வடக்கு முஸ்லீம்களின் வெளியேற்றத்தை தடுத்துநிறுத்த கிறிஸ்தவ மதகுருமார் முயற்சித்தார்களா..?

Share it:
ad
இலங்கை இன முரன்பாடுகளின் வரலாற்றில் படுமோசமான துன்பியல் நிகழ்வாகவும் மனித அவலமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண முஸ்லீம்களின் பலவந்த வெளியேற்றமானது இதுவரை காலமும் ஒரு சுய இலாப அரசியலுக்கான மூலதானாமாகே பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது என NFGG இன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 30.10.2014 ம் திகதியன்று மன்னார் YMCA மண்டபத்தில் NFGG இனால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட வடமாகாண முஸ்லீம்களின் 24வது வருட நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

'நல்லினக்கமாய் வாழ்வோம் பலமாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்ததாவது...

"ஒரு கால் நூற்றான்டுக்கு முன்னர் நடந்து முடிந்த, ஆனால் இந்நாட்டில் நடந்திருக்கக் கூடாத ஒரு மனித அவலத்தினை நிறைவுகூருகின்ற இதுபோன்ற நிகழ்வுகள் இப்போது வெறும் சம்பிரதாய பூர்வமான நிகழ்வாகவே மாறியிருக்கிறது. 1990 ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் விடுதலைப் புலிகளினால் முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். சர்வதேச நியமங்களின் படி இனப்படுகொலைக்கு அடுத்த தரத்தில் இருக்கின்ற பாரிய குற்றமாக கருதப்படும் இந்த இனச் சுத்திகரிப்பு உள்ளாக்கப்பட்ட  வடமாகாண முஸ்லீம்கள் தமக்கான திருப்திகரமான நிரந்தர தீர்வுகளை இது வரை பெற்றுக் கொள்ளவில்லை.

இதற்கு காரணம், 90 ஆண்டு தொடக்கம் இன்று வரை இதைக் கையாளும் அரசியல் தலைவர்கள் இதனை தமது அரசியல் பிரச்சாரத்திற்கும் வெற்றிகளுக்குமான கோசமாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இம்மக்களால் நம்பப்பட்ட பெரும் பெரும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட எவ்வாறு இம்மக்களை புறந்தள்ளி வந்திருக்கிறார்கள் என்பதனை நான் ஆரம்பம் முதலே அவதானித்து வந்திருக்கிறேன்.

95ம் ஆண்டளவில் நான் பல்கலைக் கழக மாணவனாக இருக்கின்றபோது கற்பிட்டி பகுதியில் அமைந்திருந்த ஒரு அகதி முகாமில் இவ்வடமாகாண முஸ்லீம்களோடு சில நாட்கள் நான் வாழ்ந்திருக்கிறேன். பாலைவனம் போன்ற அந்த மணல் பிரதேசத்தில்  தமக்கான மிக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இம்மக்கள் அனுபவித்த துயர வாழ்க்கை எந் நெஞ்சில் இன்னமும் நினைவிருக்கிறது. அவற்றுள் என்னை மிகக் கடுமையாக பாதித்த ஒரு விடயத்தினை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

நூற்றுக் கணக்கான ஓலைக் குடிசைகளையும் வெறும் மண் தரையினையும் கொண்ட அந்த அகதி முகாமில் காலையில் எழுகின்றபோது, காலைக் கடன்களை முடிப்பதற்காக மிக நீண்ட நேரம் ஆண்களும் பெண்களும்  நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டும். இளம் பெண்களும் தாய்மார்களும் என அத்தனை பேருபமே தமது வெட்கத்தை விட்டு வேறு வழியின்றி பலமணி நேரம், காலைக் கடன்களை முடிப்பதற்காக வெட்ட வெளியில் காத்திருந்த அந்தக் காட்சி என் நெஞ்சை உருக வைத்தது.முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் தலைவர்களாக இருந்த அரசியல் வாதிகளினாலும் கட்சிகளினாலும் இவர்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அவ்வனுபவம் நிரூபிப்பதாக இருந்தது. 

ஏனெனில், வடக்கு முஸ்லீம்களின் பிரச்சினைகளை மூலதனமாக வைத்துக் கொண்டு அரசியல் நடாத்தி முஸ்லீம்களின் வாக்குகளை பெருமளவில் பெற்ற தலைவர் ஒருவரும் அவரது கட்சியும் அன்றைய சந்திரிக்கா அரசாங்கத்தில் மிக முக்கிய பங்காளிகளாக இருந்தனர். இவ்வகதி மக்களின் பெயரால் பெற்றுக் கொண்ட பலம் பொருந்திய புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சும் இவர்களின் கைகளில் இருந்தது. இவர்களையும் இவர்களைச் சுற்றியிருந்தோரும் அவ்வமைச்சு அதிகாரங்களை பயன்படுத்தி கோடீஸ்வரர்களாக மாறிய, மாறிக்கொண்டிருந்த வேளை அது.  ஆனாலும் நூற்றுக் கணக்கான ஏழை அகதி குடும்பங்கள் வாழ்ந்த அந்த அகதி முகாமில் வாழந்த பெண்களும் தாய்மார்களும் தமது மானம் மரியாதையைப் பாதுகாத்துக் கொண்டு தமது அன்றாட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஒரு ஐந்து கழிவறைகளை தானும் அமைத்துக் கொடுப்பதற்கு அந்த அரசியல்ல தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற பல நூற்றுக் கணக்கான அனுபவங்கள், கடந்த 24 வருடங்கள் அம்மக்கள் ஏமாற்றப்பட்டதற்கான உதாரணங்களாக இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னால் கொழும்பில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின்போது இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்சியின் தலைவரிடத்தில் நான் நேரடியகவே இது பற்றி கேள்வி கேட்டிருக்கிறேன். நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில் அந்த முஸ்லிம் கட்சியின் மீதான நம்பிக்கையீனத்தையும் விரக்தியையும் அங்கிருந்த வடமாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அந்த முஸ்லிம் கட்சியின் தலைவர், தமது முன்னாள் தலைவரோ அல்லது தாமோ புனர்வாழ்வு அமைச்சராக இருந்த சத்தர்ப்பங்களில் அரசாங்கம் போதுமான நிதிகளை தமக்கு வழங்கவில்லை என்றும் எனவேதான் வடமாகாண அகதிகளுக்கான உதவிகளை பொதுமானளவு எம்மால் செய்ய முடியவில்லை என்றும் நியாயம் கூறினார்.

 அவரது காரணத்தினை மறுதலித்த நான் பின்வருமாறு சபையில் கேள்வி எழுப்பினேன். 

"ஒரு வாத்திற்காக அரசாங்கள் உங்களுக்கு போதுமான நிதியினை வழங்கவில்லை என வைத்துக் கொள்வோம். ஆனால், கடந்த பொதுத் தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தில் நீங்கள் போட்டியிட்டபோது உங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கென ஏறத்தாள ஐந்து கோடி வரையில் நீங்கள் செலவிட்டதாக ஒரு மதிப்பீடு சொல்கிறது. இந்தப் பணம் கண்டிப்பாக அரசாங்க நிதியாக இருக்க முடியாது. அப்படியென்றால், இரு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வி எழுகிறது. அக்கேளவியை ஒரு புறம் வைத்துவிட்டு இப்பாரிய தொகைப்பணம் உஙகள் தேர்தல் வெற்றிக்காக உங்களின் நலன் விரும்பிகளிடமிருந்து அன்பளிப்பாக கிடைத்தது என்றே எடுத்துக் கொள்வோம். அப்படியாயின்...உங்கள் தேர்தல் வெற்றிக்காக அரச நிதியல்லாத பல கோடிகளை உங்களால் திரட்ட முடியும் என்றால் உங்களை நம்பிக் காத்துக் கிடக்கும் இந்த வடமாகாண அகதிகளுக்காக உங்களாலும் உங்களது கட்சியானாலும் ஏன் இப்படிப்பட்ட நிதிகளை திரட்டி இம்மக்களின் அடிப்படை தேவைகளையாவது நிறைவு செய்து கொடுக்க முடியவில்லை" என நான் வினவினேன். 

இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் தினறியதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

இப்படியாக வடமாகாண மக்களுக்கு இழைக்கப்ப்பட்ட இன சுத்திகரிப்பு என்ற அநீதியும் அவர்கள் அனுபவித்த அகதி வாழ்க்கையின் அவலமும் முஸ்லிம் அரசியல் வாதிகளினால் தமது சொந்த அரசியல்ல இலாபத்திற்குரிய மூலதனமாக மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

இது போன்ற நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதினூடாக பழைய குரோதங்களை ஞாபகப்படுத்தி வடுக்களை மீண்டும் கிளறுவது எமது நோக்கமல்ல. விடுதலைப் புலிகள் வடமாகாண முஸ்லிம்களை ஒரிரு நாள் அவகாசத்தில் அவர்களின் அனைத்து உடமைகளையும் பறித்தெடுத்து அவர்களின் பூர்வீக மண்ணிலிருந்து விரட்டியடித்த சம்பவமானது எவ்வளவு கொடுமையானது என்பது நமக்குத் தெரியும். அந்தக் கொடுமை நிகழ்ந்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் முஸ்லீம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த, அவர்களின் உடமைகளைப் பாதுகாக்க அடுத்த சமூகங்களினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான சகோதரத்துவ உதவிகளையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் மன்னார் மாவட்ட கிறிஸ்தவ மதகுருமார்கள் முஸ்லீம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை இன்றும் மன்னார் மக்கள் நன்றியோடு நினைவு கூறுகின்றனர்.

யுத்தம் முடிவடைந்த 2009ம் ஆண்டு முதல் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்திற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் முழுமையான திட்டமிடலுடன் கூடிய மீள் குடியேற்ற புனர்வாழ்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தமது நோக்கத்திற்கும் வசதிக்கும் ஏற்றாற்போல் மீள்குடியேற்றத் திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். இது மன்னார் மாவட்டத்தில் புதிய புதிய முரன்பாடுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. எனவேதான், வடக்கு முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தினையும் புனர்வாழ்வு நடவடிக்கைகளையும் துரிதமாகவும் முழுமையாகவும் நிறைவு செய்வதற்கேற்ற ஒரு திட்டப்பாதை அவசியப்படுகிறது. இம்மாவட்டத்தின் அனைத்து சமூகங்களினது அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு திட்டமாகவும் அது அமையப் பெற வேண்டும். மத்திய அரசோ அல்லது மாகாண சபை நிருவாகமோ அல்லது ஏனைய தனியார் தொண்டு நிறுவனங்களோ எல்லோருமே இத்திட்டத்தின் பிரகாரம் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வார்களேயானால் இப்பிரச்சினையினை விரைவாக தீர்த்து வைக்க முடியும். 

எனவேதான் வடமாகாண முஸ்லீம்களின் மீள் குடியேற்ற விடயமானது தொடர்ந்தும் வெறும் அரசியல் விடயமாக நோக்கப்படாமல் ஒரு மனிதாபிமான, மனித நேய விடயமாக அது பார்க்கப்படல் வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே வடமாகாண மக்கள் பலவந்த வெளியேற்றத்தின் 24 வருட நிறைவு நாளில் நல்லிணக்கத்தைக் கருப்பொருளாகக் கொண்ட இந்த நிகழ்வினையும் நாம் ஏற்பாடு செய்திருக்கின்றோம்" என அவர் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: