சட்டவிரோத ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாம் தயாரில்லை - அனுரகுமார திசாநாயக

Share it:
ad
தேர்தலை தடுக்க நாம் முயற்சிக்கின்றோமே தவிர அரசாங்கத்தை கவிழ்க்க தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாரில்லை. அரசியல் அமைப்பினையும், சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும். அரசியல் யாப்புடன் விளையாட எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பம் பார்த்திருக்காது நாட்டில் சட்டத்தினை நிலைநாட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு சகல விதத்திலும் அரசாங்கம் தயார் என தெரிவித்துள்ள நிலையில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சட்டவிரோத தேர்தலை நடத்தவே அரசாங்கம் தயாராகி வருகின்றது. அரசுக்குள் இயங்கும் பிரிவினைவாதிகளையும், குழப்பக்காரர்களையும் தூண்டிவிட்டு ஆட்சியினை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். இதற்கு நிகராக நாமும் எதிர்க்கட்சிகளும் தேர்தல் களத்தில் குதிப்பது சட்டவிரோத செயலுக்கு துணைபோகும் வகையிலேயே அமையும். அரசியல் யாப்பு இந்த நாட்டின் மூலாதாரம். அதனை மீறி செயற்படுவது தேசத்துரோக செயற்பாடாக அமையும். அவ்வாறான தேசத்துரோக செயலையே இன்று அரசாங்கம் செய்ய நினைக்கின்றது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது முறை போட்டியிடுவதை தடுக்கவே நாம் முயற்சிக்கின்றோமே, தவிர அரசாங்கத்தை கவிழ்க்கும் கொள்கையில் சட்டவிரோத தேர்தலில் போட்டியிட நாம் தயாரில்லை. அரசியல் அமைப்பினை மீறும் செயலையும் அரசியல் அமைப்புடன் எவரும் விளையாடவும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

அதற்காகவே மக்களை தெளிவூட்டும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம். மக்களின் தெளிவும் அவர்களின் முடிவுமே இறுதியானது. அதற்காகவே முக்கிய பிரதி நிதிகளை இணைத்துக்கொண்டு போராடி வருகின்றோம்.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ள முடியும். அடுத்த சட்ட முறையான தேர்தலில் அதற்கான பிரகாசமான வாய்ப்பு அமையும். ஆனால் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியும், அரசியல் அமைப்பிற்கு முரணான தேர்தலில் போட்டியிடுவது அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமான வேறுபாட்டினை காட்டாதுபோய்விடும். எனவே அரசாங்கத்தின் நீதிக்கு புறம்பான இத் தேர்தலை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: