கரையோர மாவட்ட கனவு..!

Share it:
ad
(ஏ.எல்.நிப்றாஸ்)

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் உள்ளடங்கும் விதத்தில் தனியானதொரு கரையோர மாவட்ட அலகு உருவாக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கை, பெரும்பான்மை கட்சிகளால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எதனையும் தெளிவாக விளங்கிக் கொள்ளாமல் முஸ்லிம் பிரிவினைவாதம் என்றும் ஒலுவில் பிரகடனம் என்றும் பிதற்றிக் கொள்ளும் இனவாதிகளின் வாய்க்கு இப்போது நல்ல அவல் கிடைத்திருக்கின்றது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பிரதான எதிர்க்கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.யான விஜேயதாச ராஜபக்ஷ இதனை புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒப்பிட்டுப் பேசியிருக்கின்றார். பிரதமர் தி.மு. ஜயரத்ன இக் கோரிக்கையை அரசாங்கத்தின் சார்பில் நிராகரித்திருக்கின்றார். 

ஆனால் கிழக்கு மாகாணத்தையும் ஏனைய பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் யாரும் பாராளுமன்றத்தில் இது தொடர்பான விளக்கத்தை அளிப்பதற்கு விருப்பப்படவில்லை. தனிநாட்டு கோரிக்கை என்பது வேறு - புதியதொரு மாவட்டம் என்பது வேறு என்பதை விலாவாரியாக சொல்வதிலிருந்தும் அவர்கள் தவிர்ந்து கொண்டனர். பாராளுமன்றத்திற்கு வெளியிலும் கூட ஒரேயொரு எம்.பி.யை தவிர வேறெந்த மக்கள் பிரதிநிதியும் இதுபற்றி வாயை திறக்கவில்லை. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனியானதொரு நிர்வாக அலகு என்பது வேறு, அம்பாறை கரையோரத்தில் ஒரு தனியான மாவட்டம் என்பது வேறு. இவ்விரண்டும் நேற்று இன்று முன்வைக்கப்படும் கோரிக்கையல்ல. மாறாக நீண்டதொரு வரலாற்றுப் பின்னணியை கொண்டது. அடிப்படையில் இரண்டிற்கும் பெருத்த வித்தியாசங்களும் இருக்கின்றன. இதனையே விளக்கமில்லா குழப்பம் என்று கிராமப்புற மக்கள் சொல்வார்கள்.

அம்பாறை மாவட்ட பிரிப்பு

நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் மட்டக்களப்பும் அம்பாறையும் ஒரே மாவட்டமாகவே இருந்தது. இன்று வரைக்கும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை கொழும்பில் உள்ளவர்கள் 'மட்டக்களப்பான்' என்று விளிப்பதற்கும் அதுவே காரணம் எனலாம். 

டி.எஸ். சேனனாயக்காவின் முழுமுயற்சியின் பெயரால் கல்லோயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட பணிகள் 1950களின் முற்பகுதியில் பூர்த்தியடைந்தன. இத்திட்டத்திற்கு அமைய இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு 75 வீதமான காணி வழங்கப்படும் என்றும் பிற பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு குடியேற்றப்படும் மக்களுக்கு 25 வீத காணி கிடைக்கும் என்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு டி.எஸ். சேனனாயக்கா வாக்குறுதி அளித்திருந்ததாக கூறப்படுகின்றது. ஆயினும் அந்த வாக்குறுதி காப்பாற்றப்பட்டிருக்க சாத்தியமில்லை. 

அதற்மைய டி.எஸ். சேனனாயக்கவின் சிபாரிசின் பேரில் காலி, மாத்தறை, கம்பஹா, குருணாகல், கேகாலை, மீரிகம போன்ற இடங்களை சேர்ந்த மக்கள் கல்லோயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு காணியும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் எஸ்.டபள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஆட்சியிலும் சொற்பளவான சிங்களவர்கள் அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டனர். 

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு பிரதேசமான அம்பாறை நகரைச் சுற்றி சிங்களவர்கள் குடியேற்றப்பட்டமையால் இனப்பரம்பல் மாற்றமடைந்தது.  சிறுபான்மை மக்கள் பெருமளவுக்கு வாழ்ந்த ஒரு நிலப்பரப்பில் சிங்களவர்களுக்கு அதிக காணிகள் வழங்கப்பட்டன. எவ்வாறிருப்பினும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அநேகர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலங்களில் நிரந்தரமாக தங்கியிருக்கவில்லை. இந்நிலையில் பண்டாரநாயக்க விடுத்த அறிவிப்பினால் காணிகளை நிரந்தரமாக சொந்தமாக்கிக் கொள்வதற்காக குறிப்பிட்ட அனைத்து சிங்கள குடும்பங்களும் கல்லோயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிரந்தரமாக குடியமர்ந்தனர். ஏக காலத்தில் பண்டாரநாயக்கா அம்பாறையை ஒரு தொகுதியாக ஆக்கிவிட்டு மரணமடைந்தார். 

1961 இல் பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாறை தொகுதிகளை உள்ளடக்கி அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமன்றி பல தொகுதிகளையும் அதிகமான சிறுபான்மை மக்களையும் கொண்ட பிரதேசத்தில் அல்லாமல் ஒரேயொரு தொகுதியையும் குறைவான சிங்கள மக்களையும் கொண்ட அம்பாறையே மாவட்டத்தின் நிர்வாக தலைநகராகவும் முன்மொழியப்பட்டது. 1947ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிப்பதற்கு இன்றுள்ள ஒட்டுமொத்த அம்பாறை மாவட்டத்திலும் 500 இற்கும் குறைவான சிங்கள வாக்காளர்களே அன்று இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் மேற்குறிப்பிட்டவாறு வெளியிடத்து சிங்களவர்கள் அழைத்து வரப்பட்டதால் சிங்களவர்களின் விகிதாசாரம் அதிகரித்தது மட்டுமன்றி அம்பாறையே நிர்வாக நகராகவும் ஆனது.

அன்றிலிருந்து இன்று வரைக்கும் மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரிலேயே கச்சேரி இயங்கி வருகின்றது. இன்று வரைக்கும் ஒரு தமிழ் பேசும் அரச அதிபரேனும் இங்கு நியமிக்கப்படவில்லை. கச்சேரி மட்டுமன்றி மேலும் பல அரச அலுவலகங்களும் செறிவாக அம்பாறையிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஓரிரு அரச அலுவலகங்களே கரையோரப் பிரதேசங்களில் காணப்படுகின்றன. அவையும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அம்பாறை நோக்கி நகர்த்தப்பட மாட்டாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. 

இவ்வாறிருக்கையில், தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்பது விடுதலைப் புலிகளையும் ஆயுதங்களையும் முன்னிலைப்படுத்துகின்ற ஒன்றாக உருமாறிய பின்னர் முஸ்லிம்கள் தமது இருப்புக் குறித்து வெகுவாக அச்சம் கொண்டனர். எல்லா இனங்களும் சகோதர இனங்களின் விடயத்தில் சிறியதும் பெரியதுமாக தவறுகள் இழைத்திருக்கின்றனதான். அப்போதிருந்த ஊhர் 'சண்டியர்களின்' அறிவுகெட்டதனம் வேண்டத்தகாத பல நிகழ்வுகளுக்கு காரணமாயிற்று. ஆனபோதும் சாதாரண தமிழர்களும் முஸ்லிம்களும் பகைமை பாராட்டிக் கொள்ளவில்லை. என்றாலும் புலிகள் கோருகின்ற வடக்கு கிழக்கை மையமாகக் கொண்ட தமிழீழத்திற்குள் முஸ்லிம்களின் எதிர்காலம் நிச்சயமற்றது என்பது மு.கா. தலைவர் அஷ்ரஃப் போன்ற மக்கள் தலைவர்களுக்கு பட்டவர்த்தனமாக புலனாகியது. 

தேசிய அரசாங்கத்திற்கு கீழ் ஒரு ஆயுத இயக்கமாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக புலிகள் செய்கின்ற அட்டகாசத்தை வைத்து பார்க்கின்றபோது தனிநாட்டையும் ஆட்சியதிகாரத்தையும் கொடுத்தால் எப்படியிருக்கும் என்ற திகிலூட்டும் பல கேள்விகள் முஸ்லிம்களிடமிருந்தன. 

தனியலகும் மாவட்டமும்

இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்ட போது அஷ்ரஃப் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதாகப்பட்டது, தமிழர்களுக்கு தனிநாடு கொடுக்கப்படுமாயின் இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரினார். இது அம்பாறை மாவட்டத்தை பிரதானமாக உள்ளடக்கியது என்றபோதும் அம்பாறை மாவட்டத்திற்கு மட்டுமான ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல், தமிழர்களுக்கு தனிநாடு கொடுக்கும் நடைமுறை அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் என்று வருகின்றபோது மாத்திரமே முஸ்லிம்களுக்கும் தனியலகு வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்பதையும் மறந்து விடக்கூடாது. 

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்கள் என்று வருகின்ற போது மேற்படி நிலைப்பாட்டை வலியுறுத்திய அஷ்ரஃப், பிற்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின்  தேர்தலுக்கான பேரம் பேசல்களின் போது கல்முனையை மையமாகக் கொண்ட கரையோர மாவட்டத்தையும் தென்கிழக்கு அலகையும் அதிகமதிகம் பிரஸ்தாபித்தார். தனியலகு சாத்தியப்படாது என்பதற்காகவோ அல்லது முதலில் கரையோர மாவட்டத்தையாவது எடுத்துக் கொள்வோம் என்பதற்காகவோ தலைவர் அஷ்ரஃப் இந்த இரண்டாவது கோரிக்கையை முன்வைத்திருக்கலாம். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை என்றாலும் வேறு வேறு எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை கவனத்திற் கொள்ளவும். 

1994 இல் ஆட்சி பீடமேறிய சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் அவரது வலது கையாக இருந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் கரையோர மாவட்டத்தை பெறுவதில் முனைப்புடன் இருந்தார். ஆட்சியின் தூணாக இருந்த அவருக்கு அதனை செய்துகொடுக்க வேண்டிய கடப்பாடு சந்திரிகாவுக்கும் இருந்தது. ஆனாலும் சந்திரிகாவின் ஆட்சி மாறுவதற்கிடையில் அஷ்ரஃப் மரணித்துவிட்டதால் அந்த கோரிக்கை அப்படியே அடங்கிப் போனது என்றுதான் சொல்ல வேண்டும். 

அதன் பிறகு 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் றவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இரண்டறக் கலந்தபோதும், 2012 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க ஆதரவு நல்கிய வேளையிலும் கரையோர மாவட்டம் குறித்த உடன்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் செயலுருப் பெறவில்லை. 

தற்போதுள்ள அம்பாறை மாவட்டத்திற்குள் இன்னுமொரு மாவட்டம் உருவாக வேண்டும் என்பது வெறுமனே அரசியல் கோஷமோ இனவாத முன்னெடுப்போ அல்ல. அவ்வாறே தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் சுயநலமோ நாட்டைப் பிரிக்கும் நோக்கமோ அதில் இல்லை. மாறாக, கரையோர மாவட்டம் ஒன்றிற்கான தேவைப்பாட்டை அரச பொறிமுறை கூட பலமுறை இனங்கண்டு இருக்கின்றது. 

மாவட்டங்களை சீரமைப்புச் செய்வதற்காக 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்தன, மொறகொட ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழு நாடு தழுவிய ஆய்வுகளை மேற்கொண்டு இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக வேண்டுமென்று சிபாரிசு செய்தது. அதாவது யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் அப்போது உள்ளடக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை பிரதான நகராக கொண்டு ஒரு மாவட்டமும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையை முன்னிலைப்படுத்தி இன்னுமொரு மாவட்டமும் உருவாக்கப்பட வேண்டுமென மொறகொட ஆணைக்குழு சிபாரிசு செய்திருந்தது. 

இப் பரிந்துரைகளுக்கு அமைவாக கிளிநொச்சி தனியொரு மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அம்பாறையில் இன்னுமொரு புதிய மாவட்டத்தை உருவாக்க ஜே.ஆர். முயற்சித்த வேளையில் அப்போது ஐ.தே.க.வில் முக்கிய இடம்வகித்த அம்பாறையை சேர்ந்த பி. தயாரத்ன போன்றோர் அதனை எதிர்த்தமையால் ஜே.ஆர். அத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். 

அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சங்கமமாகியிருந்த காலப்பகுதியில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்கும் திட்டத்தை ரணில் வகுத்திருந்தார். அதில் கல்முனை கரையோர மாவட்டத்தின் பெயரும் இருந்தது. இருப்பினும் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் வழக்கம் போல இது விடயத்தில் கருத்து முரண்பட்டனர். குறிப்பாக அமைச்சர் அதாவுல்லா அக்கரைப்பற்றிலேயே மாவட்ட கச்சேரி அமைய வேண்டுமென்று கேட்டார். இதனை மு.கா. கட்சி விரும்பவில்லை. இப்படியான இழுபறிநிலை இருக்கும் போது ரணிலின் ஆட்சிக் காலமும் முடிவடைந்து விட்டது. 

அதற்குப் பிறகு கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கி ஆட்சி பீடமேற்றியது. இதற்கான பேச்சுவார்த்தைகளில் உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் ஒன்றை கல்முனையில் நிறுவுவது, காலப்போக்கில் கல்முனை கரையோர மாவட்டமாக அதனை உருவாக்குவது போன்ற விடயங்களில் இணக்கம் காணப்பட்டதாக மு.கா. தரப்பு சொன்னது. ஆனால், அதற்கு பிற்பாடு கரையோர மாவட்டத்தையோ குறைந்த பட்சம் உதவி அரச அதிபர் காரியாலயத்தையோ பெறுவதற்கு மு.கா. எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்தப் பின்னணியில்  கரையோர மாவட்ட கனவு இன்னும் கைகூடவில்லை.

எனவேதான், கரையோர மாவட்டம் என்பதன் தேவை இன்று நேற்று உருவான ஒன்றல்ல. சுமார் 40 வருஷங்களாக அரசாங்கங்களால் அடையாளம் காணப்பட்டதும், 20 வருடங்களாக முஸ்லிம்களால் கோரப்பட்டு வரும் ஒரு பொதுநிர்வாக கட்டமைப்பும் என்பதை மறந்து விடக் கூடாது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மு.கா.வினால் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட முறை வேண்டுமென்றால் தவறாக இருக்கலாம் ஆனால் கோரிக்கை நியாயமானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவியலாது. 

தவறான சொற்பிரயோகம்

அம்பாறையில் நகரின் வடக்கு பக்கமாகவே மாவட்ட செயலாகமும் இன்னபிற அரச அலுவலகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள அரச அதிகாரிகள் தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணிக்கின்றனர் என்று ஒட்டுமொத்தமாக சொல்வது அபாண்டமானது. இருப்பினும் பொத்துவிலில் இருக்கின்ற முஸ்லிமும் பாணமையில் இருக்கின்ற சிங்களனும் பாண்டிருப்பில் இருக்கின்ற தமிழனும் தமது தேவைகளை நிறைவேற்ற பஸ் போக்குவரத்து மிகக் குறைவாகவுள்ள அம்பாறைக்கே செல்ல வேண்டியிருக்கின்றது. அரச அதிபர் சிங்களவராக இருப்பது ஒருபுறமிருக்க 90வீதமான பணிகள் சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப்படுகி;ன்றன. இதனால் மொழி தெரியாத ஏழைச் சிறுபான்மை மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். 

அதேபோல் கரையோர மாவட்டம் என்று ஒன்று உருவாகாதவிடத்து அம்பாறை நகருக்கு வெளியே அமைந்திருக்கின்ற அரச நிறுவனங்கள், சபைகள், அதிகார சபைகளின் காரியாலயங்கள் இன்னும் சில வருடங்களுக்குள் அம்பாறைக்கு கொண்டு செல்லப்படாது என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. முஸ்லிம்களின் அரசியல் பலம் குறைகின்ற போது அது இயல்பாகவே நடந்துவிடும். எனவே புதியதொரு மாவட்டம் உருவாக்கப்பட்டு கல்முனையிலோ அல்லது கரையோரத்திலுள்ள ஏதாவது ஒரு பிரதேசத்திலோ கச்சேரி அமைக்கப்பட்டால் அரச சேவைகளை பொதுமக்கள் இலகுவாக அணுகக் கூடியதாக இருக்கும். சிறியதொரு வேலைக்காக அம்பாறைக்கு செல்வதற்கு முழு நாளையும் செலவழித்து, கூடவே சிங்களம் தெரிந்த ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 

ஆனால், இந்த கோரிக்கையை முன்வைக்கின்ற மு.கா. போன்ற தரப்பினர் மிகக் கவனமாக தமது வார்த்தைகளை பிரயோகிக் வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகின்றேன். வார்த்தைகள் பிழைத்துப் போவதாலேயே அர்த்தமே மாறிவிடுகின்றது. தனிநாட்டுக் கோரிக்கை என்ற பிதற்றல்களை எல்லாம் கேட்க வேண்டியிருக்கின்றது. 

முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய கரையோர மாவட்டம் என்ற சொற் பிரயோகம் தவறானது என கருதுகின்றேன். இது தமிழர்களை அச்சமூட்டலாம். இந்த முஸ்லிம் பிரதேசங்களுக்குள் பின்னிப் பிணைந்துள்ள காரைதீவையும் திருக்கோவிலையும் எப்படி புறக்கணிக்க இயலும்? அது மட்டுமன்றி இதுபோலவே சிங்களவர்களும் தமிழர்களும் தனித்தனியாக மாவட்டங்களை கோர முயன்றால் எவ்வாறிக்கும்? இனரீதியாக ஒரு மாவட்டத்தை கேட்பது இனவாதமாகவே நோக்கப்படும் என்பதையும் முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். 

அம்பாறை என்ற ஒரேயொரு தொகுதியிலேயே சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் மற்றைய 3 தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு கரையோர மாவட்டம் அவசியம் என்ற கோரிக்கையே இங்கு தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். 

மறுபுறத்தில் தமிழர்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு என்று தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பல மாவட்டங்கள் இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாவட்டமாவது உருவாவதிலுள்ள நியாயத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கரையோரத்தில் ஒரு மாவட்டம் உருவானால் அது தமிழ் மக்களுக்கும் நன்மையே என்பதை தமிழ் தலைவர்கள் தங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 

அதேவேளை, இப்போது முஸ்லிம்கள் கோருவது தனிநாடோ அல்லது தனி ஆட்புல எல்லையோ அல்ல என்பதையும் அம்பாறை மாவட்டத்திற்குள் புதிய கரையோர மாவட்டம் ஒன்றையே கோருகின்றனர் என்பதையும் மிகத் தெளிவாக பாராளுமன்றத்திற்கும் இந்நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு முஸ்லிம் எம்.பி.க்களுக்கு இருக்கின்றது. ஒரு அரசாங்க அதிபரே இந்த மாவட்டத்தை நிர்வாகம் செய்வார். ஏனைய மாவட்டங்களை போன்றே இங்கும் அரச பொறிமுறை இயங்கும் எனவே நாட்டின் இறைமைக்கோ இனங்களின் நல்லுறவுக்கோ இது பாதிப்பை ஏற்படுத்தாது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைக்க வேண்டும். 

இது தேர்தல் நெருங்கி வரும் காலம். இப் பருவகாலத்தில் அரசாங்கமோ எதிர்க்கட்சியினரோ யார் என்றாலும் சிறுபான்மையினரால் முன்வைக்கப்படும் கோரிக்கையை வேறு கோணத்திலேயே நோக்குவர். ஏனென்றால் சிங்களவர்களின் வாக்கு அவர்களுக்கு தேவை. எனவே உண்மையான நியாயங்களையும் காரண காரியங்களையும் வெளிப்படையாக சொல்லி நமது பக்கத்திலுள்ள நியாயங்களை ஆட்சியாளர்களுக்கு புரியவைத்து, கரையோர மாவட்டத்தை பெறவேண்டிய பொறுப்பு - முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கும் இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அமைச்சரான அதாவுல்லா மற்றும் எம்.பி.க்களும் தார்மீக பொறுப்பாகும். காலமறிந்து - ஆனால் காலம் தாழ்த்தாது அதனை செய்தாக வேண்டியுள்ளது. 

கடைசியாக ஒரு விடயம் - 

மட்டக்களப்பிலிருந்து அம்பாறையை தனியொரு மாவட்டமாக பிரித்தெடுப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, இப் பகுதியிலுள்ள தொகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் 3 எம்.பி.க்களும் தமது பாராளுமன்ற ஆசனங்களில் அமர்ந்திருக்கவில்லை. அவர்கள் 'வேறெங்கோ' இருந்த வேளையில் இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக ஒரு அரசியல் கதையிருக்கின்றது. அவர்கள் சபையில் இருந்திருந்தால் அம்பாறை நகர் புதிய மாவட்டத்தின் தலைநகராவதையும் கச்சேரி அங்கு இயங்குவதையும் தடுத்திருக்கலாம் என்று நமது மூத்த தலைமுறையினர் விமர்சிப்பதுண்டு. இன்றைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நமது அரசியல்வாதிகள், அடுத்த தலைமுறையினர் இவ்வாறு விமர்சித்து, காறிஉமிழும் நிலைக்கு ஆளாகிவிட வேண்டாம். அவ்வளவுதான் !
Share it:

Post A Comment:

0 comments: