(நவாஸ் சௌபி)
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை தங்கள் கட்சி தேர்ந்தெடுப்பது என்பதில் முஸ்லிம் அரசியலில் உள்ள தலைமைகளான ரவூப் ஹக்கீம், அதாஉல்லா, றிசாத் பதியுத்தீன் ஆகியோர்களின் நிலைப்பாடுகள் குறித்தும் முடிவினை எடுப்பதில் அவர்களின் பின்னால் தென்பாடும் காரணங்கள் குறித்தும் என்ன நியாயங்கள் இருக்கின்றன என்பதை இன்று முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது.
ஏனெனில் இத்தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு எதிராக அவரது ஆட்சி மாற வேண்டும் என்பதற்காக வாக்களிக்கும் மனநிலையுடன் இந்த அரசுடன் வெறுப்புற்று இருப்பது தெரிகிறது. எனவே வழக்கமாக தலைமைகளும் கட்சிகளும் எடுக்கின்ற முடிவினை எதிர்பார்க்கின்ற மக்கள் இத்தேர்தலில் தலைமைகளுக்கும் கட்சிகளுக்கும் இடமில்லாமல் செய்துவிட்டார்கள் என்றே வெளிப்படையாக கூற முடிகிறது.
மக்களை வைத்து அரசியல் செய்யும் தலைமைகளுக்கு இத்தேர்தல் தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதில் அதாஉல்லா தனது ஆதரவை எந்த தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் மஹிந்தவுக்கு அளிக்க வேண்டும் என்று தனது கையை ஊருக்கு முன்னே உயர்த்திவிட்டார். முஸ்லிம் சமூகம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமல்ல அவரது பரம்பரைக்கே தொடர்ச்சியாக வாக்களிக்க கடமைப் பட்டிருக்கின்றோம் என்பது அவர் கூறும் நன்றிகடனாக இருக்கின்றது.
இலங்கையில் நிலைகொண்டிருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து கிழக்கையும் பிரித்து தந்தவர் என்றவகையில் காலாதிகாலத்திற்கும் நாங்கள் மஹிந்தவுக்கு வாக்ளிக்க வேண்டும் என்பது அதாஉல்லாவின் நியாயமாக இருக்கிறது.
இங்கு விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டதும் கிழக்குப் பிரிக்கப்பட்டதும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு விடிவினை ஏற்படுத்த வேண்டும் என்று நடந்த ஒன்றல்ல அது இந்த நாட்டின் பெரும்பான்மை ஆட்சிக்காக செய்யப்பட்ட ஒரு சுத்திகரிப்பு இதில் முஸ்லிம்களுக்கு கிடைத்த நன்மை என்பது அதன் பக்கவிளைவுதான். அவ்வாறில்லாது இதனால் முஸ்லிம்களுக்கு விடிவு கிடைத்திருக்கிறது என்றால் மறுபுறம் மஹிந்தவின் ஆட்சியில் ஏற்பட்ட பௌத்த தீவிரவாதச் செயற்பாடுகள் அனுராதபுரப் பள்ளியில் ஆரம்பித்து அளுத்கமவரை எரிந்ததே இந்த அழிவுகளையும் கடந்தா நாம் மஹிந்தவுக்கு நன்றி பாராட்ட கடமைப்பட வேண்டும் என்று அதாஉல்லாவிடம் வெட்கத்துடன் கேட்க வேண்டியிருக்கின்றது.
அதாஉல்லாவுக்கு என்ன கவலை, அம்பாரை மாவட்டத்தில் தான் பாராளுமன்றம் செல்ல 35000 வாக்குகள், கிழக்கு மாகாணசபைக்கு 3 உறுப்பினர்கள், அக்கரைப்பற்று மாநகர சபையில் தன் மகன் மேயர் இதுபோக அவருக்கு என்ன கவலை இருக்கிறது.
அளுத்கம எரிந்தால் என்ன? கரையோரம் நமக்கு எதற்கு? வட்டமடுக் காணிகள் வந்தால் என்ன போனால் என்ன? என்று தானும் தனது அமைச்சுப் பதவியும் என்று அரசியலில் இருப்பவர் அதாஉல்லா இதில் அவரிடம் சமூக அரசியல் அடையாளம் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது எனவே அவருடைய நன்றிவிசுவாசம் அவரோடு இருக்கட்டும்.
இதைத்தான் அக்கரைப்பற்று மக்களும் அவருக்கு இத்தேர்தலில் உணர்த்துவார்கள் என்கின்ற கதைகளும் காதுக்கு எட்டியிருக்கிறது. அதாவது இது அதாஉல்லாவின் நேரடித் தேர்தல் அல்ல அவருக்கு வாக்களிக்கின்ற போது அதனை நாங்கள் செய்யலாம் மாறாக இது நாங்கள் வாக்களிக்கும் தேர்தலாகவே பார்க்கின்றோம் இத்தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக எங்கள் வாக்குகளை நாங்கள் அளிக்கவுள்ளோம் என்ற மனநிலையில் அம்மக்கள் இருப்பதாக அங்கு பேசப்பட்டிருக்கிறது.
அடுத்துபடியாக றிசாத் பதியுத்தீன் அவர்கள் மத்திய அரசில் ஒரு நிலை மாகாண அரசியல் ஒரு நிலை என்று இரட்டை வேடம் போட்டுக்கொண்டு இன்னும் யாரை ஆதரிப்பது என்ற முடிவில்லாமல் உலமாக்கள் புத்தி ஜீவிகளின் தலையில் தனது முடிவுக்கான பொறுப்பினைக் கொடுத்திருப்பதாக அறிக்கை விட்டிருக்கிறார்.
முஸ்லிம் அரசியலில் இக்கட்டான சூழ்நிலைகள் வருகின்றபோது உடனே ஓடி ஒளிகின்ற இடமாக அல்லது தஞ்சம் கோருகின்ற இடமாக இருக்கின்ற இந்த உலமாக்கள் புத்தி ஜீவிகள் என்ற வார்த்தைகளை முஸ்லிம் அரசியலில் இன்னும் ஏன் பேசி உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் அசிங்கப்படுத்துகின்றார்களோ என்று தெரியவில்லை. முதலில் இவ்வாறு பேசக் கூடாது என்று எமது உலமாக்களும் அவர்கள் புத்திஜீவிகள் என்று கருதுகின்றவர்களும் அரசியல்வாதிகளிடம் ஒரு பணிவான வேண்டுகோளையாவது விடுங்கள் எமது அரசியல் பிரச்சாரங்களைவிட்டு உலமாக்கள் புத்திஜீவிகள் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் இல்லாது போகட்டும்.
என்னமோ காலையில் எழுந்து இரவுவரை தங்களது அரசியல் கடமைகள் பணிகள் யாவற்றையும் உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் கேட்டுத்தான் செய்வது போல இந்த முடிவினை எடுப்பதற்கும் உலமாக்கள் புத்தி ஜீவிகளை நாடுவதாக ஏன் இப்படி மக்களை ஒருவகையான ஏமாற்று வார்த்தைகளால் கவரப்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
றிசாத் பதியுத்தீன் கிழக்கு மகாணசபையில் தமது கட்சியின் 3 வேட்பாளர்களையும் சுயாதீனமாக இயங்கச் செய்தது எந்த உலமாக்கள் புத்தி ஜீவிகளைக் கேட்டு?, அதே போன்று கிழக்கு மாகாண சபையில் சுயாதீனமாக தங்களது வேட்பாளர்களை இருக்கச் செய்துவிட்டு பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்திற்கு தான் ஆதரவளித்து வாக்களித்தது எந்த உலமாக்கள் புத்திஜீவிகளைக் கேட்டு? என்ற நியாயங்களை மக்கள் நன்கு புரிந்திருக்கிறார்கள் என்பதையாவது உணர்ந்து உங்கள் பிரச்சாரங்களைச் செய்யுங்கள்.
மஹிந்தவுக்கு நல்ல பிள்ளையாக வரவு செலவுத் திட்டத்தில் வாக்களித்து அரசுக்கு ஆதரவு வழங்குவது மக்களுக்கு நல்ல பிள்ளையாக கிழக்கு மகாணசபையில் சுயாதீனமாக இயங்க தங்களது வேட்பாளர்களை அனுமதிப்பது. இந்த இரட்டை வேடத்தில் முன்னுக்குப் பின் முரணான ஒரு குழப்பம்தான் தெரிகிறது இந்தக் குழப்பத்தில் றிசாத் பதியுத்தீன் யாரை ஆதரிப்பதாக முடிவெடுப்பது?
இறுதியாக முஸ்லிம் சமூகத்தின் உரிமை, பாதுகாப்பு, அரசியல் அதிகாரம் என்ற எல்லாவற்றுக்கும் பொறுப்புக் கூறுகின்ற கட்சியாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிலைதான் இப்போது பொரும் கவலைக்கிடமாகத் தெரிகிறது.
கடந்த தேர்தல்களில் முடிவெடுத்தது போன்று இத் தேர்தலில் முடிவெடுக்க முடியாமல் அவர் பெரும் நெருக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றார் என்று தெரிகின்றது. மக்கள் மஹிந்தவுக்கு எதிராக இருக்கின்ற நிலையில் தனது முடிவை மஹிந்தவுக்குச் சாதகமாக எடுக்க வேண்டும் என்று உயர்பீடத்தில் சிலரின் அழுத்தங்கள் இருக்கின்ற போது தான் எடுக்கின்ற முடிவு கட்சியை பிளவு படுத்தாமலும் மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யக் கூடிய வகையிலும் அமைந்தாக வேண்டும்.
இதில் மஹிந்த தற்போது தனக்கு எதிராக செல்கின்றவர்களுக்கு பைல் என்ற ஒரு ஆயுத்தைக் காட்டி மிரட்டிக் கொண்டிருப்பதும், தனக்கு ஆதரவாக வருகின்றவர்களுக்கு கோடிக்கணக்கான பணப் பெட்டியைக் கொடுத்து வரவேற்றுக் கொண்டிருப்பதுமாக இன்று பகிரங்கமான வேலைத்திட்டங்கள் நடக்கின்ற போது இதில் ஹக்கீம் எப்படி விடுவித்துக் கொள்வது என்பது முக்கியமான ஒரு விடயம்.
ஏனெனில் எந்த பைல்களுக்கும் தனக்குப் பயமில்லை என்று கூறி துணிச்சலாக நிற்கும் அளவிற்கு அரசியலில் தான் தூய்மையானவர் என்பதையும் சமூகத்திற்காக இந்தக் கோடிகள் எதற்கும் நான் விலை போகமாட்டேன் என்பதையும் ஹக்கீம் நிரூபிக்கின்ற ஒரு தருணமாக இது இருக்கின்றது.
காரணம் இந்த பைல் கோடிப் பணம் எதையுமே கருத்தில் எடுக்காது தனது அனுபவ எதிர்பார்ப்புகளின்படி மஹிந்ததான் வெற்றியடைவார் என்று அறிவு பூர்வமாகச் சிந்தித்து அவருக்கு ஆதரவளித்து எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு நல்ல பல விடயங்களையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவோம் என்று தூய்மையோடு ஹக்கீம் மஹிந்தவை ஆதரிக்கும் முடிவினை எடுத்தாலும் அதனை மக்கள் இச்சந்தர்ப்பத்தில் ஒரு தூய்மையான முடிவாகப் பார்க்காமல் பைலுக்குப் பயந்து கோடிக்கு ஆசைப்பட்டு இந்த முடிவினை எடுத்திருக்கிறார் என்றுதான் விமர்சிப்பார்கள் இப்படி கதை கேட்பதும் புதிதான ஒன்று இல்லை என்பதும் ஒரு விடயம்.
அடுத்து தான் சமூகத்திற்காக சிந்தித்து மஹிந்தவின் வெற்றியை ஊகித்து மஹிந்தவின் ஆதரவை அறிவிக்க முடிவெடுக்கின்ற போது மக்களின் விமர்சனங்களுக்கு அப்பால் கட்சிக்குள் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளையும் எதிர்ப்புகளையும் சமாளிப்பது அடுத்த ஒரு சவாலான விடயம். இதிலும் அண்மையில் www.jaffnamuslim.com செய்தியாளர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, அவர்களிடம் ரவூப் ஹக்கீம் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் உடன்படிக்கைகளை செய்வதாக அறிந்துள்ள விடயம் தொடர்பாக கேட்ட போது அதற்கு ஹஸன் அலி அவ்வாறான எந்த நடவடிக்கைகளையும் ரவூப் ஹக்கீம் தனிப்பட்ட முறையில் செய்யவில்லை அவ்வாறு செய்தாலும் அதன் பின்னால் செல்வதற்கு கட்சியில் இருப்பவர்கள் ஒன்றும் ஆடு மாடுகள் அல்ல என்றும் மிகக் காட்டமாக பதில் அளித்திருந்தார்.
அதே நேரம் கட்சியின் உயர்பீடத்தின் முக்கிய சிலரின் அபிப்பிராயப்படி சிறிசேன அல்ல எந்த அப்பன் வந்தாலும் மஹிந்தவை தோட்கடிக்க முடியாது என்ற அபிப்பிராயமும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற வற்புறுத்தலுடன் இருப்பதும் தெரிகிறது.
இதில் எந்தப் பக்கம் சாய்ந்தாலும் கட்சிக்குள் பிளவு நிச்சயமாகுமா? என்ற உள் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி மக்களின் மஹிந்தவுக்கு எதிரான எதிர்பார்ப்பு ஒரு பக்கம், கட்சியின் பிளவுபடுமா? என்கின்ற மனப்பயம் ஒரு பக்கம்? மஹிந்த தனக்கு எதிரானவர்கள் தொடர்பாக தூக்கி இருக்கும் பைல் ஒரு பக்கம் என்று பல பக்கப் பிரச்சினைகளோடு ஹக்கீம் தலையில் கை வைக்கும் நிலையைத்தான் இத் தேர்தல் உருவாக்கி இருக்கிறது.
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்று ஏதாவது ஒரு முடிவில் இறங்க வேண்டும் இதில் நடு நிலை வகித்தால் மக்களையும் கட்சியையும் காப்பாற்றலாம் ஆனால் இதனால் மஹிந்தவிடம் இருந்து தன்னைக் காப்பாற்றலாமா என்பதை அவர்தான் சிந்திக் வேண்டும் ஏனென்றால் தனக்காக என்ன பைல் இருக்கும் அந்த பைலுக்குள் என்ன இருக்கும் என்பது அவருக்குத்தான் தெரியும்.
அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்.
Post A Comment:
0 comments: