நிசாம் காரியப்பரின் வழிகாட்டல் - கல்முனையை ஜேர்மன் மாநகரத்துடன் இணைக்க ஒப்பந்தம்

Share it:
ad

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தின் நவீன அபிவிருத்தி திட்டங்களை இலக்காகக் கொண்டு கல்முனை மாநகர சபையை ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகர சபையுடன் இணைக்கும் இரட்டை நகர புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை நியுரம்பேர்க் நகரில் இடம்பெற்றுள்ளது. இதில் நியுரம்பேர்க் மாநகர முதல்வர் டாக்டர் கிளமன்ஸ் ஜிசெல் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோர் கைச்சாத்திட்டு ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.

கல்முனை மாநகர பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வர்த்தகம், கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதார மற்றும் விளையாட்டுத் துறைகளின் முன்னேற்றம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இந்த இரட்டை நகர இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜேர்மன் பயணமாகியிருந்தார்.

கல்முனை நகரமானது ஒரு வெளிநாட்டு நகரம் ஒன்றுடன் இரட்டை நகர இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டமை கல்முனையின் வரலாற்றில் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

நியுரம்பேர்க் நகரமானது ஜேர்மனியில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூக, பொருளாதார துறைகளில் தன்னிறைவு கண்ட அனைத்து வளங்களும் நிறைந்த ஒரு விசாலமான- செல்வந்த நகரம் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்த இரட்டை நகர ஒப்பந்தத்தின் மூலம் கல்முனை மாநகர பிரதேசங்களின் உட்கட்டமைப்பு, வர்த்தகம், கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதார மற்றும் விளையாட்டுத் துறைகளின் நவீன அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி, வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு  ஜேர்மன் நாட்டின் நியுரம்பேர்க் மாநகர சபை முன்வந்துள்ளது என்று கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

அதேவேளை இந்த இரட்டை நகர இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்துவதற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்த கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். 


Share it:

Post A Comment:

0 comments: