‘ஹியுஸ் இழப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. புன்னகை பூக்கும் முகம், ஒளி வீசும் கண்களுடன் வலம் வந்த இவரை பெரிதும் ‘மிஸ்’ பண்ணுகிறோம்,’’ என, கதறி அழுதவாறு கூறினார் ஆஸ்திரேலிய கேப்டன் மைகேல் கிளார்க்.
சமீபத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் மைக்கேல் கிளார்க் பங்கேற்றார். அப்போது ஹியுஸ் குறித்து பேசும் போது தேம்பி அழுத கிளார்க் கூறியது:
ஹியுஸ் இழப்பு குறித்து ஒரு அணியாக நாங்கள் என்ன உணர்கிறோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஹியுஸ் மறைந்த சோகத்தால் மீளா துயரத்தில் உள்ள அவரது தந்தை கிரெக், தாயார் வெர்ஜினியா, சகோதரர் ஜாசன், சகோதரி மேகன் ஆகியோர்களின் மனவேதனையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
இவர், பண்ணை வீட்டில் தனது செல்லப்பிராணிகளுடன் இருக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் சகவீரர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை பெரிதும் விரும்புவார். தேசத்துக்காக கிரிக்கெட் விளையாடாமல் என்ன செய்வது? என அடிக்கடி கூறுவார்.
எப்போதும் புன்னகையுடன் இருக்கும் இவரது முகம், ஒளிவீசும் கண்களை இனி எப்போது பார்ப்போம். கிரிக்கெட் உலகம், ஒரு சிறந்த வீரரை மட்மல்லாமல், நல்ல மனிதரையும் இழந்துவிட்டது. அவரது நினைவை கவுரவிக்கும் விதமாக எங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை நிச்சயமாக செய்வோம் என ஹியுசின் குடும்பத்தினருக்கு உறுதி அளிக்கிறேன். கடந்த மூன்று நாட்களாக ஹியுஸ் மறைவுக்கு உலகெங்கிலும் அஞ்சலி செலுத்தி வரும் அனைவருக்கும் நன்றி. எங்கள் அணியின் ‘டிரஸிங் ரூம்’ முன்பு இருந்ததை போல இனி எப்போதும் இருக்காது. இவரை எங்களால் எப்போதும் மறக்க முடியாது.
இவ்வாறு மைக்கேல் கிளார்க் கூறினார்.
Post A Comment:
0 comments: