(மூத்த ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பர்)
முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேசிய அரசியல் ரீதியாக ஏதாவதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமானாலும் அவர்கள் கூடி பேசித்தான் முடிவு செய்ய வேண்டுமென்ற தேவை இப்போது இல்லை. அவர்களின் அவ்வாறான எந்த முடிவுகளையும் மக்கள் சிரமேற்று நடக்கப் போவதும் இல்லை என்பது இன்றைய கள நிலைமைகளின் தெளிவாகும்.
அரசியல் விவகாரங்கள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் தாங்களாக எதனையும் தீர்மானித்தால் அதன்படியே அவர்கள் செயற்படும் நிலைதான் இன்று காணப்படுகிறது. உங்கள் தீர்மானத்தின்படி நாங்கள் நடக்கத் தயாரில்லை. நாங்கள் சொல்வது போன்று நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறுமளவுக்கு முஸ்லிம் மக்கள் அரசியல் விஷயத்தில் அத்துபடியாகி விட்டனர்.
மக்களின் எண்ணங்கள், அபிலாஷைகளின் அடிப்படையிலான தீர்மானங்கள் மட்டுமே இன்று சபையேறும். அதற்காக மக்களின் அபிலாஷைகளின்படியே எதிர்காலத்தில் நாம் தீர்மானங்களை எடுப்போம் என்று கூறுவதும் குப்புற வீழ்ந்தவன் தனது மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதற்கே ஒப்பானது.
இந்த நாட்டு முஸ்லிம்களின் பிரதான கட்சி என்று கூறப்படுவது முஸ்லிம் காங்கிரஸ்தான். அமைச்சர் ரிஷாத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் என்பவை அடுத்த கட்டமே. இந்த மூன்று கட்சிகளிலும் இரண்டாவதாகப் பேசப்படுவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான். அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடு என்னவென்பது மக்களுக்கு எப்போதும் தெரிந்ததால் அந்தக் கட்சி பெரிதாகப் பேசப்படுவதும் இல்லை. பிரச்சினைகளுக்குள் சிக்கி பிரஸ்தாபிக்கப்படும் ஒரு கட்சியாகவும் இல்லை.
எனவே, இன்று முஸ்லிம் அரசியலில் பேசப்படும் இரு கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மகக்ள் காங்கிரஸ் ஆகியவற்றின் பக்கமே முஸ்லிம்களது மட்டுமல்ல அரசினதும் பார்வைகள் திரும்பியுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் இவர்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சியேனும் இதுவரை விடையளிக்கவில்லை. அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரபரப்பாகப் பேசப்பட்ட காலத்திலும் அதற்கான உத்தியாகபுர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்தின் பின்னருமான இன்றை வரையும் இந்த இரு கட்சிகளும் தங்களுக்குள் இது குறித்து ஆராயாமலும் இருக்கவில்லை. நிறையவே கூடிக் கூடி பேசியுள்ளனர். ஆனால், இன்னும் நாம் தீர்மானம் எடுக்கவில்லை என்பதாகவே அறிக்கை வருகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களுக்குள் எத்தனையோ கூட்டங்களை நடத்தி விட்டன. அந்தக் கட்சியை உலமாக்கள் மற்றும் புத்தி ஜீவிகளும் சந்தித்து மக்களின் உணர்வுகளை அவர்களிடம் விளக்கியுள்ளனர். ஆனால், அவர்களால் எந்த்த் தீர்மானத்துக்கும் வர முடியாத ஒரு நிலைமையே காணப்படுகிறது. சில வேளைகளில் தங்களது கோவைகளும் (பைல்களும்) ஜனாதிபதியிடமிருந்தால் நிலைமை சிக்கலாகி விடும் என்ற அச்சமோ தெரியாது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தங்களுக்குள்ளாக பல கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் அதேவேளை, அதே கட்சியைச் சேர்ந்த சிலர் மைத்திரிபால சிறிசேனவுடனும் (ஐக்கிய தேசியக் கட்சி) கலந்துரையாடியுள்ளதனையும் இன்னும் சிலர் இன்றைய ஆட்சியாளர்களின் உயர்மட்ட வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணி வருவதனையும் எவராலும் மறைக்க முடியாது. எனவே, கட்சிக்குள் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுவதும் ஒரு தீர்க்கமான முடிவினை கட்சியின் தலைமையினால் மேற்கொள்வதற்குச் சிரமமாகவும் இருக்கலாம். எந்த முடிவினை எடுத்தாலும் ஒரு பக்கம் பாதிப்புத்தான் என்பதனை அந்தக் கட்சியின் தலைமை உணராமல் இல்லை. அதாவது, நிழலில் ஒதுங்கப் போனவனின் தலையில் காகம் எச்சம் போட்ட மாதிரியும் காக்கா இல்லாத மரம் பார்த்து தென்னை மரத்தின் நிழலில் ஒதுங்கியவனின் தலையில் தேங்காய் வீழ்ந்தது போன்றதுமாகவே இந்த விடயம் உள்ளது. எனவே, முஸ்லிம் காங்கிரஸ் என்பது இன்று இருபக்க கூர்கொண்ட கத்தியில் நடப்பது போன்றதுதான். ஆனால், அந்தக் கத்தி வெளியில் இல்லை என்பதனையும் மீண்டும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரைச் சந்தித்த முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஓரிருவர், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் தங்காளல் பெற்றுத் தர முடியுமென்றும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கத் தயாரென்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோன்று இந்த அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை நாடாளுமன்ற கட்டட தொகுதிக்குள் இரகசியமாகச் சந்தித்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் மேலும் ஓரிருவர் அந்தக் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களை தம்பக்கம் ஈர்க்க முடியுமென்றும் அதற்கான மட்டக்களப்பு மாந்திரீகம் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளதாகத் தெரிய வருகிறது. இதான் இன்றைய நிலை. இப்படிப்பட்ட நிலையில் எப்படித்தான் கட்சித் தலைமையால் முடிவெடுக்க முடியும்?
மக்கள் அபிலாஷைகளுக்கு இடம்கொடுப்பதா அல்லது கட்சி முக்கியஸ்தர்கள் சிலரின் தனிப்பட்ட நலன்களைக் கொண்ட அவாவுக்கு இயைந்து போவதா என்ற ஓர் இக்கட்டான நிலைமை கட்சி தலைமையை கடுமையான தலையிடிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதேவேளை, அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள் ஒருமித்த கருத்து நிலவுவதாகவும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் காணப்படும் முரண்பாடுகள் பிரச்சினைகள் போன்று அந்தக் கட்சிக்குள் எதுவும் இல்லையென்றும் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருந்தேன். எனது கண்பட்டு விட்டதோ தெரியவில்லை எண்ணி ஏழு நாட்களும் போகவில்லை அந்தக் கட்சிக்குள்ளும் பாரிய பிளவு ஏற்பட்டு விட்டது. அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாரூக் மின்னாமல் முழங்காமல் ஐக்கிய தேசியக் கட்சிப் பக்கம் பாய்ந்து விட்டார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இவ்வாறு கட்சி மாறவில்லை. அவர்களது கட்சிக்குள் எவ்வளவுதான் முரண்பாடுகள் காணப்பட்டாலும் இந்த நிலை இதுவரை எழவில்லை.
ஹுனைஸ் பாரூக் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை விட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறியமை அந்தக் கட்சியை மட்டுமல்ல.. வன்னி முஸ்லிம் மக்களையும் அரசியல் ரீதியாக இன்று பலமிழக்கச் செய்துள்ளதுடன் பாரிய ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. தனது தலைமையிலும் தான் சார்ந்த இன்றைய அரசாங்கத்திலும் அதிருப்திப்பட்டுக் கொண்டு இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் சேர்ந்துள்ளார். ஆனால், அந்தக் கட்சி மூலம் அவர் ஏதேனும் சாதித்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறிதான். இருப்பினும் இவரால் ஐக்கிய தேசியக் கட்சி ஏதோ ஒன்றைச் சாதித்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
ஹுனைஸ் பாரூக் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வன்னியில் போட்டியிட்டு வெற்றியடைவாரா அல்லது தோல்வியடைவாரா என்ற விடயங்களுக்கு மேலாக அங்கு வாழும் குறைந்த எண்ணிக்கையான முஸ்லிம்களின் வாக்குகள் சின்னா பின்னப்பட்டு அந்த மாவட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமே இல்லாமல் போய்விடலாம் என்பது களநிலைச் சாத்திரமாகும். இதனால், அந்த மக்களின் நிலைமை இன்றையதை விடவும் மிக மோசமாகியும் விடலாம்.
சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள எவராயினும் சின்னச் சின்ன விடயங்களுக்காக அல்லது சொற்பமான தற்காலிக நன்மைகளுக்காக முரண்பட்டு பிரிந்து நிற்பதனால் ஏற்படும் விளைவுகள் விகாரமானவை. ஒரு சமூகமே இதற்காக விலைகொடுக்க வேண்டிவரும்.
பேரினவாத, பெருபான்மை இன அரசியல் கட்சிகளின் சதுரங்கத்தில் இன்று சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் வெறும் காய்களாகவே நகர்த்தப்படுகிறனர். இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது துரதிர்ஷடமானது.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள் எழுந்துள்ளமையால் அந்தக் கட்சியும் அரசியல் ரீதியாக தூரப்படுத்தப்படும் என்பதே உண்மை. சிங்கள அரசுகளுடன் சிறுபான்மைக் கட்சிகள் பேரம் பேசும் நிலைமை மாறி நாங்களே அவற்றிடம் சோரம் போகும் தன்மை தோன்றியுள்மை வேதனையான விடயம்தான். அத்துடன் இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிவது மிகவும் துரதிர்ஷ்டமானது.
(30-11-2014) வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான எனது கட்டுரை
Post A Comment:
0 comments: