத வீத சிங்களவர்களின் வாக்குகளில் பொரும்பான்மை வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், 26சத வீத சிறுபான்மைச் சமூகத்தின்  பெரும்பாமை வாக்குகளை பொது வேட்பாளர் மைத்திரியும் பெற்றுக் கொள்வார் என்பது கட்டுரையாளனின் கருத்து. எனவே பெரும்பாமையின் அகப்பைக்கும் சிறுபான்மையின் அகப்பைக்குமிடையேதான் மஹிந்தாவா, மைத்திரியா அடுத்த ஜனாதிபதி என்ற முடிவு இருக்கின்றது.

தேர்தலில் ஆணையாளரும் பொலிஸ் அதிபரும்
பெரும் நெருக்கடிக்கு நிலைக்கு ஆளாகுவார்கள்

2015 ஜனாதிபதித் தேர்தலில் பெரும் சத்தியாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஞானசாரர்  இப்போதைக்கு அரங்கிலிருந்து காணாமல் போயிருக்கின்றார். அல்லது சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும். அதே போன்ற ஒட்டு மொத்த முஸ்லிம் வாக்காளர்களும் யார்யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானங்களை எடுத்து முடித்திருக்கின்ற நிலையில் இந்த கட்டுரை தயாரிக்கபடுகின்ற நேரத்திலும் மு.கா.யாரை ஆதரிப்பது என்ற விடயத்தில் திக்கு முக்காடிப்போய் இருக்கின்றது. தீர்மானம் என்னவாக இருந்தாலும் பிளவு நிச்சயம் என்ற நிலை. அந்த நெருக்கடிகள் அப்படி இருக்க!

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் 2015 ஜனாதிபதித் தேர்தலில், தேர்தல் ஆணையாளரும் பொலிஸ் அதிபரும் பெரும் நெருக்கடிக்கு நிலைக்கு ஆளாகுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். அந்தளவுக்கு தேர்தல் விதி முறைகளுக்குத் தற்போது பங்கம் ஏற்பட்டு வருகின்றது. எனவே தேர்தல் ஆணையாளர் தான் போகின்ற பாதைகளில் இருக்கின்ற பதாதைகளையாவது முதலில் நீக்கித் தருமாறு பொலிஸ் திணைக்களத்தைக் கோரி இருந்தார் என்று அறியபப்டுகின்றது. 

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிகமான கட்;;;;டவுட்களையும் பதாதைகளும் தற்போது நாட்டில் காணப்படுகின்றது. இதனை நீக்குவது - அகற்றுவது என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த பணிகளாக இருக்கும் என்று நாம் கருதுகின்றோம். மேலும் எதிரணிக் கூட்டங்களில் கலந்து கொள்வோரும் அந்த அணியின் ஏற்பாடுகளைச் செய்கின்றவர்கள் பே;கின்ற இடங்கள் கூட்டம் நடாத்தப்பட்ட மண்டபங்கள் என்பன அடித்து நொருக்கப்பட்டு வருகின்றன.

தாவுவதில் குரங்குக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் நமது அரசியல்வாதிகள்!

மதங்களையே மனிதன் மாற்றிக் கொள்கின்ற உலகில் கட்சிகள் என்றால் என்ன கொள்கைகள் என்றால் என்ன மனிதன் அவற்றை கை கழுவி விடுவது என்ன பெரிய விவகாரமா? பணம் என்றால் பிணமும்... என்று சும்மாவா சொல்லி இருப்பார்கள் நமது மூத்தவர்கள். ஐக்கிய தேசியக் கடச்சியில் இருந்து எஸ்.டப்லியு,ஆர்.டி.பண்டாரநாயக்க புதுக் கட்சி சமைத்து ஆட்சியைக் கைப்பறினார். அரசியல் புனிதமாக நடந்த அந்தக் காலத்தில் அப்படி என்றால் இந்தக் காலத்தைக் கேட்டுத்தான் பார்க்க வேண்டுமா?

இலங்கை வரலாற்றில் குரங்குக்கே தாவ நாம் பாடம் கற்றுக் கொடுத்துக் காட்டுகின்றோம் என்ற விதத்தில் நமது அரசியல் வாதிகள் கட்சி விட்டு கட்சி தாவிக் கொண்டிருக்கின்றார்கள். தாவி சில மணித்தியாலங்களில் அல்லது ஒரு சில நாட்கள்தானும் அங்கும் இருப்புக் கொள்ளாது அடுத்த பல்டியை அடித்துக் கொண்டிருப்தையும் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம் இதில் வேடிக்கை என்வென்றால் முன்னைய பாய்ச்சலுக்கும் பிண்ணய பாய்ச்சலுக்கும் அவர்கள் சொலுகின்ற நியாயங்கள் தான் விநோதமாக இருந்து வருகின்றது.

இந்தப் பாய்ச்சல் தொடர்பாக எண்ணிக்கை ஆளும் தரப்பிலிருந்து 50 அல்லது 60 என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த போதும் ஒரு போதும் இது 15 அல்லது இருபதைத் தாண்ட மாட்டாது என்று நாம் முன்பே சொல்லி இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஜனாதிதி வேட்பாளர் என்று ஊடகங்கள் கூறுவதாயின் அவர்களிடத்தில்தான் அது பற்றிக் கேட்டுப் பார்க்க  வேண்டும் என்று பொது வேட்பாளர் மைத்திரியும் ஒரு நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். 

அதே போன்ற நானும் கட்சி தாவ இருப்பதாக ஊடகங்கள் என்னை அவமானப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சில நாட்கள் காணமல் போயிருந்து பின்னர் அப்படி ஒன்றுமில்லை என்று கூறி விட்டு இரு நாட்களில் ஆளும் தரப்பிற்கு தாவிக் கொண்டு இன்று அமைச்சராகி இருக்கின்றார்.

இதில் ஹெல உறுமய உதய கம்மன்பில பாய்ச்சல் சற்று வித்தியாசமானது பாய்ந்தவர் திரும்ப இருந்த பக்கமே பாய்ந்திருக்கின்றார்-மறு பல்டி போட்டிருக்கின்றார். ஆனால் கட்டாயம் தாவித்தான் ஆளும் தரப்புக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற கதையை அவர்தான் அந்தக் கட்சியில் உறத்துப் பேசியதாக தற்போது அந்தக் கட்சியின் தலைவர் ஓமல்பே சோஷித்த தேரர் இவரது பாய்ச்சல் தொடர்பாக கருத்துக் கூறி இருக்கின்றார்.
Share it:

Post A Comment:

0 comments: